காபியும் தயிர்சோறும்

காபியும்
தயிர்சோறும்

என் அத்தை மகள் முத்தூரில் வசிக்கிறாள்.
பல வருடங்களுக்கு முன்பு நாங்கள் அடிக்கடி பார்த்துக் கொண்ட சமயங்களில், அவள் வீட்டுத் தயிர் என்றால் எனக்கு மிகவும் விருப்பம்.
கரண்டியால் எடுக்கமுடியாது, கத்தியால் வெட்டித்தான் உண்ண வேண்டும் என்று கூறுமளவிற்கு கெட்டியாக இருக்கும்! அப்பொழுதெல்லாம் அவர்கள் வீட்டில் முக்கால்வாசி எருமைப்பால் தயிர் தான்.
இன்று அவரவருக்கு பேரன் பேத்திகள் வந்தபிறகு, ஒருவரையருவர் பார்த்துக் கொள்வது குறைந்துவிட்டது, ஏதோ திருமண விழாக்களில் சந்தித்தால் உரையாடிக் கொள்வோம்.

பொதுவாக என் சுற்றுவட்டாரங்களில் என்னுடைய ஃபில்டர்காபி பிரசித்தம்.... நல்ல அடர்த்தியாக டிகாக்ஷனை  வடிகட்டி, கறந்த பாலை பொங்கக் காய்ச்சி, பொங்கி வரும்போது அதில் டிகாக்ஷனைக் கலந்து, தேவையான அளவு சர்க்கரை (எனக்கு கொஞ்சம் அதிகமாக) போட்டு சுடச்சுடக் குடித்தால் உலகத்தில் உள்ள பரம சுகங்களில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து மட்டுமல்ல.....
இன்னொரு விஷயம் என்னவென்றால் காப்பி, டீ இரண்டும் எனக்கு கொதிக்க கொதிக்க இருக்க வேண்டும். தம்ளர், அல்லது பீங்கான் கப் எதுவாயிருந்தாலும், ஓரங்களில் எல்லாம் தெரிக்காமல், சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு தம்ளரில் டிகாக்ஷனையும் பாலையும் சர்க்கரையும் ஒரு ஸ்பூனை விட்டு கலந்து அதை ஆற்றாமல், இன்னொரு சுத்தமான டம்ளரில் எங்கும் தெரிக்காமல், ஆனால் ஆவி பறக்க ஊற்றிக் கொடுத்தால் தான் எனக்கு பிடிக்கும். 
இப்படிக்கொஞ்சம் ஓவராக ஃபிலிம் காட்டுவதால் என் வீட்டில் யாருக்கும் எனக்கு காப்பி போட்டுக் கொடுப்பது என்றால் பிடிக்காது.

ஃபில்டர் காப்பி ஒரே ஒரு உதாரணம்தான்..., சுண்டக் காய்ச்சிய பாலை வைத்து செய்யும் எத்தனை எத்தனையோ தின்பண்டங்களும் குடிக்கும் ஐட்டங்களும் இருக்கின்றன.
சொல்லிலும் எழுத்திலும் அடங்காதவை.... சட்டென்று நினைவுக்கு வருபவை பாசந்தியும் ரசகுல்லாவும் 😋.
இவை இரண்டும் செய்வது எப்படி என்று எனக்கு தெரியாது.பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை ரசகுல்லா செய்கிறேன் என்று ஏதேதோ செய்து கொஞ்சம் உதிரியாக ஒரு பொருள் வந்தது. ரசகுல்லாவின் வசீகர வடிவம் இல்லை, ஆனால் இனிப்பிருந்ததால் அனைவரும் விரும்பி சாப்பிட்டோம்.

குழைய வேகவைத்து ஆறிய சாதத்தை, குளிர்சாதனப்பெட்டியிலிருந்து எடுத்த கெட்டித் தயிருடன் (மேல் படிந்த ஆடையுடன்) பிசைந்து அவரவருக்கு பிடித்த ஊறுகாய்... எலுமிச்சையோ வடுமாங்காயோ, அல்லது முருங்கைக்காய் சாம்பாரில் உள்ள உருளைக்கிழங்கையோ தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் என்ன ஒரு சுவையும் நிறைவும்...! 

பாலின் சுவையில் கட்டுண்டு தான் இன்னும் முழுமையாக நான் உணவிலிருந்து அதை விட முடியாமல் இருக்கின்றேன்,அது நம் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல என்று அறிந்த பின்பும்..... அன்றாட ப்பழக்கங்கள் எவ்வளவு வலிமையானவை என்பதை இந்த விஷயத்தில் நான் முழுமையாக உணர்கிறேன்.

இன்று சிந்து மாட்டு பால், நாட்டு மாட்டு பால் என்று பல வேறுபாடுகளைப் பரவலாகப் பேசுகிறோம்.  நாட்டு மாட்டுப்பால்தான் நம் உடம்பிற்கு உகந்தது என்கிறோம்.
எங்கள் வீட்டிலும் இப்பொழுது அதைத்தான்  வாங்குகிறோம். பாலே நம் உடம்புக்கு உகந்ததா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்.... அது மிக மிக உகந்தது கன்றுக்குட்டிக்கு மட்டும்தான். பழக்கம், மற்றும் வியாபார சூட்சுமங்களின் காரணமாக நாம் இந்தப் பாலை விட முடியாமல் இருக்கிறோம்.
 
ஊடகங்களின், குறிப்பாக யூடியூபின் உதவியால் இப்பொழுது தாவரத்திலிருந்து பால் எடுக்கும் முறையும் தெரிந்துகொண்டுள்ளேன்.

பச்சை நிலக் கடலையை ஊறவைத்து, அரைத்து அதை வடிகட்டினால் பால் போலவே, அதைவிடத் திரட்சியாக வருகிறது. வேர்கடலை வாசத்தை மட்டும் நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. அதிலேயே மோரும் தயிரும் செய்துகொள்ளலாம். பணம் புழங்கும் நாட்களில் நிலக்கடலைக்கு பதிலாக பாதாம் அல்லது முந்திரி உபயோகிக்கலாம்.

என்னுடைய தோழிகளில் ஒருவர் கடந்த ஒரு வருடமாக பால் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்கள் யாவற்றையும் விட்டுவிட்டார். ஆரோக்கியத்திற்காக என்று நினைக்கிறேன். ஆனால் அவருக்கு தயிர் என்றால் உயிர். சமீபத்தில் நான் இந்த நிலக் கடலையில் இருந்து எடுக்கும் பால் பற்றிக் கூற, அவரும் அதை முயற்சி செய்து இந்த நிலக்கடலை பாலினால்,  தயிர் மற்றும் தயிர் சாதம் போன்றவை உண்ண முடிவது பற்றி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.இந்தத் தயிரை அவர் முதன்முதலில் உண்டது அவர் வீட்டில் ராகிக்களியும் கீரையும் செய்த அன்று- அருமையான 'காம்போ'......

🐮🐃🐂🐄🐄🐂🐃🐃🐂🐄🐮

👇

காலையில் அருந்தும் கமகம குளம்பி
மாலையிலருந்தும் மசாலாத்தேநீர்,
இரண்டும் மணக்கத் தேவை என்ன?
ஆ வது கொடுக்கும் பாலமுதம்!

பாலைப் போல நிறமென்றோம்,
பாலில் வடித்த முகமென்றோம்,
குணத்திலவர் பசுவென்றோம்,
பசுவைக் காமதேனென்றோம்!

பால் சுரப்பது
கன்றுக்கென்று.... 
காப்பி வேண்டும் நமக்கன்று!
பிடுங்கிக் குடித்தோம், பரவாயில்லை....
பசுவைக் காத்ததன் ஆயுள் வரையில்,
நன்றாய் வாழ வைத்தோம் என்றால் 
நன்றி மறவா மனிதராவோம்!

இதனினும் திரண்டது எருமைப்பால் 
அதனையும் நாமே குடித்து மகிழ்ந்தோம், 
எருமைப்பாலில் உறைந்த தயிர்
உண்பதென்றால் எனக்கும் உயிர்!

பாலைக் கறந்து குடித்த பின்பு எமனின் வாகனம் எருமை என்றோம்,
நல்ல சகுனம் இல்லை என்றோம்!
பற்பல விடயம் தனிலே இன்று 
விரிந்திருக்கும் நமதறிவு, இதிலும் விரிந்தால் உயர்வது நாமும்
நமதுள்ளே வாழும் மனிதம் தானும்!









Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி