இயல்பு மாறலாமா

இயல்பு மாறலாமா?

இயற்கை கொடுத்த இயல்பினிலே, 
சிரித்துப் பேசும் தன்மையிலே
பேசா மடந்தை அமைதியிலே,
முந்தித் தள்ளும் வேகத்திலே பிந்தி நிற்கும் பொறுமையிலே,
ஒருவருக்கொருவர் மாறிடும்
குணங்கள் நிறைந்த பேரிடர்(😜)
மனிதர் என்ற மானிடர்!
கூடப்பிறந்த குணத்தை
மாற்றுவதென்பது எங்கனம்? 

மாற்ற முயன்றால் வந்திடும்
சுதந்திரம் இல்லா சூழலிலே,
இயற்கை மாறிய பேச்சிலும்
இயல்பில்லா நடத்தையிலும்,
சிறு இறுக்கம் பிறக்கும் மனதினிலே....
இறுகிய மனதில் இயைந்த இல்லம்
இனிதாய் இருப்பது இயலாது!

கையது ஒன்றே என்றாலும் விரல்கள் எல்லாம் வேறாகும் குட்டைவிரலை நீளமாக 
நீளும் விரலை குட்டையாக
மாற்றுவதென்பது எங்கனம்? 
தாயும் சேயும் ஆனாலும் 
கணவன் மனைவி என்றாலும் 
தமையன் தம்பி 
தமக்கை தங்கை யாராயிருந்தபோதிலும்,
உடன் பிறந்த குணம், அதை 
மாற்றச் சொல்லா மனம், 
அதுவே வாழ்வில் சுகம்!


குடும்பம்

நான் பொதுவாக ஜாஸ்தி பேசும் இயல்பு உடையவள் அல்ல. சோசியல் டைப் என்று கூற முடியாது, பிரெண்ட்லி டைப் என்றும் கூறமுடியாது. கொஞ்சம் 'அன்சோசியல் மற்றும் அன் பிரெண்ட்லி' என்று சொல்லலாம்.
அடிக்கடி என் தாய் கூறுவார் இவள் யாரிடமும் பேச மாட்டாள் யாரைப் பார்த்தாலும் பிடிக்காது என்று. ஒரு காலத்தில் நான் அதைப் பற்றி மிகவும் குற்ற உணர்வாய் உணர்ந்திருக்கிறேன். இப்பொழுதெல்லாம் இதைப்பற்றிய குற்ற உணர்வை முடிந்தவரை மாற்றிக்கொள்ள முயல் கிறேன். 
இயற்கை கொடுத்த இயல்புக்கு நான் ஏன் குற்ற உணர்ச்சியுடன் காலம் தள்ள வேண்டும்? இயல்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி, எல்லா மனிதரும் ஒரே போல் இருந்து விட்டால் வாழ்வில் சுவை ஏது? சிலர் எல்லாரிடமும் நன்றாகப் பேசுவார்கள், சிலர் பேச மாட்டார்கள், சிலர் பிடித்தவரிடம் பேசுவார்கள், சிலர்... அதுவும் இருக்காது. நான்  எனக்கு ஒத்து போகக்கூடிய மனிதர்களிடம் கொஞ்சம் பேசுவேன், நன்றாக சிரித்துக் கூட பேசுவேன். ஆனால் பெரிய கூட்டங்கள் இருக்கும் விழாக்கள், திருமண விழாக்கள் போன்ற இடங்களில் என்னால் அவ்வளவு சுமுகமாக இருக்க முடியாது, அனைவரிடமும் சிரித்துப் பேச முடியாது. இது என்னுடைய இயல்பில் ஒருபகுதி.

இதே போல் என்னுடைய இயல்பில் இருக்கும் வேறு சில குணாதிசியங்களைப் போல மற்றவர்களுக்கும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.
தவறென்பதை நான் மிக சமீபத்தில் தான் 🙄உணர்ந்தேன்.

சிலர் வெளியில் செல்லும் போது அடித்துப் பேசி தங்கள் காரியத்தை சாதிப்பார்கள் சிலரால் அது முடியாது.
பல வருடங்களுக்கு முன்பு திருமணமான முதல் பத்து பதினைந்து வருடங்கள் என் கணவர் பிஎச்டி படிப்பு படித்துக்கொண்டிருந்த பொழுது..... அவருடன் வேலை பார்த்த பலர் அவருடைய உதவியை நாடுவார்கள்.  அவருக்கு ஆங்கில மொழி சரளமாக வரும் என்பதால் தங்கள் தீசிஸ்ஸை எழுதிக் கொடுக்க உதவுமாறு கேட்பார்கள். அவரும் நாட்கணக்கில் அமர்ந்து அவர்களுக்கு அதை செய்து கொடுப்பார். ஆனால் அவருடைய தீசிஸ் வேலை தாமதமாகிக் கொண்டே வந்தது, கிட்டத்தட்ட 12 வருடங்கள் அவர் பிஹெச்டி படிப்பு படித்து உலக சாதனை புரிந்தார்.

எனக்கு அந்த காலத்தில் பெரிய வருத்தமாகவும் கோபமாகவும் இருந்தது, தன் வேலையை கவனிக்காமல் மற்றவர்களுக்கு செய்கிறாரே, இது தள்ளிக் கொண்டே போவது பற்றி கவலையே இல்லையா என்று!? இப்போது நினைத்துப் பார்த்தால் அது அவருடைய இயல்பு அதற்காக நாம் வருத்தப்பட்டு பிரயோசனமில்லை என்பது தெரிகிறது.
அதேபோல் அவருடைய நண்பர்களிடம் நான் சகஜமாகப் பேசாதது அவருக்கு ஒரு வருத்தம்.
அது என்னுடைய இயல்பு என்னால் எதுவும் செய்ய முடியாது.

பல நேரங்களில், குறிப்பாக ஒரு குடும்பமாக ஒரே இல்லத்தில் வாழும் பொழுது அவர் ஏன் இப்படி இருக்கிறார்? நாம் இப்படி இருக்கிறோமே, அவரால் என் முடியவில்லை என்ற ஒரு எரிச்சல் அனைவருக்கும் வரும். ஆனால் அடிப்படையில் அவரவர் இயல்பைத் தாண்டி யாராலும் நடந்து கொள்ள முடியாது என்பதுதான் உண்மை.
அப்படி ஒருவரை செய்யச்சொல்லி சொன்னால் அவர் அதை ஒரு சிரமத்துடன் தான் செய்வார்.
அந்த சிரமம் அடிமனதில் என்றும் ஒரு எரிச்சலாகப் பதிந்து விடும் என்று நினைக்கிறேன். 

இயல்பை ஒட்டியே நாம் நம் குணநலன்களை வளர்த்து அவற்றை சீர் செய்வதுதான் நன்மையோ?
அதுதான் சரியாக வருமோ காலப்போக்கில், என்று தோன்றுகிறது. பழக்கவழக்கங்கள்,மற்றும் குணநலன்களை சீர்செய்து வாழ்வில் மேன்மை அடைவதும்  வாழ்வின் ஒரு பகுதிதான், ஆனால் அது இயல்பை ஒட்டியே இருப்பது இன்னும் கொஞ்சம் செம்மையாக வரும் என்று தோன்றுகிறது.மாற்றிச் செய்யும்பொழுது அதில் ஒரு நெகட்டிவ் இஃபெக்ட் வந்துவிட வாய்ப்பு இருக்கலாம்.





Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி