பழங்கதை

பழங்கதை🏌️

சிறுவயதில்
நாங்கள் பள்ளி விடுமுறையின் போது, எப்பொழுதுமே அத்தையின்
ஊருக்குத்தான் செல்வோம். 
அங்கு எங்கள் வயதையொத்த பெண்கள் நாங்கள் மொத்தம் ஐந்து பேர்  இருப்போம்.

நான் என் தங்கை மற்றும் என் 'கசின்ஸ்' மூவரும் சேர்ந்து கழித்த விடுமுறை எல்லாம் பசுமையான ஞாபகங்கள்.
வெளியூர் செல்வது அல்லது வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற புதுமைகள்  இருக்காது,  வீட்டில்தான் இருப்போம் ஒரு ஒன்றரை மாதம் போல்.
இருந்தாலும் அவை அருமையான விடுமுறைகள்.   காரணம் மாறுதலான கிராமத்துச் சூழலும், உடன் உரையாட, சண்டை போட, சேர்ந்துகொள்ள சமவயதுத்தோழிகளான 'கஸின்ஸும்'.....

எங்களுக்குள் பல பிரிவினைகள் வரும், ஒவ்வொரு விடுமுறைக்கும் ஜோடிகள் மாறிவிடும், யார் யாருக்கு சாதகமாகப் பேசுவதென்பதில்....ஆனால் பெரும்பாலான சமயங்களில் ஐந்து பேரும் ஒற்றுமையாகத் தான் இருப்போம். வீட்டு வேலை செய்வதில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம்.
ஊர்க் கதைகளை பேசிக் கொண்டே வீட்டுக்கும் தோட்டத்துக்கும் தினமும் இரண்டு முறையாவது நடந்து சென்று வருவோம்.......
குறிப்பாக கிணற்று மேட்டுக்கு சென்று  துணிகளைத் துவைத்து அலசி வர இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சென்றுவர வேண்டும்.
மேலே துணிகளை துவைத்து விட்டு, கிணற்றுக்குள் சென்று அவற்றை நீரில் அலசுவோம். கஸின்களில் இருவருக்கு நீச்சல் தெரியும்.
அதில் எனக்கு கொஞ்சம் பொறாமை.... நானும் கிணற்றுப்படிகளில் சென்றமர்வேன் கொஞ்சம் தைரியமாக!

எங்கள் அத்தை மிகவும் கடின உழைப்பாளி.
சிறுவயதிலேயே, அவர் பிறந்து வளர்ந்த தாய் வீட்டில், காலை மூன்று மணிக்கே  எழுந்து, சோளத்தைக் இடித்துப்புடைத்து தோட்டத்து நாய்களுக்கு கஞ்சி காய்ச்சுவார்.
பிறகு வீட்டு மனிதர்களுக்கு உணவு சமைக்க வேண்டும்.துணிகளைத் துவைக்கும் வேலையும் அவருடையதாகத்தான் இருக்கும்.
காலை மதியம் இரு வேளையும் ஒரே உணவு தான்!
ஒரு சோளச்சோறு மற்றும் குழம்பு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். 
மாடுகளின் பெருந்தன்மையினால்,
தயிருக்கும் மோருக்கும் பெரும்பாலும் பஞ்சமே இருக்காது. 
தூக்குப்போசியில் உணவை எடுத்துக்கொண்டு தோட்டம் சென்று விடுவார்கள். தோட்டவேலை ஆரம்பித்தால் மாலைதான் வீடு திரும்ப முடியும்.
மீண்டும் சமையல் முடித்து உணவுண்டால் இருட்ட ஆரம்பித்தவுடன் அனைவரும் உறங்கச் சென்று விடுவார்கள். 

என் கணக்குப்படி சுமார் ஏழு மணிக்குப் படுத்து,
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன், விடிகாலை மூன்று, மூன்றரை மணி போல்....

அதன்பிறகு அவர் திருமணமாகி வந்த ஊர்தான் எங்களுக்கு அத்தை  ஊர், அங்குதான் நாங்கள் அடிக்கடி விடுமுறைக்குச் செல்வோம்.

ஒருமுறை அத்தை கூறிய ஒரு கதை இன்று வரை என் ஞாபகத்தில் அப்படியே பதிந்திருக்கிறது.  
அத்தை எப்பொழுதுமே  'தோட்டத்தில் எத்தனை ஆட்கள் வேலை செய்தாலும் நாமும் உடன் சென்று செய்யவேண்டும் , அப்பொழுதுதான் அவர்களும் உற்சாகமாக வேலை செய்வார்கள் நமக்கும் நிறைய வேலை முடியும்' என்று கூறுவார்....  
ஆகையால் தோட்டத்து ஆட்களோடு ஒன்றாக  அவர்களுக்கு ஈடு இணையாக சில நேரம் அவர்களைவிட ஒருபடி மேலாக வேலை செய்வார். 

ஒருமுறை அவர் தோட்டத்தில்  நின்று கொண்டிருந்த பொழுது,திடீரென்று காலில் ஏதோ பட்டதை போல உணர்ந்து, குனிந்து பார்த்தால் ஒரு பெரிய நாகப் பாம்பு பாதத்தின் மீது ஊர்ந்து போவதைக் கண்டிருக்கிறார். எந்தவிதமான அச்சமும் பதட்டமும் இல்லாமல், சத்தம் போடாமல் அப்படியே நின்றுவிட்டார்.
பாம்பு முழுவதும் நகர்ந்து போய், சிறிது தூரம் சென்றபின் கத்தியிருக்கிறார்.. ஆட்கள் வந்து அதை அடித்துக் கொன்று விட்டனர்....என்று எங்களுக்கு விவரித்தார். 

பாம்பைப் பார்த்து அச்சப்படாமல் இருந்த அந்த மனம் அருமையான ஒரு விஷயம் என்று நினைக்கிறேன்.

அதே நேரம் என் மனதில் இன்று வரை இருந்துகொண்டிருக்கும் கேள்வி, என் அத்தையை ஒன்றுமே செய்யாமல் அதுபாட்டுக்கு சென்று விட்ட அந்தப் பாம்பை எதற்காக அடித்துக் கொன்றார்கள் என்பதுதான்.

அது தன் வேலையை பார்த்துக்கொண்டு, யாரையும் கொத்தாமல் தன்னுடைய பாதையில் சென்ற அந்தப் பெருந்தன்மையையும், துரத்தி சென்று அடித்துக் கொன்ற நம்முடைய அச்சத்தினால் விளைந்த குறுகிய மனப்பான்மையையும் நினைத்து அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. 

இது போல் இன்னொரு விஷயம் என் மகன் கூறினான். சிறுவயதில் அவனும் தோழர்களும் எங்காவது ஓனானைப் பார்த்தாலே கல் கொண்டு அடிப்பார்கள், கொல்ல முயற்சிப்பார்கள் என்று... ஏன் என்று கேட்டேன்... தெரியவில்லை அனைவரும் அப்படித்தான் அடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்...... ஆனால் அப்படி அடித்ததை நினைத்து இன்று மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றான். பிறகு சமீபத்தில் நான் கேள்விப்பட்டேன், அதற்கு கழுத்தில் சிவப்பு நிறம் இருப்பதால் அது ரத்தத்தை உறிஞ்சுகிறது என்ற ஒரு  எண்ணத்தில் அடிக்கும் பழக்கம் வந்திருக்கிறது பல காலமாக!

             பாம்பைக் கண்டால் கொன்றுவிடு,
        🐍   ஓடி ஒளிந்தால்                            விட்டுவிடாதே!
         ஓடும் ஓனான்  🦎 அதையும் கொல்லு!
       சின்னப்பையன்  
           🤹கற்றதிது
        மழலை முடிந்து 
             மலரும் பொழுது!

            நம்மைத் தேடிப்பிடித்து கொத்தும்    
                 பாம்பு 
       உலகில்  உண்டோ                  சொல் மகனே!🙊
           வேலியில் ஓடும்     
                ஓனானாலே
          தொல்லையேதும்   
               நமக்குண்டா?🐸

கண்டவுடன் அடிப்பதற்கு பதில் பாம்பைப் பார்த்தால் அதனுடைய பாதையில் குறுக்கிடாமல் நாம் விலகிச் சென்று விடலாம் என்ற மனப்பாங்கை கூட நாம் வளர்த்துக் கொள்ளலாமே!? குழந்தைகளுக்கும் அதுபோலவே சொல்லிக் கொடுக்கலாமே!

நான் ஐந்தாவது வகுப்பு படிக்கும் பொழுது என் தந்தை ஒரு சில மாதங்கள் அமெரிக்கா சென்று வந்தார்... மண்வளப் பாதுகாப்பு பற்றி பயிற்சி பெறுவதற்காக. அவர் அப்பொழுது விவசாயக் கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்தார்.  திரும்பி வந்த பொழுது தான் எடுத்த நிறைய புகைப்படங்களை  சிலைடுகளாக  மாற்றிக் கொண்டு வந்தார்.
அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு வருடங்கள் வரை எங்களுக்கு மாதம் ஒருமுறை அல்லது இருமுறை மாலைநேரமானால்  'ஸ்லைட் க்ஷோ'தான். புராஜெக்டர் மூலம்  ஒவ்வொரு ஸ்லைடாக சுவற்றில் போட்டுக் காண்பித்து, அவர் எங்கே எடுத்தார், என்ன நடந்தது, என்பதை எல்லாம் கதைபோல் விவரிப்பார்.
எங்களுக்கு அது அந்தக் காலத்தில் பெரிய பெருமை, பக்கத்து வீட்டில் உள்ள தோழர் தோழியர் எல்லோரையும் அழைத்துக்கொண்டு  வந்து அமர்ந்து கொள்வோம். சாயங்காலம் ஒரு சினிமா போல் இது அடிக்கடி நடக்கும். ஒரு முறை ஒரு பாம்பின் படம் காண்பித்து அதற்குப் பெயர் 'ரேட்டில் ஸனேக்' என்றும் அது இருக்கும் காடுகளில் நாம் நடந்தால், கிட்டத்தட்ட ஒரு 20 அடி தூரத்தில் இருக்கும் பொழுதே அது தன் வாலை ஆட்டி கடகட என்று சத்தம் செய்விக்கும்,( அது வாலை ஆட்டினால் கிலுகிலுப்பைப் போல்  கடகடவென்று சத்தம் வரும்) அதாவது நான் இருக்கிறேன் அருகில் வராதே என்று எச்சரிப்பதற்காக என்றார் என் தந்தை. நாம் அந்த இடத்தை விட்டு வேறு பாதையில் சென்று விடுவது நல்லது, ஏனென்றால் அது விஷம் வாய்ந்த பாம்பு, என்றும் கூறினார்.

           🌵பாம்பைக் கண்டால் 
       விலகிச் சென்று 🚴 
        நமது வாழ்க்கை நாம்                    
                     வாழ,
                பாம்பும் போகும்                         இல்லம் நோக்கி
          தனதுவாழ்வைத்      
                  🦥   தான் வாழ!
            வேலியில் போகும் 
                     ஓனானைக்
               கல்லையெறிந்து                      
         கொல்லாமல் 🙉
           வாழ விட்டால் 
   என்ன குறை?🙄

நானும் ஒரு இரண்டு முறையாவது தோட்டத்திலும், பள்ளிப்பருவத்தில் நாங்கள் கோவை விவசாயக் கல்லூரிக் குடியிருப்பில் இருந்த பொழுது, சுற்றியிருந்த காடுகளிலும், நடந்து செல்லும்பொழுது சிறிது தூரத்தில் எனக்குப் பக்கவாட்டில் உள்ள வேலியில் பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். நான் பார்த்த இரண்டுமே நல்ல பெரிய 'ஸைஸ்' உள்ளவை.....ஒரு ஐந்தாறு அடி நீளமும் கையளவு தடிமனும் உள்ளவை.
அந்தப் பாம்புக்கும் எனக்கும் இடையில் ஒரு சிலஅடிகள் தூரம் தான் இருக்கும், கண்டிப்பாக அதற்கும் தெரிந்திருக்கும் நான் அங்கு நடந்து கொண்டிருக்கிறேனென்று, ஆனால் அது திரும்பி கூட பார்க்காமல் அது பாட்டுக்கு சென்றுவிட்டது-இதைத்தான்
'கோஎக்சிஸ்டன்ஸ்' என்று ஆங்கிலத்தில் கூறுவார்களோ?

எனக்கு விலங்குகள் அனைத்துமே 'கோஎக்சிஸ்டன்ஸ்'  மனப்பாங்குடன் இருப்பதாகத்தான் படுகிறது.
இயற்கை விதிகளின்படி உணவுண்ண மட்டும்  பிற விலங்குகளைக் கொன்று மாமிச உண்ணிகள் வாழ்கின்றன.

          இறையெனும் இயற்கை 🌍
            கொடுத்தது     வாழ்க்கை,⛄
          இயற்கை   
                         🐿️   விதியில் வாழும்  விலங்கு! 
               செயற்கை சட்டம்   போடும் மனிதன்,🙈
            செயலில் தர்மம்  உண்டாவென
             சிந்தனை செய்து பார்க்கலாமே!🍂

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி