நனிசைவம்

 நனிசைவம் 

🥥😃🥜


வாழ்வின் தர்மம் நனிசைவம் 

விடுதலை அளித்திடும் நனி சைவம்....

விலங்கு பறவை மீன் என்று வாழும் யாவையும் வாழியவே

நமது உணவு தாவரமே!

காலை எழுந்ததும் கடுங்காப்பி,

காப்பியில் வெல்லம் போட்டுக்கலாம்.

காலைக்காப்பியில் கண்டிப்பாகப் 

பாலும் எனக்குத் தேவையென்று, 

பதறிக் கூறும் மனிதருக்கு, 

தயாராயிருக்கு தாவரப்பால்...


காப்பி குடித்து நடைப்பயிற்சி,

குளித்து முடித்து சிற்றுண்டி..

மல்லிப் பூவாய் இட்டிலி இருக்க

மணக்கும் சாம்பார் அருகிலிருக்கு,

வெள்ளை நிறத்தில் தேங்காய் சட்டினி,

சிவந்த மிளகாய்ப்பொடி யருகில்,

பொடிமேல் எண்ணெய்- தேங்காய்எண்ணெய்,

கலந்துண்ணலாம் அனைத்தும் மனம்போல்...


மதியம் சூடாய் சோறுண்டு மணக்கும் மொச்சைப் பருப்புண்டு,

பருப்பின் நடுவில் நல்லெண்ணெய் 

செக்கில் ஆட்டிய நல்லெண்ணை,

நயமாய் விட்டு நன்றாய்ப் பிசைந்து,

கத்தரிக்காயும் முருங்கைக்காயும் 

போட்டு வைத்த புளிக்குழம்பு 

பக்கம் வைத்துத் தொட்டுக்கலாம்,

மணக்க மணக்க சாப்பிடலாம்.....

பீர்க்கங்காயில் பொரியல் செய்து 

தேங்காய் துருவி அதன்மேல் தூவி, 

ரசத்தை ஊற்றிக் கலந்த சோற்றில், 

கலந்துண்ணலாம் ரஸத்துடனே.

பாசிப்பருப்புப் பாயாசம்,  

வெல்லம் போட்டு கொதிக்க வைத்து

தேங்காய் பாலைக் கலந்து செய்யும்

அமிர்தமான பாயாசம், 

அதில்  பாதாம் முந்திரி

சேர்ந்திருந்தால் அதிகமான சந்தோசம்,

கை நிறையக் குவித்து வாங்கி  

மனம் நிறைய குடித்துவிட்டு,

தயிர் சோறின்றி முடியாதென்று

தவிக்கும் வாய்க்கு  செய்திருக்கு,

தாவரப் பாலில் உரைந்த தயிரும்

நாவில் ஊறும் எலுமிச்சையும்.....


குட்டித் தூக்கம் போட்ட பின்னர்,

வெங்காயத்தை வெட்டிப் போட்டு, 

பகோடாவை சுட்டுப்போட்டு,

சுக்கு மல்லி வெல்லம் சேர்த்து 

சுடச்சுடத் தேநீர் வடித்தெடுத்து,

பகோடாவைக் கடித்துக்கொண்டு

கொதிக்கும் தேனீர் குடித்துக்கொண்டு,

தூக்கக் கலக்கம் கலைக்கலாம்!


யாராயிருப்பினும் எவராயிருப்பினும்

ராவில் உறங்கப் போகும் முன்னர்

உணவைக் குறைவாய் உண்ணல் நலம், வாழைப்பழம் இரண்டுரித்து

நன்றாய் நலமாய் உண்டுவிட்டு, 

தண்ணீர் குடித்துப் பிறகு படுத்து, 

உறங்கப்போதல் சுகமன்றோ?



நனிசைவம்


நான் சில வருடங்களாக சைவ உணவுக்கு மாறியிருந்தேன். ஏற்கனவே பல வருடங்களாக தேன் உண்பதில்லை.

சமீபத்தில் பால் மற்றும் முட்டை ஆகியவற்றையும் துறந்து நனிசைவமாகி விட்டேன்.

உடையில் பட்டு கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக உபயோகிப்பதில்லை.

என் மகன் திருமணத்திற்கு இரண்டு நூல் புடவைகள் தான் வாங்கியிருந்தேன் அவற்றைத்தான் உடுத்தினேன்.

இதையெல்லாம் கேட்போருக்கு 'யாரப்பா இது. சரியான சாமியாரினி' என்று நினைக்கத் தோன்றும்... உண்மை அதுவல்ல..😊🤭

மிகவும் 'ஜாலி'யான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான்...நன்றாக சாப்பிடுவேன், நன்றாக தூங்குவேன், கதைப்புத்தகம் நிறைய படிப்பேன், சினிமா நிறைய பார்ப்பேன், தோழிகளுடன் உல்லாசப் பயணம் செல்லுவேன், மகன்கள் தயவில் டிவியில் விரும்பிய ஆங்கிலப்படங்கள்(netflix) பார்த்துக்களிப்பேன், சினிமா தியேட்டருக்கு (தோழிகளுடன் தான்) சென்று தமிழ் படங்கள் நிறையப் பார்ப்பேன்.

ஹோட்டலுக்குச் சென்று விதவிதமாக தோசை  சாப்பிடுவேன்.

சைக்கிளில் உல்லாசமாகக் கடைக்கு சென்று வருவேன்.....


சில நாட்களுக்கு முன்பு என் வீட்டில் 'சிக்கன்' செய்து என் கணவரும் இரு மகன்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

என்னையும் சாப்பிடச் சொன்னார்கள். வேண்டாம் என்று கூறினேன், என் கணவர் உடனே 'எங்களுக்கு எல்லாம் கில்டியா இருக்கில்ல, நீ பாட்டுக்கு இந்த மாதிரி பண்ணா?'😐

என்றார்.

'உங்களுக்கு கில்ட்டியா இருந்தா சாப்பிடாதீங்க'! என்று நான் சிரித்தேன். 😁😁

என் மகன் 'இல்ல நாங்க சாப்பிடறதைப் பத்தியில்லே... உங்களுக்குப் புடிக்கும், ஆனாலும் நீங்க அதை சாப்பிடாம இருக்கிறப்போ, நாங்க மட்டும் சாப்பிடறது கில்டியா இருக்காமா...அதச்சொல்றாரு' என்று விளக்கினான். 

'அதுக்கென்ன பண்றது அவனவனுக்கு நியாயம்ன்னு தோன்றதச் செய்ய வேண்டியதுதான்' என்று நான் சொன்னேன்.


ஆங்கிலத்தில் 'வீகனிஸம்' என்று கூறப்படும் வாழ்க்கை முறையைப் பின்பற்றலாம் என்று பலர் நினைத்தாலும், அது மிகவும் கடினம், எதுவும் உண்ண முடியாது, விரும்புவதை உடுத்த முடியாது என்ற ஒரு தவறான எண்ணம் உலவுகிறது. 

பார்க்கப்போனால் அசைவத்தை விட மிகவும் 'வெரைட்டியாக' உணவு செய்து உண்டு மகிழலாம் நனிசைவத்தில்.


நனிசைவம் என்பது உணவு முறை மட்டும் அல்ல.

அது ஒரு வாழ்க்கை முறை- விலங்குகள் மூலம் பெரும் எந்தப் பொருளையும்

எதற்கும் பயன் படுத்தாமல் வாழ்வது.காரணம் உலகில் உள்ள விலங்குகள் அனைத்தும் மனிதனைப் போலவே இங்கு வாழ வந்தவை, மனிதனுக்காக சாக வந்தவை அல்ல.


உணவில் அசைவம், முட்டை, பால், தேன், சேர்க்காமல், உடையில் பட்டுத்துணி,உல்லன் துணி,  மற்றும் தோல் ஆடை, தோல் பொருட்கள் தவிர்த்து,

விலங்கின் மீது சோதனை செய்த குளிக்கும் சோப்பு மற்றும் ஷாம்பு, மருந்துகள், ஒப்பனைப்பொருட்தள் ஆகியவற்றை உபயோகிக்காமல் இருப்பது.... 


கேட்டவுடன் கொஞ்சம் தயக்கமாக இருக்கும், பிறகு எப்படித்தான் இந்த உலகில் வாழ்வது என்று....

ஆனால் முதலடி எடுத்து வைத்து, முயன்று பார்த்தோமென்றால், அசைவ உணவைவிடவும், சாதாரண சைவ உணவை விடவும், மிக 'வெரைட்டி' கிடைக்கிறது இதில்.உடையிலும் பட்டை விட  விலை குறைவாக கிடைக்கும் செயற்கை பட்டுத் துணிகள் பட்டு போலவே அழகாகவும் இருக்கின்றன.


சைவர்களுக்குப் பசும்பாலும், அதிலிருந்து வரும் ஏனைய பொருட்களும் மட்டும்தான் உண்டு.

நனிசைவத்தில் பலவிதமான தாவிரப் பால்கள் இருக்கின்றன, வேர்க்கடலை பால், முந்திரி பால், பாதாம் பால் மற்றும் 'ஓட்ஸ்'ஸிலிருந்து எடுத்த பால்...... 

விதவிதமான எண்ணைகள் இருக்கின்றன.... தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் போன்றவை.

வெண்ணை வகையறாவில் வேர்க்கடலை வெண்ணெய் முந்திரி வெண்ணெய் பாதாம் வெண்ணெய் போன்றவை இருக்கின்றன, வீட்டிலேயே செய்துகொள்ளலாம் மலிவாக. இப்பொழுது சில காலமாக கடைகளிலும் கிடைக்கின்றன, 'வீகன்' பால், 'வீகன்' வெண்ணை மற்றும் 'வீகன்' நெய் என்று.....


மிக மலிவாகக்கிடைக்கும் வேர்கடலையில் இருந்து எடுக்கும் பாலில் செய்த தயிர் பசும்பால் தயிரைவிடக் கெட்டியாக, இரண்டு நாள் சாப்பிட்டுப் பழகினால் பிறகு பசும்பால் தயிர் கூட பிடிக்காது என்று கூறுமளவிற்கு சுவையாக இருக்கும். அதுவும் இயற்கை முறையில் வேளாண் செய்து எடுத்த அரிசி சாதத்துடன் ஒருமுறை என் தோழி வீட்டில் நான் உண்டேன். அதன்பிறகு எனக்கு பசுந்தயிர் பிடிக்காமல் போய்விட்டது என்று சொல்லலாம்....


இந்த வாழ்க்கை முறை, தற்கால 'ஃபேஷனோ' 'லேட்டஸ்ட் ட்ரெண்டோ' ஆங்கிலத்தில் செல்வதைப் போல் 'ஃபேடோ' கிடையாது.

இது ஒரு நியாயத்தின்பாலும் தர்மத்தின்பாலும் மேற்கொண்ட வாழ்வுமுறை...சொல்லப் போனால் ஒரு ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பெரும்பாலானோர் வாழ்ந்த வாழ்க்கை கிட்டத்தட்ட நனிசைவ வாழ்வுதான். 


அந்தக் காலத்தில் விதவை உடன்கட்டை ஏறல்,மற்றும் குழந்தைத் திருமணம் ஆகியவற்றை நிறுத்த பலர் முயன்றதால், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் எவ்வாறு ஓரளவாவது குறைந்ததோ,அதேபோல்  இன்னொரு வாயில்லா ஜீவனுக்கு இழைக்கப்படும் தீங்கைப்பற்றிய  விழிப்புணர்வால் வந்ததே நனிசைவ வாழ்வு முறை.

பெண்களால் பேச முடிந்து, ஆனாலும் பேசாமடந்தை களாக இருந்தோம். விலங்குகள் நம்முடைய மொழியில் பேசத்தெரியாமல், பேசாமடந்தை களாக இருக்கின்றன.


பால் ஒரு தூய்மையான பானம் என்பதும் தயிர் சாதம் ஆரோக்கியமான உணவு என்பதும் ஒரு மாயை.

பசும்பால், தன்னுடைய கன்றின் தேவைக்காகப் பசுவின் உடம்பில் சுரக்கும் உணவு.....மனிதக் குழந்தைகளுக்கு சுரக்கும் தாய்ப்பால் போலவேதான் இதுவும் கன்றுக்குட்டிக்கு சுரக்கும் தாய்ப்பால். பசும்பாலில் நம் ஆரோக்கியத்திற்கு இடமே இல்லை.பாலில் உள்ள 'Casein'க்கு ஒவ்வாமை வருவதால் பலருக்கு வயிற்றுக்குள் ஏற்படும் முறைச்சலும், ஒரு அசௌகரியமான உணர்வும் வருகிறது. இதை நாம் இன்னும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

இன்னொரு உயிரினத்தின் குழந்தைக்காக சுரந்த பாலை பிடுங்கிக் குடிக்கும் ஒரே உயிரினம் உலகில் மனிதன் மட்டுந்தான்...😬😱


'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்று கூறும் நாம் தான், பல வருடங்களாக பால் கொடுத்த அந்த மாடு பால் வற்றி போனதும், அதை அடிமாடாக்கி பல காத தூரம் லாரியில் நீரும் உணவும் இல்லாமல் அழைத்துச் சென்று, அடித்துக் கொல்கிறோம், நமக்கு பால் கொடுத்த நன்றிக்காக!


இதைவிட கொடுமைதான் முட்டையின் கதையும். 

பிறந்ததிலிருந்து இறக்கும் வரை நிற்க மட்டுமே முடிந்த ஒரு கூண்டில் முட்டையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். முட்டையிடும் காலம் முடிந்தவுடன் கோழியை அறுத்துக் கொன்று விடுவார்கள். 


கறிக்கோழியும் கிட்டத்தட்ட இதே கதைதான். மூன்று மாதங்கள் வரைமட்டுமே வைத்திருப்பார்கள் அந்தக் கோழியை, அதுவும் கூண்டில் அடைத்து தான்.

அந்தக் கோழிகளைக் கொழுக்க வைக்க அதற்கென்று செய்த உணவை உண்டு, செயற்கை முறையில் மிக மிகக் குறுகிய காலத்தில் குண்டாக செய்யப்பட்டு, அவற்றால் நிமிர்ந்து நிற்க முடியாத சிறு கூண்டுகளில் அடைத்து லாரிகளில் வெகுதூரம் சென்று, பிறகு  இரண்டு சக்கர வாகனங்களில் தலைகீழாகத் தொங்கி, கடைக்குச் சென்று அறுபட்டு சாகவேண்டும்.


அந்த காலத்தில் இருந்ததைப் போல் தோட்டத்திலும் வீட்டிலும் ஒரு பசுமாடு, சுற்றித்திரிந்த கோழி சேவல் என்பதெல்லாம் இன்று இல்லை, அதுபோல் வேண்டுமென்றால் கிராமப்புறங்களில் யாராவது சொந்தமாக சிலர் செய்துகொள்கிறார்கள்.(ஆனால் அதையும் நியாயம் என்று கூற முடியாது, கண்டிப்பாக அநியாயம்தான்).


பெரும்பாலான நகரவாசிகள் மற்றும் கிராமத்து வாசிகளும் இந்தப் பிராய்லர் கோழிகளையே உண்கிறார்கள். இன்று நடக்கும் 'ஃபேக்டரி பார்மிங்'  மிகக் கொடுமையான ஒரு முறை.

இதன் மூலம் தான் நமக்குக் அசைவ உணவு மட்டும் முட்டை எல்லாம் வருகின்றன. 


இதை அநியாயம் என்று உணர்ந்து பால் பொருட்கள், முட்டை, மற்றும் அசைவ உணவு வகைகள், மற்றும் விலங்கிடம் சோதனை சேர்ந்த ஒப்பனை பொருட்கள் ஆகிய அனைத்தையும் துறந்து வாழ்வதே, குற்ற உணர்வு இல்லாத நியாயமான, மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையும் கூட.இதனாலேயே எனக்கு நனிசைவ வாழ்வென்பது விடுதலை அடைந்த வாழ்வு போல் தோன்றுகிறது, புதியதாக ஏதோ ஒரு சுதந்திரம் கிடைத்தது போல் நான் உணர்கிறேன்.


'நனிசைவம்' அல்லது 'veganism' என்பது ஒரு பெயர்தான். 

பெயரைப்பற்றி ரொம்ப யோசனை செய்து, 'cult', அது இது என்று நாம் மனதைக் குழப்பிக் கொள்ளாமல், நியாயமான வாழ்க்கை முறைக்குத் திரும்புகிறோம் என்பதைப் புரிந்துகொண்டால் தெளிவு பிறக்கும்!









Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி