கூடாரத்தில் காஃபி



 கூடாரத்தில் காஃபி


மருத்துவமனை  முன்னாலே

அடர்ந்த சோலை பின்னாலே

வீடிருக்கு நடுவாலே!

நோயைநாடி 

நோய்முதல் நாடி

மெய்ஞானம் நாடும்

மருத்துவ ஜோடி,

இளங்கோ வடிவைத் தேடித்தேடி,

பலரும் வருவர் நாடியிங்கே!


இல்லம் பின்னே

சோலை வனம்,

வனத்திலொரு கூடாரம்! 

கூடாரம் கீழே மேசையிருக்க

மேசைக்கடியிலே போண்டா!

மேசை மேலே தட்டிருக்க தட்டுக்குள்ளே பஜ்ஜி சிரிக்க,

சிரிப்புக்கருகில் சட்னி!

உண்ணும் பஜ்ஜி எத்தனையென்று, எண்ணியவாறு தட்டிப்பறிக்கும்

அக்கறையான ஆளில்லாமல்....

கோப்பைக் காப்பி கொதிக்கக் கொதிக்க

சூடு பறக்க குடிக்க குடிக்க

ஆகா இதுவே சொர்க்கம் என்று

கள்ள மனமது எண்ணுது இன்று!


நோயாளி என்றால் நோய் தனித்து 

நண்பர் என்றால் விருந்தளித்து,

தலைவலி என்றால் காப்பி கொடுத்து

வேண்டாமென்றால் தேநீர் கொடுத்து,

உடன் அமர்ந்து பேசி சிரித்து...

பை நிறையப் பலகாரம்,

பிள்ளைக்கென்று பிரியத்துடன் கொடுத்தனுப்பும் வடிவம்மா!

விருப்பத்துடன் புகைப்படம் எடுத்துத் தள்ளும் இளங்கோவர்!

வெள்ளைக்கோவில் வட்டாரத்தில்

இவரினும் உண்டோ இனியவர் இருவர்?



இவரன்றோ மருத்துவர் 🤺


கொரோனா கால அடைப்பை அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி வரும் இந்த வேளையில், என்னுடைய அத்தையின் கணவர்,மாமா அவர்கள் திடீரென காலமாகி விட்டதால் வெள்ளகோவில் சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


இரங்கல் முடிந்து திரும்பி வரும் பொழுது என்னுடைய தோழி டாக்டர் வடிவு அவர்களைப் பார்க்கலாம் என்று அவர்கள் இல்லத்திற்கு நான் சென்றேன். 

அவரும் அவரது கணவர் டாக்டர் இளங்கோ அவர்களும் வெள்ளகோவிலில் பல வருடங்களாக மருத்துவ தொழில் செய்து வருகிறார்கள்.


உரையாடலின் இடையே வடிவு கூறிய விஷயம் என் மனதில் ஆழப் பதிந்தது. 

சமீப காலங்களில், அடைப்பு காரணமாக நோயாளிகள்

யாரும் மருத்துவமனைக்கு 

தாங்களாகவே வர வேண்டாம் என்றும், தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டு என்ன பிரச்சனை என்று கூறுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிறகு நோயாளி கூறும் விஷயங்களை வைத்து அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதா இல்லையா என்று முடிவு செய்து தேவைப்பட்டால் மட்டுமே நேரில் வரச்சொல்லி பார்த்து வைத்தியம் செய்கிறார்.

இல்லாவிட்டால் தொலைபேசி மூலமே அவர்களுக்கு சில வழிமுறைகளை சொல்லிக் கொடுத்து விடுகிறார். 


இந்த முறை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அறையில் அமர்ந்துகொண்டு நோயாளிகளை வாவா என்று எதிர் பார்த்துக் கொண்டிருப்பதை விட உண்மையான நோய் இருப்போரை மட்டும் வரச் சொல்லிப் பார்ப்பது மனதுக்கு திருப்தி அளிக்கிறது என்றும் கூறினார்.


எனக்கு சட்டென்று உறைத்தது இதுவல்லவோ உண்மையான மருத்துவத் தொழில் என்று..... நோய் இருப்பவர்கள் தாங்களாகவே மருத்துவரிடம் வந்துவிடுவார்கள் நாம்  அழைக்க வேண்டிய அவசியமே இல்லை! 


மாறாக முகாம் என்றும் விளம்பரம் என்றும் கூவிக்கூவி, வாருங்கள் வாருங்கள் செக்கப் செய்கிறோம், நோய்களை கண்டுபிடிக்கிறோம் என்று கூறுவது நல்லதொரு மருத்துவத் தொழிலாக என் மனதுக்குப் படவில்லை......














Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி