கலாச்சாரமிது...

கலாச்சாரமிது...

பல வருடங்களுக்கு முன்பு  நான் விடாமல் வாரப் பத்திரிக்கைகள் நிறைய படித்துக் கொண்டிருந்த காலத்தில்....எந்தப் பத்திரிக்கை என்று ஞாபகம் இல்லை, ஏதோ ஒன்றில் ஒருவர்  அமெரிக்கா  போன்ற மேலை நாடுகளுக்குச் சென்று பார்த்தபோது அங்கு வசிக்கும் தமிழர்கள் நமது  பண்பாட்டையும் கலாச்சாரத்தையும், விடாமல் பாதுகாக்கின்றனர், எல்லா தமிழ் பண்டிகைகளையும் கொண்டாடுகின்றனர், பட்டுப்பாவாடை அணிகிறார்கள் குழந்தைகள், தாவணி கட்டுகிறார்கள், பரத நாட்டியம் ஆடுகிறார்கள், போன்ற பல விஷயங்களை, அவையெல்லாம் இங்கில்லையே என்ற ஒரு ஏக்கத்துடனும், மேலை நாடுகளில் இருக்கின்றன என்றதொரு மகிழ்வுடனும் எழுதியிருந்தார் .... எழுதியவர் பெயரும் ஞாபகம் இல்லை!

இந்தச் செய்தி நன்றாக இருப்பது போல்தான் தோன்றியது. பிறகு கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், இதில் திருப்திப்பட பெரிதாக எதுவும் இல்லை என்று பட்டது.
ஏனென்றால் கலாச்சாரம் என்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருக்கும் பழக்கவழக்கங்கள். சில நாட்கள் கழித்து மெதுவாக மாறி, மருவி, திரிந்து அவை அந்த இடத்திலேயே வேறு பழக்கங்களாக மாறும்.... இன்னும் சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பழக்கங்களும் மாறிவிடும். இது காலங்காலமாக மனித சமூக வரலாற்றின் இயற்கை நியதி.
நம் குடும்பங்களிலேயே ஒரு இருநூறு வருடங்களுக்கு முன்பு இருந்த பழக்கங்கள் நூறு வருடங்களுக்கு முன்பு இல்லை, நூறு வருடங்களுக்கு முன்பு இருந்த பழக்கங்கள் இன்று இல்லை.

இவ்வளவுதான்  கலாச்சாரத்துக்கு மதிப்பீடு... அதாவது ஒரு சில வருடங்கள்!
கடந்த ஒரு 200 வருடங்களாக தான் நாம், நம்ம ஊர் பெண்கள், புடவை கட்டுகிறோம்.
அதற்கு நூறு வருடங்களுக்கு முன்பு எந்த மாதிரி ஆடை என்று இன்னும் ஆராய்ச்சி செய்து நான் அறிந்து கொள்ளவில்லை ஆனால் கண்டிப்பாக இன்றையது போன்ற புடவையாக இருந்திருக்காது என்பது என் எண்ணம்.
எனக்குத் தெரிந்தே என்னுடைய ஆத்தா (தந்தை வழிப் பாட்டி) ரவிக்கை அணிந்ததில்லை.
எட்டு கஜப் புடவையைப் பின் கொசுவம் வைத்து  கட்டியிருப்பார்.
இன்று நினைத்து பார்த்தால் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
சதா சர்வகாலமும் அவர் தன்னை மறைத்துக் கொள்ள எவ்வளவோ சிரமப்பட்டு இருப்பார் சிறுவயது முதலே.... இப்பழக்கம் மாறி ரவிக்கையுடன் புடவை வந்துவிட்டது.
இதுவும் அவ்வளவு ஒன்றும் சவுகரியமான உடை  இல்லை என்பது வேலை பார்க்கும் பெண்களுக்கு தெரியும்.
நான் கண் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த காலங்களில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தச் செல்வோம்.அங்கு அதை நடத்துபவர்கள, முகாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, நோயாளிகளையும் எங்களையும் பல கோணங்களிலிருந்து புகைப்படம் பிடிப்பார்கள்- தாங்கள் இப்படி ஒரு முகாம் நடத்துகிறோம் என்று பத்திரிகைகளில் அல்லது செய்தித்தாள்களில் போடுவதற்காக.
சிற்சில நேரங்களில் நமக்கு மிகவும் சங்கடம் உண்டாவது போல் இருக்கும் அந்த புகைப்படங்கள்😠. ஒருமுறை நான் அந்தப் புகைப்படக்காரை அழைத்து படம் எடுக்கக்கூடாது என்று கொஞ்சம் மிரட்டி அனுப்பி விட்டேன்.

இன்னும் சமீபத்தில் புடவையும் மாறி சல்வார் சுடிதார் என்று வந்துவிட்டது.  சவுகரியம் மட்டுமல்ல உடலை நன்றாக மறைக்கவும் செய்கிறது அது.
ஒருமுறை அணிந்துவிட்டால் பிறகு சுதந்திரமாக இருக்கலாம்.... சதா சர்வ காலமும் அங்குமிங்கும் இழுத்து விட்டுக் கொண்டிருக்க வேண்டிய தேவையும் இல்லை, நடக்கும்பொழுது தடுக்காமல் இருப்பதற்காக ஒரு கையால் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆண்கள் வேட்டியை மடித்துக்கட்டிக் கொள்கிறார்கள்😡... அந்த மாதிரி ஒரு பழக்கமும் பெண்களுக்கு வரவில்லை🙄. ஆனால் கொசுவத்துடனிருக்கும் புடவையை மடித்து கட்டினால் கொஞ்சம் வேகமாக நடக்கும் பெண்கள் கீழே விழுந்துவிட வாய்ப்புள்ளது🙃....
இப்படிப் பல இடைஞ்சல்கள் இருக்கும் புடவையில் என்ன இருக்கிறது என்று புடவை தான் கலாச்சாரம் என்று கூறுகிறோம் 😇? இடுப்பு போன்ற பகுதிகளைத் திறந்து காண்பித்துக் கொண்டிருக்கும் புடவையில் என்ன கலாச்சாரம்? 🧐🤔....? 

உடை என்பது சவுகரியமாக இருக்க வேண்டும், ஒரு முறை அணிந்துவிட்டால் பிறகு அதை மறப்பது போல் இருந்தால் தான் நாம் நம் காரியங்களை நாளும் பொழுதும் பார்க்கமுடியும். அடிக்கடி அங்குமிங்கும் நழுவுகிறதா என்று இழுத்து விட்டுக் கொண்டிருந்தால் எப்படி நிம்மதியாக ஒரு வேலை பார்க்க முடியும்?
உடைகளில் ஆணுக்கு இருக்கும் சவுகரியம் பெண்களுக்கு இன்று வரை இல்லை..... சமீபமாக ஒரு பத்து வருடமாகத்தான் நாம் சவுகரியமான உடைகளை அணிகிறோம் என்பது என் கருத்து. ஆனால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள, (உ-ம் என் அன்னை) மற்றும் வேலை செய்யும் இடங்களில் இருக்கும் மூத்தோர்கள், ஆகியோர் ஏதாவது ஒரு விதத்தில் அதைக் குறை(புடவை அல்லாத வேறு உடைகளை) சொல்லும் வழக்கம் 🙉 இன்று வரை இருக்கிறது.

இதைப் போலத்தான் வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகளை நம் கலாச்சாரத்திலேயே வளர்க்க வேண்டும் என்று நினைப்பது.  நாம் நம் நாட்டை விட்டு  அவரவர் நியாயம் என்று நினைத்த காரணங்களுக்காக வெளிநாட்டுக்கு சென்று விட்டோம்.... அதைத் தவறு என்று கொள்ளவும் முடியாது. பூமியில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்- அந்தந்த நாடுகள் அனுமதித்தால். அது அவரவர் விருப்பம். ஆனால் ஏதோ காரணத்துக்காக சென்றுவிட்டு, உதாரணத்திற்கு பணம் சம்பாதிக்க சென்றோம் என்றால், பணம் சம்பாதிப்பதை மட்டும் அங்கு செய்துவிட்டு, வாழ்க்கைமுறை பல ஆயிரம் காத தூரத்துக்கு அப்பால் இருக்கும் நம் நாட்டு வழக்கப்படி இருக்கவேண்டுமென்றால், ஏதோ முரண்படவில்லையா?
வளரும் குழந்தைகளும் 
அப்படியே இருக்க வேண்டும் என்று எண்ணுவது  நியாயமா? அவர்களைச் சுற்றி இருக்கும் மற்ற குழந்தைகள் என்ன செய்கிறார்களோ அதைச் செய்வதுதான் அந்தக் குழந்தைகளுக்கு இயற்கையாக இருக்கும், இல்லாவிட்டால் ஒரு இரண்டுங்கெட்டான் மனநிலை, மற்றும் 'பியர் பிரஷர்' மிகப் பெரிய மன அழுத்தத்தை கொடுக்காதா? வெளிநாடு செல்வதென்று ஆகிவிட்டால், அவர்களுடைய பழக்க வழக்கங்களை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு சுதந்திரமாக, சந்தோஷமாக ஏன் இருக்கக்கூடாது?
நம் நாடே வேண்டாம், வேறு நாட்டில் இருப்பது சவுகரியம் என்று சென்ற பிறகு பழக்கவழக்கங்களை மட்டும் எதற்குத் தூக்கிச்செல்ல வேண்டும்? நாம் அந்த சுமையை தூக்குவது ....சரி பரவாயில்லை, பழகிவிட்டோம் எனலாம், குழந்தைகள் ஏன் அதை சுமக்க வேண்டும்?
வெளிநாட்டு கலாச்சாரத்தில் நல்ல விஷயமே இல்லையா? அங்கு நேர்மை இல்லையா? நியாயம் இல்லையா? ஏன் அந்தப் பழக்கங்களை சொல்லிக் கொடுக்கக் கூடாது? அங்குள்ள குழந்தைகளும் நன்றாகத்தானே இருக்கிறார்கள்? 
 
நான் சொல்வது பல வருடங்களுக்கு முன்பு பத்திரிக்கைகளில் படித்த நிகழ்ச்சிகளால் என் மனதில் அடிக்கடி எழுந்த கேள்விகள்......

இன்று என்னுடைய சொந்தக்காரர்கள் பலர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அனேகமாக இப்பொழுது நிலைமை கொஞ்சம் மாறி அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது போலத்தான் எனக்குப் படுகிறது. நேரடியாக வெளிநாடு சென்று அங்கு வாழும் தமிழகத்து குழந்தைகளைப் பார்த்த அனுபவம் இல்லை.
அவர்கள் இந்தியா வந்து விடுமுறையில் தங்கியிருக்கும் பொழுது பழகிய அனுபவம் இருக்கிறது, இருந்து
கொண்டிருக்கின்றது......

🏘️💦💅🦸🧞👩‍❤️‍💋‍👨👪👩‍❤️‍👩

மாறுதல் ஒன்றே நிலையென்று, 
சுற்றும்  பூமியின் உயிர்களிலே,
சுழலும் மாறும் பழக்கம் வழக்கம்.....🌊
வைத்தோமிதற்குப்
பெயரொன்று, 
கலாச்சாரமிது நிலையென்று!

மாறுதல் எதுவும் இல்லையெனில் 
மகளிர்🤰இன்று எங்கிருப்பர்? 
மருத்துவரென்றும் ஆள்பவரென்றும் பரிமளிக்க முடியுமா?
மாற்றம் தனையே மனமார, ஏற்பதில் மகிழு மனமே நீ🌏!
சுணங்காதே  அதையெண்ணியே!

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி