வாழ்வும் வளமும்

வாழ்வும்     
     வளமும்

மனிதன் என்ற உருவினிலே
மண்ணில் வந்து பிறந்தாலே,
வளம் பெற வேண்டும் வாழ்வில், 
பொருள் வளம் பெற  வேண்டும் 
வாழ்வில்,
என்னும் எண்ணம்
எப்பொழுதும் 
ஏந்திய வாறு இருக்கின்றோம்!
தவறும் அதிலே ஏதுமில்லை, வசதியான வாழ்க்கையிங்கு
வாழ நினைப்பது தவறில்லை!
அதற்குத்தேவை பணமும் பொருளும்!

பிறக்கும் குழந்தை பிறந்தது முதல் 
பணத்தை மட்டும் மனதில் கொண்டு 
தொழிலை செய்யடா மகனே நீயும்,
வளத்தை மட்டும் வாழ்வென கொண்டு வளர்ந்திடு கண்ணே மகளே நீயும்!
என்ற குறிக்கோளில்லாமல்,
செய்யும் தொழிலை செப்புடன் செய்,
நாணயத்துடனே நலமாய் செய்,
என்ற எண்ணம் மனதில் வளர்த்தால்... 

செய்யும் தொழில் எதுவென்றாலும், 
என்றும் நன்றாய் அதுவும் விளங்கும்...
வளமும் நலமும் தானே வந்து, 
போகிற போக்கில்
இயல்பாயிங்கு,
வேண்டிய அளவு சேர்ந்துவிடும!

அத்துடன் நிம்மதி நிலையாய் சேரும்!
தவறுகள் எல்லாம் தானே, திருத்தம் கொண்டு தெளியக்கூடும்,
பேராசைத் தவறுகள் எல்லாம் தானே, திருத்தம் கொண்டு தெளியக்கூடும்!

செய்யும் தொழிலும், சேரும் பணமும் அதுவே என்றாலும், மனதில் வைத்த குறியென்பது தொழிலா? பணமா?  
என்பதில் தெளிவு இருத்தல் தேவை!


படிப்பும் பரீட்சையும்
📚📚📚📚📚📚📚📚

பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற  ஆசை என் மனதில் மிக ஆழமாகப் பதிந்திருந்தது. இதற்கு காரணம் என்னவென்று யோசித்தால், அந்த மருத்துவ தொழிலின் மீது ஒரு ஈர்ப்பு, அக்கறை, அல்லது நாம் படிக்கும் அந்தப் பாடங்களின்  ( இயற்பியலுடன் சேர்ந்தது) மேல்  ஒரு ஈடுபாடு, ஆகியவை இருந்ததாகக் கூற முடியாது.
வெள்ளைக் கோட் அணிந்து கொண்டு போகும் மருத்துவர்களைப் பார்த்து வந்த ஒரு ஆசை என்றுதான் தோன்றுகிறது.

கோவையில் எங்கள் பள்ளி
அரசாங்க மருத்துவமனைக்கு அருகில் இருந்தது. நான் பேருந்தில் பள்ளிக்கு செல்லும் பொழுது எங்கள் பள்ளி பேருந்து நிறுத்தத்திற்கு முந்தைய நிருத்தத்தில், நிறைய ஹவுஸ் சர்ஜன்கள்,மற்றும் மருத்துவ மாணவர்கள் இறங்குவார்கள், கையில் வெள்ளை கோட்டுடன்.அவர்களைப் பார்க்கும் பொழுது நாமும் ஒருநாள் கோட்டை எடுத்துக்கொண்டு இப்படிப் போக வேண்டும் என்ற ஆசை எனக்கு வரும்.

எனக்கு இயல்பாக நன்றாக வரக்கூடிய பாடம் கணிதம்தான்.
கிட்டத்தட்ட எப்பொழுதுமே கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்குவேன்.
இயற்பியல் என்பது அவ்வளவு நன்றாக வரக்கூடிய பாடம் அல்ல. இருந்தும் மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டும் என்ற அவாவினால், பியூசியில் இயற்பியல் பாடம் எடுத்து ஒரு வருடம் படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் படித்து, நல்ல மார்க் வாங்கி மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கிவிட்டேன்.

ஆனால் ஒரு வருடம் படித்தவுடன் அடுத்த வருடம் என்னால் படிக்க முடியவில்லை. 
இதற்குக் காரணம் அட்மிஷன் வேண்டும் என்ற அவாவினால், தொடர் படிப்பினால், வந்த மன அழுத்தமா அல்லது வேறு ஏதாவதா என்று, இன்றுவரை எனக்கு சரியாக விளங்கவில்லை. ஆனால் அந்தக் காலங்களில் மனதில் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும்.... படிக்கும் பொழுது நாம் அந்தப் பாடத்தை புரிந்து  படிக்கிறோமோ, அறிந்துகொள்ள படிக்கிறோமா,அல்லது பரீட்சைகள், மற்றும் மதிப்பெண்கள் ஆகியவற்றுக்காக படிக்கிறோமோ, என்பதுதான் அது.
இது ஒரு பெரிய விஷயமில்லை போல தோனலாம். ஆனாலும் அதுதான் என் மனதில் அன்று தொடர் எண்ணமாக இருந்து கொண்டே இருந்தது...
படிக்கும் காலத்தில், முதல் பனிரண்டு வருடங்களும் பரீட்சையை நோக்கியே படித்துப் பழக்கப் பட்டு விட்டதால் அந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை.
அதே நேரம் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த எண்ணம் ஒரு 'அப்ஸஷனாக' மாறிவிட்டது. மருத்துவர் அதை 'அப்ஸஸிவ் நியூரோசிஸ்' என்றுதான் 'டையக்னோஸ்' செய்திருந்தார்.
இதனாலேயே நான் படிக்க முடியாமல் வீட்டில் இருந்துவிட்டேன்.
பிறகு, ஒருவருடம் ஓய்விற்குப் பின், கவுன்சிலிங் சென்று பயிற்சி எடுத்துக்கொண்டு... அதாவது மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பது எவ்வாறு என்ற பயிற்சி எடுத்துக்கொண்டு.... எப்படியோ படித்து அரியர்ஸ் எதுவும் வைக்காமல்
எம்பிபிஎஸ்  முடித்து வெளியே வந்துவிட்டேன்.
இருந்தாலும் என் மனதிற்குத் திருப்திகரமாக நான் படித்ததாக எனக்குப் படவில்லை.
பள்ளியில் நான் பாடங்களை புரிந்து கொண்ட அளவு எம்பிபிஎஸ் பாடங்களை புரிந்து கொண்டேனா என்பது தெரியவில்லை. 

இதை நோக்கும்பொழுது,  வாழ்க்கையும் இதே போல்தான் எனப்படுகிறது.
நாம் ஒரு தொழிலை செய்யும் பொழுது நம் குறி தொழிலில் என்ன செய்கிறோம், அதை நன்றாக செய்தோமா, இல்லையா என்பதாக இருந்தால், கண்டிப்பாக தொழிலும் பரிமளிக்கும் நம் மன நலனும் நன்றாக இருக்கும், என்பது என்னுடைய எண்ணம். ஆனால் கிட்டத்தட்ட நம்மில் நூற்றுக்கு 95 பேர் எது செய்தாலும், பணத்தை குறியாகக் கொண்டு செய்கிறோம். 
இன்றைய காலங்களில் எந்தத் தொழில் செய்தால் நன்றாக பணம் சம்பாதிக்கலாம், என்பதுதான்  லட்சியமாக இருக்கிறது....நமக்கும் நம்முடைய மனோபாவத்திற்கும், ரசனைக்கும், எந்தத் தொழில் அல்லது எந்த படிப்பு நன்றாக வரும், இயல்பாக ஒத்துப் போகும் (ஆங்கிலத்தில் இதை 'In his / her element' என்பார்கள்) என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
இது நாம் செய்யும் காரியத்தில், குறிப்பாகத் தொழிலில் மிக முக்கியம் என்பது, கிட்டத்தட்ட போகும் காலம் வந்த பிறகுதான் எனக்கு புரிபடுகிறது.
நல்ல வேளை, என் மகன்கள் இருவரையும் நாங்கள் வற்புறுத்தவில்லை, இதைத் தான் படிக்க வேண்டும் என்றோ அல்லது இந்தத் தொழில்தான் செய்ய வேண்டும் என்றோ.... அவர்களுக்கு விருப்பமானதை படித்தார்கள், படித்துவிட்டு அதற்கு சம்பந்தம் இல்லாத விருப்பமான வேறு தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள் இரண்டு பேரும்.அவர்கள் இருவரும் தொழில் பொருத்தவரை மகிழ்ச்சியாக உள்ளார்களா என்பது அவர்களை தான் கேட்க வேண்டும். ஆனால் வெறுப்பாக இல்லை என்று நான் சொல்ல முடியும்.

பணம் என்பது வரத்தான் போகிறது. சில தொழில்களில் அளவாக வரும், சிலவற்றில் அதிகமாக வரும். அது  வேறு 
விஷயம். ஆனால் குழந்தைகள், பிடித்தமான தொழிலைக் கையில் எடுத்து, அதைக் கவனமாக நன்றாக செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்வதற்கும், நன்றாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற  குறிக்கோளுடன் வளர்வதற்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.  பணத்தைக் குறியாக வைத்து செய்யும் பொழுதுதான் தொழிலில் சில குறுக்கு வழிகள், ஏமாற்று வித்தைகள் இவையெல்லாம் தொடங்குகின்றன. எதைச் செய்தால் பணம் அதிகமாக வரும் என்ற ஐடியாக்கள் தோன்றுகின்றன. பணம் குறிக்கோளாக இல்லாமல் எடுக்கும் காரியத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற பழக்கத்தை குழந்தை பருவத்திலிருந்தே பழக்கினால், வாழ்வை நாம் நோக்கும் விதம் வேறாக இருக்கும், இன்னும் அதிகமாக வாழ்க்கையை ரசிக்கவும் முடியும்.

இப்படி..... பணத்தை வைத்து வந்தவை தானோ  டார்கெட் வைத்து  நடக்கும் கார்பரேட் மருத்துவமனைகள்? ஒரு மருத்துவரின் அல்லது மருத்துவமனையின் குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும்?
'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'
என்பதல்லவா? 
இல்லை இந்த மாதம் எத்தனை அறுவை சிகிச்சை செய்தோம், டார்கெட்டை நிறைவு செய்தோமா என்பதாக இருக்க வேண்டுமா?
டார்கெட் அடையவில்லை என்றால், அடுத்து அந்த மருத்துவர் என்ன செய்வார்? நோயில்லாத மனிதரையும் பிடித்து வைத்தியம் செய்யத்தானே தோன்றும்?
இதுபோல் செய்யும் மருத்துவத் தொழிலில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? என்ன விதமான திருப்தி இருக்க முடியும் மனதில்?

      

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி