மனம் மாறுதோ...


 
பட்டாம்பூச்சியின் உறக்கம் 👆



மனம் மாறுதோ...

என்னென்னவோ எண்ணங்கள்

ஏதேதோ சிந்தனைகள்.... அனைத்தும் சிந்தும் நிதமும் வெளியில்

ஊடகத்தில் அடுக்குமொழியில்.......

சிந்திய எண்ணம் எங்கு செல்லும்?

வெளியே சென்று சிலரை விளிக்கும்

என்னைப் பாரென்று கூவியழைக்கும்....


சட்டென மனம் மாறியது சிந்தும் பழக்கம் நின்றது!

எண்ணம் சிந்தை இரண்டுமிங்கே

நமக்கே பல முறை மாறும் பொழுது,

பார் என் எண்ணம் இதுவே இன்றென

பரந்து சொல்வதில் அர்த்தம் உளதோ?🤔


நிலையென்றெதுவும் இல்லையிங்கு,

நிதமும் மாறும் பூமியில்

வாழும் வாழ்வும் மாயமே...


கண்ணில் காணும் கையில் கிடக்கும் இந்த நாளை, 

இனிதே கழித்தால் என்ன குறை!?


மகனின் மொழி


முகநூலிலும் வலைப்பதிவிலும் மனதில் தோன்றும் எண்ணங்களை நான் பகிர்வது என் மகன்கள் இருவருக்கும் தெரியும். ஆனால் இருவரும் அவற்றைப் படிப்பதில்லை.... தமிழ் படித்தால் ஒருவனுக்கு கண் வலிக்கிறது என்றும் இன்னொருவனுக்கு முதுகு வலிக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

எங்களுடைய தவறுதான் இது, சிறு வயதிலேயே நிறைய தமிழ் படிக்க வைத்து, சரளமாக்கியிருக்க வேண்டும்.  அசட்டையாக விட்டுவிட்டோம், அது ஒருபுறமிருக்க இளையவன் கூறிய ஒரு கருத்து என் மனதில் பதிந்து விட்டது, அவன் கூறியதைத் தவறென்றும் சொல்லமுடியாது......


'சும்மா இப்படி 'அட்வைஸ்' பண்ணிட்டு இருக்கீங்க,  மனிதனைவிட விலங்கு நல்லது,அனிமல் க்ரூயல்டி, அது இதுன்னு....இதெல்லாம் யாருக்கும் தெரியாதா என்ன? தெரியாமத்தான் பண்ணிட்டு இருக்காங்களா?எல்லாருக்கும் தெரிந்த விஷயத்தை எதுக்கு நீங்க சும்மா சொல்லிட்டு இருக்கீங்க?

நீங்க சொன்னா உடனே எல்லாம் மாறி விடுமா?'

என்பான். அவன் சொல்வதெல்லாம் உண்மை தான், இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.


என்னுடைய பதிவுகள் பலதும் விலங்குகளுடைய உரிமைகள் பற்றியும் மனிதனிடம் அவை படும் துன்பங்களை பற்றியும் தானிருக்கும்.பல நேரங்களில் மனிதனின் பழக்கங்களைகக் கிண்டல் செய்வது போல் இருக்கும்.

அதில் ஒன்றைப் படித்துப் பார்த்த என்‌மகன் கூறியது இது: 


//இலக்கியத்தின் முதல் அளவுகோல் படைப்பாற்றலே. இன்றைய தகவல் தொழில்நுற்ப காலத்தில் கருத்துக்கள் ஏராலம். அதிலும் மநிதனை கேலி செய்வது பழங்காலதுப் பொழுதுபோக்கு. நீங்கல் சொல்வது உன்மையாக இருந்தாலும் புதூமையாக இல்லை. மன்னிக்கவும்.//


(அவன் எதற்கு மன்னிப்பு கோரினான் என்று தெரியவில்லை, ஆனால் இதைப் படிக்கும் மக்கள் அவனுடைய எழுத்து ப்பிழைகளைப் பொறுத்து மன்னித்தருள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.)


இதிலொரு விஷயம்,

நான் என் எண்ணமும் கருத்தும் பகிர வேண்டுகிறேனே ஒழிய, இலக்கிய்ம் என்கிற வட்டத்துக்குள் நுழைய முற்படவில்லை.....


ஆகையால் ஆங்கிலத்தில் கூறுவது போலே,...it is

fine to  go ahead I guess.

ஊதுற சங்கை ஊதி கொண்டே இருக்க வேண்டியது நம்ம வேலை!





Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

மாட்டுப் பொங்கல்

வாசலில் மண்புழு

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

பக்திப் படம்

🥼👩‍🎓 🐓