சத்தம்

சத்தம்

நாங்கள் முன்பு பெங்களூரில் குடியிருந்த பொழுது அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் இருந்தோம். அந்த நேரத்தில்தான் எங்கள் பாப்பாத்தி நாய்குட்டி எங்களிடம் வந்து சேர்ந்தாள். அவள் வந்தபிறகுதான் நாய்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் பற்றி ஒரு அறிமுகம் ஆரம்பமானது. பொதுவாக அவளுக்கு நம்மிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால், தன் பாஷையில் அவள் சொல்வது, நமக்கு 'வள் வள், லொள் லொள்' என்று காதில் விழும். சும்மா இருக்கும் பொழுது தேவையில்லாமல் கத்த மாட்டாள்.... நம்மிடம் ஏதாவது கூற விரும்பினால்தான் கத்துவாள். உதாரணத்திற்கு ஒரு பந்து வீசினால் ஓடி அதை பிடிப்பாள், பிறகு நாம் அந்த பந்தை மீண்டும் வீசாமல் இருந்தால் நம்மைப் பார்த்துக் கத்துவாள். அதாவது 'பந்தை வீசு' என்று அர்த்தம் என்பதை 
நாம் புரிந்து கொள்ள வேண்டும். உணவு வேண்டுமென்பதற்கு ஒரு வகை சத்தம், 'மணி பத்தாயிற்று இன்னும் படுக்காமல் என்ன செய்கிறீர்கள்' என்றுநம்மை மிரட்டுவதற்கு ஒருவகை சத்தம்,நாங்கள்  வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது நானும் உடன் வருகிறேன் என்று கெஞ்சுவதற்கு ஒரு வகை சத்தம் என்று பலவகை குரல்கள் இருந்தன பாப்பாத்திக்கு. எல்லா செல்லப்பிராணிகளுக்கும் அப்படித்தான்!

நாய்களின் குரல் சிறிது சத்தமாக இருப்பதால் அவை கத்துகின்றன என்று நாம் சொல்கிறோம்.இதே குயில் கூவுவது 'இனிமையாக கூவுகிறது', 'குயில் பாட்டு' என்றெல்லாம் கூறுகிறோம். நாய் நமக்காகக் கத்தவுமில்லை குயில் நமக்காக கூவவுமில்லை....  நாய் ஏதோ சொல்ல விழைந்து கத்துகிறது.
குயில் இனப்பெருக்கத்தின் பொருட்டு ஜோடிக்குயிலைக் கூவி அழைக்கிறது என்று இயற்கை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
நாமே அதற்கு ஒரு அர்த்தம் கற்பித்துக் கொண்டு ஒன்றை     நாராசம் என்றும் ஒன்றை இனிமை என்றும் வகைப்படுத்தி விடுகிறோம்.   

நகரத்தில் இருக்கும் நாம் நெருக்கமான குடியிருப்புகளில் வசிக்கும் பொழுது இதுபோல செல்லப்பிராணிகள் வைத்திருந்தால், அவை கத்துவதைப் பற்றி நமக்கு குற்றச்சாட்டுகள் வரும் 'மிகவும் சத்தமாக இருக்கிறது, அது ஒரு இடையூறாகத் தெரிகிறது' என்று.... 

இதில் இரண்டு விஷயங்கள்  என்னவென்றால்....ஒன்று, நம் குழந்தைகள் விளையாடும் பொழுது கத்திக்கொண்டு ஓடுகின்றன, சத்தம் போட்டு பாடுகின்றன ஆடுகின்றன. கோபம் வந்தால் மிகவும் சத்தமாகக் கத்தி அழுகின்றன. அவர்களை நாம் சமாதானப்படுத்த சில நிமிடங்கள் அல்லது சில மணித்துளிகள் கூட ஆகலாம்.ஆனால் பெரும்பாலும் இதை ஒரு குற்றமாக யாரும்  சொல்வது இல்லை.  

இரண்டு, அடிப்படையில், விலங்குகள்  ஏன் கத்துகின்றன? காட்டு விலங்குகள் காரணமில்லாமல் கத்தி
யாரும் கேட்டதில்லை.
(காட்டுக்குள்ளே சென்று பார்த்தால் உண்மை நிலவரம் புரியும். ஆனால் 'நேஷனல் ஜோகிராஃபிக்' 'பிபிசி' போன்ற சேனல்களில் பார்த்தவரை கூறுகிறேன்)  

வீட்டு மிருகங்கள் ஏன் கத்துகின்றன என்றால் நாம் அவற்றை வீட்டுக்குள் அடைத்து வைக்கிறோம் அல்லது கட்டி வைக்கிறோம் அதனால் கத்துகின்றன.
உயிரினங்கள் என்று நம்மை சுற்றி இருந்தால் அவற்றில் இருந்து ஏதோ ஒரு சத்தம் வந்து கொண்டுதான் இருக்கும்.

அவற்றை சுதந்திரமாக விட்டால் எதற்காகக் கத்தப் போகின்றன? அவர்களுடைய சமூகத்தில் அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள், நாம் நம் சமூகத்தில் வாழ்வதைப் போல....


😀 சிரிப்பும் களிப்பும் 
பேச்சும் கடுப்பும் 
அனைவர் வாழ்வில் ஒரு பகுதி!
எல்லா உணர்வும் பொதுவானது 🐝
பூமியில் வாழும் அனைவருக்கும்....

நமக்கு மட்டும் உணர்வுண்டு
விலங்குக்கில்லை அதெல்லாம்,
என்றிருக்கும் எண்ணம்,
மமதை தந்த
மடமையல்லவா? 🐈

செல்லப்பிராணி தேவை என்று
நாயும் கிளியும் கூண்டில் அடைத்தோம்,
குரலும் அடையவேண்டுமா?             
                   🦜               

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி