வளர்ப்பு நாய்

 



ஆப்பிரிக்கக் கிளி 👆


வளர்ப்பு நாய்

சுதந்திரமாக சுற்றித்திரிந்த விலங்கினை வளைத்து வீட்டில் வைத்து, 

செல்லம் கொடுத்தே வளர்த்தாலும்,

அடைத்து வைத்தது வைத்ததுதான், 

தொலைத்த சுதந்திரம் தொலைத்ததுதான்!


வாழ்வின் மூச்சு சுதந்திரமே,  அதில்லையெனில் அது வாழ்வே இல்லை 

சாவுக்கிணை ஆகிடுமே!


மனதின் சுமைகள் அனைத்தையும் செல்லப்பிராணி குறைத்திடும்....

என்ற எண்ணம் பரவிப் போனதாலே,

செல்லப்பிராணி சிக்கிக்கொண்டது 

சுயநலமான மனிதனிடம்!


பழகிப்போனது பரவாயில்லை

என எண்ணியெடுத்து வளர்த்தாலும்,

வளர்க்கும் நாயினை எடுக்கும் இடம்

தெருவாயிருத்தல் 

நலமன்றோ?


மேலைநாட்டு இனமென்று வானிபம் செய்யும் வணிகரிடம்,

வாங்கும் வழக்கம் வேண்டாமே!

காரணம் யாதென கேட்போருக்கு,

கூறுகிறேன் கேளுங்கள்,

குட்டியை ஈனும் தாயானது

அடையும் துன்பம் அளவில்லாதது.....

இடைவெளியின்றிப் பெறவேண்டும் 

அந்தத் தாயும் குட்டிகளை,

ஈனிய குட்டியைத் தரவேண்டும் பால் மறக்குமுன்னாலே,

நம்மைப்போன்ற மனிதரிடம்,

வணிகர் பணம் சேர்த்திடவே!


ஆப்பிரிக்கக் கிளி


விலங்காக இருந்தாலும் சரி பறவையாய் இருந்தாலும் சரி செல்லப்பிராணி வளர்ப்பு என்ற பழக்கமே தவறு

என்று சில வருடங்களாக  எனக்குத் தோன்றுகிறது.  வாழ்வின் இறுதியில்தான் ஏதோ கொஞ்சம் எண்ணங்கள் சரியான பாதையில் போகின்றன.....


ஒரு 15 வருடங்கள் முன்னால்,

நாங்களும் இரண்டு நாய்கள் வைத்திருந்தோம்.  அவை இரண்டுமே இறந்து விட்டன. ஆனால் நல்ல வேளை அவை இருந்தபோது, சர்வ சுதந்திரமாகத்தான் எங்கள் வீட்டில் சுற்றித்திரிந்தன.

என்றுமே கட்டிவைத்தது கிடையாது.

நாம் செல்லப் பிராணிகளை வளர்க்கும் பழக்கம் இருக்கிறது என்றால் ...... மேலை நாட்டு நாய் தான் வேண்டும் என்று வாங்குகிறோம்.

அதேபோல் வெளிநாட்டு பறவைகளையும் (சட்டத்துக்குப் புறம்பாக) பிடித்து வந்து விற்கிறார்கள் அந்தப் பறவைக்கும் நம்ம ஊர் சீதோஷ்ண நிலைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை, உணவுப் பழக்கமும் வேறு.

இவை எல்லாவற்றையும் மீறி மிக மிகக் கொடுமையானது தனிமை உணர்வு....

அது தன் நாட்டையும் தன் சமூகத்தையும் விட்டு வேறு ஏதோ சம்பந்தம் இல்லாத ஒரு நாட்டுக்குத் தனியாக வந்து வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்பது பெரிய தண்டனை போன்றது அந்தப் பறவைக்கு. நம்மைக் கொண்டு அந்தமான் சிறையில் அந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் அடைத்தது போல தான் இதுவும்... அதைவிட இதில் கொடுமை அதிகம். அதிலாவது நம் நாட்டு சுதந்திரத்துக்காக போராடினோம் சிறை வந்தோம் என்ற மனதிருப்தி இருந்தது..... கிட்டத்தட்ட நாமே அறிந்து தேடிக் கொண்ட 'தண்டனை' என்று கூட சொல்லலாம்.


ஆப்பிரிக்க கண்டத்துக் கிளி ஒன்று, சாம்பல் நிறம், மிக  நுண்ணிய அறிவு படைத்த கிளி அது.... சில கடைகளிலும் பொது இடங்களிலும் கூண்டில் அடைத்து வளர்ப்பதை நான் பார்த்திருக்கிறேன்.


அது சில நாட்கள் கழித்து தன் சிறகுகளை தானே பறிக்கத் தொடங்கிவிடும்.....இதற்கு காரணம் தனிமையினால் வந்த மனச்சிதைவு என்று பறவை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.   


சில உணவு கடைகளில் இது போன்ற வெளிநாட்டு பறவைகளை முன் வாசலில் வைத்து கூண்டில் அடைத்து உணவிட்டு வளர்க்கிறார்கள்.  இந்த பறவையைப் பார்க்க

நிறைய மக்கள் தங்கள் கடைக்கு வந்தால்

வியாபாரம் பெருகும் என்ற காரணத்தினால்..... 

ஒரு காலத்தில் அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது கோவையில் ஒரு பிரியாணி கடைக்கு நானும் என் மகனும் சென்றோம் அருமையாக செய்திருந்தார்கள்.

மிகுந்த திருப்தியுடன் உணவருந்திவிட்டு வெளியே வந்து பீடா போட்டுக் கொண்டு நின்ற போது திடீரென்று ஒரு இனிமையான பேச்சுக் குரல் கேட்டது..... எங்கிருந்து என்று பார்த்தால் பக்கவாட்டில் உள்ள இடத்தில் ஒரு மூன்றடிக்கு நாலடி கூண்டில் இருந்த பறவை எங்களை அழைத்தது.......அதைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது... இதைவிட கொடுமை இருக்க முடியுமா?  ஏதோ ஒரு நாட்டில் பிறந்து வளர்ந்து, பறந்து  திரிந்து, வாழ்ந்து கொண்டிருந்ததைக் கொண்டு வந்து, கூண்டில் அடைத்து இவர் கடையில் முன்னாடி வைத்திருக்கிறார்.

அந்தப் பறவையை பார்த்ததிலிருந்து நான் அந்த கடைக்கு செல்வதில்லை..'இதுபோன்ற கொடுமை செய்யும் கடையில் நாம் உணவு உண்ண வேண்டுமா' என்ற ஒரு எண்ணத்தினால்.....





Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி