கேள்வி கேட்கலாமா?

கேள்வி
    கேட்கலாமா?

வழக்கம் என்று வந்த பழக்கங்கள் பலவற்றை, 
ஏனென்று கேள்வி,
கேட்பதில் தவறில்லை. கேள்விகள் கேட்காமல் இருப்பதும் இயல்பில்லை, கேட்காத கேள்விக்கு பதிலென்பது 
என்றுமில்லை!

கேட்கும் கேள்விக்கு கிடைக்கலாம் பதிலன்றே, கிடைக்காமலும் போகலாம் பதிலென்ற பேருண்மை! நீண்ட நாள் கழித்து 
நம்முன் நிற்கலாம் 
சட்டென்று பதில் வந்து 
சிரித்தவாறு முகம் மலர்ந்து!

மனதிலே முதலில் 
மலரும் கேள்விகள்,
மலருமுன் முடங்கலாம், 
இன்றுவரை வந்துவிட்ட முடக்கிடும் பழக்கத்தால்.
முடக்காமல் கேள்வியை
மலர விடு மனமே, 
மலர்ந்தால் தான் வந்திடும் கேள்விகள் வெளியே!

பிறந்த நாள் முதலாய்
கேள்வி கேட்ட குழந்தாய்!  
பதிலொன்று வந்தது-
'கேட்காதே கேள்வியிங்கு, வழக்கத்தை மாற்றாமல்  என்றும் போல் செய்யென்று!'
கேள்வியை முடக்கிடும் பழக்கம் வந்தது, 
உலகத்தின் இந்த வழக்கத்தால்தானே!?

இளமையும் இனிமையும்
இணைந்திட்ட அன்னையும் அன்பும் அறிவும் அடர்ந்திட்ட தந்தையும்,
கேட்கட்டும் குழந்தைகள் கேள்விகளை நம்மிடம்.... தெரியாத பதிலுக்கு- தெரியாதென்றிடலாம் 
வீரமாகக் குழந்தையிடம்,
என்றான விவேகம் வளர்த்திடலாம் வீட்டினிலே,
விரித்திடலாம் விசாலமாக
மனமென்னும் அறையினை!


பரீட்சை

📚📖📄📃📚📖📄📃📚


எங்கள் குடும்பத்தில் பெற்றோர்கள் நேர்மைக்கும்,
உண்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து  வளர்த்தார்கள் எங்களை. என் தந்தை சிவில் இன்ஜினியராக இருந்தார். அரசாங்கத்தில் மண்வள பாதுகாப்புத் துறையில் வேலை பார்த்தார். நேர்மைக்கு பெயர் போனவர், லஞ்சம் வாங்க மாட்டார்.
டிபார்ட்மென்டில் அவருக்கு ஒரு தனி மரியாதை இருந்தது.  அனைவரும் இந்த விஷயத்தில் அவரைக் கண்டு கொஞ்சம் பயமும் படுவார்கள்.
 
அவருக்கு வந்த அளவான சம்பளத்தை வைத்துத்தான் என் பெற்றோர்கள் எங்கள் மூவரையும் வளர்த்து, கான்வென்ட் பள்ளி, மற்றும் கல்லூரியென்று, அனைத்திலும் படிக்கவைத்தார்கள்.என்னுடைய தாயார் தனக்கென்று புடவை வாங்குவதே அரிது, மிகவும் சிக்கனமாகத்தான்  குடும்பம் நடத்தினார்.
   
பல வருடங்களுக்கு முன்பு நான் மருத்துவக் கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் பொழுது நடந்த ஒரு சம்பவம் என் நினைவில் அடிக்கடி வரும், குழந்தை வளர்ப்பு பற்றி பேசும் பொழுது.

மருத்துவ படிப்பிற்கு உடற்கூறியல் என்ற பாடம் தான் அடிப்படை. நாங்கள் ஒன்றரை வருடம் அதைப்  படித்தபொழுது, தினமும் இறந்த மனிதர்களின் உடல்களை அறுத்து, ஒவ்வொரு பகுதியாக எந்தெந்த ரத்தநாளம் எங்கிருந்து எங்கு செல்கிறது, மற்றும் எலும்பு, தசை, நரம்பு, முதலியவற்றில் மிகப்பெரியவை முதல் மிகச் சிறியவை வரை படித்து மனப்பாடம் செய்ய வேண்டும். 

பிறகு தேர்வின்போதும்,   இதே போல் அவர்கள் இறந்த உடல்களை எடுத்து,
டிஸெக்க்ஷன் செய்து, சிறு சிறு இரத்த நாளங்கள், நரம்புகள் முதலியவற்றுக்கு அடியில் ஒரு சிறு கறுப்புக் காகிதத்தை நுழைத்து வைத்திருப்பார்கள்.  காகிதம் சுட்டிக் காண்பிக்கும் அந்த நரம்பு, அல்லது ரத்தநாளம்,  அல்லது தசை, எதுவாயிருந்தாலும்,அதை அடையாளம் கண்டு பிடித்து,  
அதன் பெயரை நாம் எழுத வேண்டும். பரீட்சையின் இந்த பகுதிக்கு 'ஸ்பாட்டர்ஸ்' என்ற பெயர்.

அது போல் பத்து ஸ்பாட்டர்கள் வைத்திருப்பார்கள்.
எனக்கு உடற்கூறியல் கொஞ்சம் பிடித்தமான பாடம்தான். ஓரளவு நன்றாக செய்வேன். கிட்டத்தட்ட அதுவரை வந்த அனைத்துமே நான் கண்டுபிடித்துவிட்டேன்... ஒன்றைத் தவிர...... அடிமனதில் அதன் பெயர் அப்படியே நிற்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது.  ஆனால் மனதின் அடியில் இருந்த பெயர் மேலெழும்ப மறுத்துவிட்டது. நானும் யோசித்து விட்டு, சரி பிறகு எழுதிக் கொள்ளலாம் என்று என்னுடைய பரீட்சை காகிதத்தில் அந்த இடத்தைக் காலியாக விட்டு விட்டு,  அடுத்த ஸ்பாட்டருக்குச் சென்று விட்டேன். இதைக் கவனித்த 'இன்டர்னல் எக்ஸாமினர்'  அந்த ரத்த நாளத்தின் பெயரை எனக்குக் கேட்கும்படி கொஞ்சம் மெதுவாக இரண்டு முறை கூறினார், ஆனால் நான் எழுதவில்லை. அவர் கூறிய பிறகு நான் எழுதினால் காப்பி அடிப்பது போல் ஆகும் என்று எண்ணி எழுதாமல் விட்டு விட்டேன். அவர் கூறாமல் இருந்திருந்தால், சிறிது நேரத்தில் எனக்கே அந்தப் பெயர் ஞாபகம் வந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். 
பிறகு அவர் அடுத்த ரவுண்ட் வரும் பொழுது நான் எழுதாமல் இருப்பதைக் கவனித்துவிட்டு மீண்டும் கூறினார்.....'சரி,விட மாட்டார் போலிருக்கிறது' என்று எண்ணிக்கொண்டு அதை எழுதி விட்டேன். ஆனால் நான் பரீட்சை பேப்பரை கொடுக்கும் பொழுது அந்த விடையை அடித்துவிட்டு கொடுத்தேன். அந்த மார்க் எனக்கு தேவையில்லை என்ற எண்ணமா, இல்லை காப்பி அடிக்க கூடாது என்ற கொள்கையயா,சரியாக ஞாபகமில்லை.

ஆனால் அதன் பிறகு அந்த ரத்த நாளத்தின் பெயர்  இன்றளவும் என் மனதை விட்டு அகலவில்லை..... அது-'left innominate vein' என்னும் சிரை.
தலைப் பகுதியின் இடப்பக்கமிருந்தும்,  இடது தோள் பகுதியிலிருந்தும், கார்பன் டை ஆக்ஸைடு கலந்த ரத்தத்தை இருதயத்திற்கு திருப்பிக் கொண்டு செல்லும் சிரை.
பிறகு மாலை வீட்டுக்கு வந்து என் பெற்றோர்களிடம் இதைக் கூறினேன்-
அவர்கள் அதை அவ்வளவாக ரசிக்கவில்லை. 

பொய் சொல்லக்கூடாது,
பரீட்சையில் காப்பி அடிக்க கூடாது  என்பது போன்ற பழக்கங்களை எல்லாம் பெற்றோர்கள்தான் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனாலும் இதை அவர்கள் ரசிக்க வில்லை.
'வாத்தியாரே சொல்கிறார், எழுத வேண்டியதுதானே இதில் என்ன இருக்கிறது?' என்று கூறினார்கள்.
எனக்கு இது ஒரு சிறிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அப்பொழுது சிறு குழந்தையில்லை நான், வளர்ந்த பெண்தான். இருந்தாலும் ஓரிரண்டு நாட்கள் ஒரு சிறு குழப்பம் இருந்தது......
எது சரி, எது தவறு, நாம் சரியாகத்தானே செய்தோம் ஏன் பிடிக்கவில்லை என்று. அதன் பிறகு நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும்இன்றளவும் அந்த  நிகழ்ச்சி மனதில் பதிந்துவிட்டது. 

ஆனால் என் பெற்றோர்கள் கொஞ்சம் 'ஆன்ஷியஸாக' இருந்தது புரிந்து கொள்ளக் கூடியதே. ஏனென்றால் நான் சில பிரச்சினைகளின் காரணமாக ஒரு வருடம் படிப்பை நிறுத்தி விட்டேன். பிறகு  மறுவருடம் மீண்டும்
கல்லூரி சென்று படித்த காலம் அது. பரீட்சையில் தேறா விட்டால் மறுபடியும் படிப்பை நிறுத்தி விடுவேனோ என்ற பயம் அவர்களை அவர்களுக்கு இருந்திருக்கலாம். ஆகையால் அவர்கள் கூறியதை முற்றிலும் தவறென்று கொள்ள முடியாது....
இது எனக்கு இப்பொழுதுதான் விளங்குகிறது.

இதற்கும் கேள்வி கேட்கும் குழந்தைக்கும் சம்பந்தம் இல்லை தான்... இருந்தாலும் பெற்றோர் குழந்தைகள் உறவு முறையில் வரக்கூடிய  குழப்பங்கள் நிறைய இருக்கின்றன, அதற்கு இது ஒரு உதாரணம் என்று எனக்குத் தோன்றும்.

இதே விஷயம் இன்று என் குடும்பத்துக்கும் பொருந்தும்.....



Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி