சின்னஞ்சிறு சமூகம்

சின்னஞ்சிறு சமூகம்

குளித்து முடித்து
அறையைக் கழுவ,
கண்ணில் பட்டது
சுவற்றுள் நகரம்,

நகரின் வாயில்
சுவரின் ஓட்டை,
வாயில் வழியே 
வெளியே வந்தது,
சின்னஞ்சிறிய 
எறும்பு கூட்டம்..

தரையில் கிடந்தது
பூச்சியின் உடலது 
எடுத்துச் சென்றது 
எறும்புக் கூட்டம்!
வாயில் சிறியது
பூச்சி பெரியது !
பாவம் எறும்பெனப்
பரிதாபப்பட்டேன்.

ஆனால் எறும்புகள் 
அசரவில்லை,
பூச்சியைப் பார்த்து 
பதறவில்லை,
சுற்றி வளைத்தன 
பூச்சியினுடலை,
திருப்பி விட்டன 
'ட' வடிவில்,
தள்ளியும் இழுத்தும்
தாங்கியும் தூக்கியும்,
கொண்டு சென்றன
பூச்சியினுடலை.

செய்யும்  செயல்
செப்புடன்  முடிந்தது,
எறும்புக் கூட்டம் கலைந்து, நகருள் சென்று மறைந்தது.

சிந்தனை ஓட்டம் என்னுள்ளே....
பூச்சியினுடலை பார்த்ததும் அதிரவுமில்லை அஞ்சவுமில்லை, 
அடுத்த காரியம் என்னென்று
அக்கணமே இறங்கிய எறும்புகள்!
நூற்றுக்கணக்கில் எறும்பிருந்தும்,
நூலிழை கூட குழப்பமில்லை, வந்து போன சுவடில்லாமல் 
வந்த வேலை முடித்த கூட்டம்!
சுவற்றில் நீரை அடித்திருந்தால்
சிதைந்திருக்குமே அந்தக்கூட்டம்?

ஆரம்பமானது என் பழக்கம்
சுவரில் தரையில் எறும்புகள் இருந்தால், குளிப்பதெல்லாம்  
எறும்புகள் நகருள் சென்றபின்னாலே!

🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜
 

கடந்த சில வருடங்களாக,
நான் எப்பொழுது வீடு பெருக்கினாலும்
குப்பையுடன் செல்லும் எறும்புகளை பார்க்கும் பொழுது சிறிது சங்கடமாக இருக்கின்றது.
நான் மெதுவாக எறும்புகளை அவற்றின் கூட்டம் அருகே தள்ளி விட்டுவிட்டு, முடிந்தவரை எறும்புக்குக் காயமாகாமல் பெருக்க முயற்சி செய்வேன். அதேபோல்தான்  வாஷ்பேசின் கழுவும் பொழுது மற்றும் தரையை துடைக்கும் பொழுதும். இதெல்லாம் இப்பொழுது பார்த்து பார்த்து செய்கிறேன்..... இத்தனை வருடங்களாக இப்படி இல்லை.

என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் நாங்கள்  கோவையில் இருந்த பொழுது ஆர்எஸ்புரத்தில் குடியிருந்தோம்.
அங்கு, எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது..... வெள்ளை உடையில் ஜைனர்கள் நடந்து வருவார்கள், முகத்திற்கு முகமூடி கட்டிக்கொண்டு முன்னால் ஒரு மயிலிறகு போல் எதையோ வைத்து நிலத்தைப் பெருக்கிக்கொண்டே நடந்து வருவார்கள். வாயின் உள்ளே சென்று எந்த பூச்சியும் சாகக்கூடாது, மற்றும் நிலத்தில் இருக்கும் பூச்சியை தெரியாமல் மிதித்து அவை சாகக் கூடாது என்ற கொள்கையாகத்தான் இருக்க வேண்டும். அவர்களை நினைத்தால் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது முடிந்தவரை யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் அவர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை ஸ்மூத்தாக நடத்திச் சென்று தாங்களும் சந்தோஷமாக இருந்தார்கள் என்ற கேள்வி என்னுள் எழுகிறது. சமீப காலங்களில் இதுபோன்ற மனிதர்களை நான் பார்க்கவே இல்லை.
நான் சொல்வது கிட்டத்தட்ட ஒரு 45 வருடங்களுக்கு முன்பு நான் பள்ளியில் படிக்கும் பொழுது.














Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி