அன்பு மனிதர் மாறுவதேன்





பால் பொருட்களைை ☝️விட்டுவிடுவதே உண்மையான சைவம் - நனிசைவம்




அன்பு மனிதர் மாறுவதேன்?


அன்புடை மனிதர் அனைவரும்தான்

அசைவம் உண்ணும் மனிதருமே,

உண்பவர் யாரும்  அரக்கர் அல்லர்!


அன்றாட வாழ்வில் 

அவரைக் கண்டால்

அவர் எல்லா மக்கள் சுற்றத்துடனும்,

அன்பும் பரிவும் துணை கொண்டு,

பாசம் மிக்க உணர்வோடு,

நெஞ்சம் நிறைந்த வாஞ்சையுடன்,

பழகும் தன்மையுடையவரே.


தானுண்ணல் அல்லால் பிறருக்கும், 

பகிரும் மேன்மை உடையோரே.

வாடும் மனிதர் யாவருக்கும்

ஓடிச்சென்று உடனுதவும் உத்தம குணம் படைத்தவரவர்.


அக்கப்போர்கள் இல்லாமல்

பக்கபலமாய் இருப்போரே,

குடும்பம் குழந்தை குட்டி யென்று வாழ

முயலும் நல்லோர்.

ஈன்ற தாய், தந்தையரை பேணிக்காக்கும் நல்மக்கள், இவர் அனைத்து மனிதர் போற்றி விரும்பும் 

மேன்மையுடைய மக்களே!


இருந்தும் ஊணை உண்ணுகிறார்,

இதன் காரணம் என்ன கேளுங்கள்...

ஆடு கோழி மீன் என்று, தானே கொன்று உண்ணச் சொன்னால்

தயக்கம் கொஞ்சம் காண்பிப்பார்,

வேறோர் கொன்று, கொண்டு கொடுத்தால்

வாங்கித்தானும் தின்று முடிப்பார்.


இவரிடம் நானும் ஒன்றே ஓன்று

இறைஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன்,

இயல்பாய் மனதில் பொங்கும் அன்பை

மனிதர் மட்டுமல்லாது, 

ஏனைய உயிர்கள் எல்லோருக்கும்

பரந்து விரிந்து கொடுங்களேன்!

அன்பில் அமைந்த  நல்வாழ்வு, 

நியாயம் தர்மம் நிறைந்த வாழ்வு, 

நனிசைவப் பெருவாழ்வை

வாழ அனவரும் வாருங்கள்,

அனைத்துயிரும் மகிழ்வோடு

தழைத்தோங்கிட வாருங்கள்!

🙏




                     ஏன்!?

                   🤔🧐🙄


நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடத்தில், எனக்கு உடம்பும்  மனதும் சரியில்லாமல் போய் படிக்க முடியாமல் போய்விட்டது. என் பெற்றோர்கள் என்னை தோழிகளுடன் இருக்கட்டும் என்று விடுதியில் கொண்டு விட்டார்கள், அப்படியாவது தொடர்ந்து படிப்பேன் என்ற நம்பிக்கையில். ஆனால் ஒவ்வொரு முறை கொண்டு விட்டாலும் இரண்டு நாட்களில் வீட்டில் வந்து நிற்பேன்-

'என்னால் படிக்க முடியவில்லை, நான் இனிமேல் கல்லூரிக்கு போக மாட்டேன்' என்று....

'என்னடா இது, பிரச்னையாயிருக்கிறது' என்று யோசித்து, எங்கள் குடும்ப மருத்துவரிடம் கேட்க, அவர் ஒரு 'சைகியாடிரிஸிட்'டிடம் காண்பிக்கலாம் என்று கூறி, 

மதுரையில் ஒரு நல்ல மருத்துவர் பெயரை சொன்னார். 


என் தந்தை என்னை மதுரைக்கு அழைத்துச் சென்று ஆலோசனை கேட்டார்.

அங்கு 'ஸைகியாட்டிரிஸ்ட்' என்னை பரிசோதனை செய்து எனக்கு 'அப்ஸெஸிவ் கம்பல்ஸிவ் நியோரிஸிஸ்' என்று முடிவெடுத்தார்.

அவரிடமிருந்த ஒரு  கவுன்ஸிலர், எனக்கு மனதை ஒரு நிலைப்படுத்தி படிப்பது எப்படி என்ற மனப் பயிற்சிகள் தினமும் சொல்லிக் கொடுத்தார்.


இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நான் அங்கு சென்று, பயிற்சி எடுத்துக்கொண்டேன். பத்துநாட்கள் போல ஒவ்வொரு முறையும் தங்க வேண்டி வரும். என் தந்தை பொறுமையாக அழைத்துச் சென்றார். 


பிறகு திரும்பி வந்து, எப்பொழுதும் போல் அன்றாட  வாழ்க்கை ஓடும் வீட்டிலேயே...   என் மனதிற்குள் நான் அந்தப் பயிற்சி செய்து கொண்டிருப்பேன். 


இதற்கிடையில் என் மாமன்மார்களில் ஒருவர் 'சரி இனி படிப்பு தான் இல்லை என்று ஆகி விட்டது, இவள் கல்லூரிக்கு செல்ல மாட்டாள், திருமணம் செய்து வைத்து விடலாம்'

என்ற எண்ணத்தில் மாப்பிள்ளைகளின் ஜாதகங்களைக் கொண்டு வர ஆரம்பித்தார். 

என் தந்தைக்குக் கோபம் வந்துவிட்டது, 'யாரும் எதுவும் கொண்டு வரக்கூடாது, அவள் ஒரு வருடம் கழித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிப்பாள், திருமணம் என்ற  என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று கூறிவிட்டார். அதன் பிறகுதான் அந்தப் பேச்சு நின்றது.

ஒரு சாதாரண விஷயம் போல் தான் நமக்கு இது தோன்றுகிறது. 

அந்தக் காலத்தில் 18 வயதான பெண் பிள்ளைக்குப் படிப்பு பிடிக்கவில்லை என்றால் திருமணம் செய்து விடலாம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட மனநிலை.


ஆனால் இந்தக் காலத்தில் ஒரு பெண் படிக்கவில்லை என்றால், அதுவும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து படிக்கமுடியவில்லை என்றால், முடிந்தவரை ஏதாவது செய்து தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் என்றுதான் கிட்டத்தட்ட அனைவரும் முயற்சிப்பார்கள்.


இதுவும் கூட சரி தவறு என்கிற ஒரு புரிதலை விட, சமூக நடைமுறையில் எது நடக்கிறதோ அதை ஏற்றுக்கொண்டு நடக்கும் பழக்கம் தான்.


பெரும்பாலான விஷயங்களில் நம் சுய சிந்தனை என்ன சொல்கிறதோ அதை நாம் கேட்பதில்லை, சுயசிந்தனையை வளர விடுவதுமில்லை.

ஊரோடு ஒத்துப் போகவேண்டும் என்ற மனோபாவமே மேலோங்கியிருக்கிறது.ஆனால் இதை எதிர்த்து என் தந்தை, தன் மனம் என்ன கூறியதோ,

அதன்படி செயல்பட்டதால்தான் நான் ஒரு மருத்துவராகி, என் சொந்தக் கால்களில் இன்றுவரை நிற்க முடிகிறது. 


நம்மூரிலும் நம் நாட்டிலும் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் மனித மனோபாவம் இது என்பது என் கருத்து.


இல்லை என்றால் ஐரோப்பிய நாடுகளில் சில நூறு வருடங்களுக்கு முன்பு கொஞ்சம் வித்தியாசமாக இருந்த பெண்களையெல்லாம் மாயக்காரி, சூனியக்காரி  என்று கூறி உயிருடன் எரித்த சம்பவங்கள் நடந்திருக்குமா? இன்று அது போன்ற பெண்களை ஹிஸ்டீரியா என்று 'டையக்னோஸ்' செய்கிறோம் அல்லது வேறு ஏதேனும் மனநோய் என்று வைத்தியம் செய்கிறோம். 

பின்னோக்கிப் பார்க்கையில்

அன்று செய்தது தவறு என்று என்று சுலபமாக நமக்கு இன்று புலப்படுகிறது. ஆனால் அந்தக் காலங்களில் அவர்களுக்கு அது சரி என்று பட்டிருக்கிறது.


இதே தான் இன்று நாம் அசைவ உணவுக்காக ஆடு கோழி வெட்டுவதும்,  மீன் பிடிப்பதும், மற்றும் வேறு வகை அசைவ உணவுகளுக்காக அந்த உயிர்களைக் கொல்வதும்.... இன்னும் பசுவிடமிருந்து அதன் குட்டிகளுக்கான பாலைப் பிடுங்கி, மனிதர்களாகிய நாம் சப்புக் கொட்டிக் கொண்டு டீ, காபி, சுடு பால், பாதாம் பால் என்றெல்லாம் குடிப்பதும்.... இவையெல்லாம் பழக்கவழக்கங்களில் ஊறிப் போய் விட்டதால் நாம் செய்வது தவறு என்பதே நமக்குத் தெரிவதில்லை.

சரி தவறு என்ற பாகுபாட்டை விட, பழகிவிட்ட காரணங்களால் பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம்.  பல  நூற்றாண்டுகளாக செய்துவருவதால் மட்டுமே ஒரு விஷயம் சரி என்றாகாது.


இந்த 'வழி வழியாக வந்த  வழக்கம்' என்ற தூசு தும்பைத் தட்டிவிட்டு, சுய சிந்தனை என்ற ஒளி வெளியே பாய நாம் அனுமதிக்கலாம்.


பார்க்கப்போனால் இந்த சுயசிந்தனையும் இது போல தான், செய்து பழகிவிட்டால், அதுவும் இயல்பாகிவிடும். பிறகு பல காரியங்களில் முடிவெடுப்பது சவுகரியமாக இருக்கும், எடுக்கும் முடிவும் சரியாக இருக்கும்!









Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி