வௌவால்

 வௌவால்


பூச்சி புழுவைத் தினமும் தின்று 
பயிரைக் காப்பது மட்டுமன்று,
மகரந்தமும் கூடச் சேர்த்து
மரமும் செடியும் வளர்க்கும் சிநேகன்,
உழவருக்கு உற்ற தோழன்,
கொசுவை உண்ணும் கரிய நண்பன்,
இயற்கை கொடுத்த இரவுப்பறவை,
பாலூட்டியாம் அழகுப் பறவை    வவ்வால் என்ற சின்னப்பறவை!

வவ்வால்பறவை கடித்துவிடும்,  
வந்துசேரும் நோய்நொடிகள்,
அருகில்கூட செல்லாதே அப்புறப்படுத்து அதன் வீட்டை,
என்ற எண்ணம் குறுகியது,
குதிரை கண்ணை அடைத்தது போல!

ஓடும் விலங்கு பறக்கும் பறவை 
ஊறும் பிராணி நீந்தும் மீன்கள்
அனைத்தும் தேவை இவ்வுலகில்!
அழித்துவிட்டால் நாமும் இல்லை!
நாமே நம்மை உணர்வதென்றோ 
நல்ல நாளும் அன்றே அன்றோ?


வேண்டாமரமா?!
 -----------------------

கடந்த 20 வருடங்களாக எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அல்லது சில நேரம் நானே வாய்ப்பை உண்டாக்கிக் கொண்டு மரக்கன்றுகளை வாங்கி, கிடைத்த இடத்தில் எல்லாம் நட்டு, முடிந்தவரை அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் செய்கிறேன். அவை அனைத்துமே நன்றாய் வளர்ந்ததாகக் கூற முடியாது. சிலது வந்தன, சிலது வந்து அழிந்துவிட்டன, சிலது வராமலே அழிந்துவிட்டன. பல வருடங்களுக்கு முன்பு என் இளைய மகன் பிளஸ் டூ படிக்கும் பொழுது சேலத்திற்கு அருகில் ஒரு பள்ளியில் படித்ததால் நானும் அங்கு சென்று ஒரு வாடகை வீடு எடுத்து அவனுடன் இருந்தேன். அப்பொழுது மழைக்காலம் வந்த பொழுது சில மரக்கன்றுகளை வாங்கி அங்குள்ள அரசினர் பள்ளியில் நடந்த குழந்தைகளுக்கு ஒரு சிறிய விழா போல் நடத்தி கன்றுகளை நட்டோம். அந்த மரங்கள் நன்று வளர்ந்து, நான் சில வருடங்களுக்குப் பிறகு அங்கு சென்றபோது பார்த்து மகிழ்ந்தேன். அதேபோல் நான் திருப்பூரில் கண் மருத்துவமனை நடத்திக் கொண்டிருந்த போது,நாங்கள் இருந்த வாடகைக் கட்டிடத்தைச் சுற்றி நிறைய மரங்கள் வைத்து அன்றாடம்  நான் அல்லது என்னிடமிருந்த பணியாளர்கள் நீரூற்றி அவற்றை வளர்த்து கிட்டத்தட்ட ஒரு 15 அடி உயரம் அவை வந்துவிட்டன. அந்தக் கட்டிடத்தை நான் காலி செய்த பிறகு ஒருமுறை போய் பார்த்த பொழுது அவற்றை எல்லாம் வெட்டி விட்டிருந்தார்கள்.

 சர்க்கரை பழம் என்று பேச்சு வழக்கில் கூறப்படும் ஒரு மரம் வேகமாக வளர்ந்து நல்ல நிழல்தரும். அதில் காய்க்கும் சிறிய சிவந்த கனிகள் உண்பதற்கும் இனிப்பாக இருக்கும்.
 ஆனால் அந்த மரத்தில் வவ்வால்கள் வந்து அமர்ந்து விடும், அது அவ்வளவு நல்லதல்ல, சுற்றுப்புறத்தை அசுத்தம் செய்யும் என்றெல்லாம் கூறி பொதுவாக அந்த மரத்தை பலர் வெட்டி விடுகிறார்கள். காலங்காலமாக வந்த ஒரு பழக்கம்தான் தான் இது எனலாம்.... மற்றபடி இக்கூற்றில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. சுற்றுப்புறத்தை அசுத்தம் செய்வதில் மனிதனை வெல்ல எந்த விலங்கும் பறவையும் இன்னும் பிறக்கவில்லை.....
 
வேறு எந்த விலங்கும் விலங்கினமும் உணவு உண்டு வெளியே வரும் கழிவுகள் மண்ணுக்கு நன்மையும் மரம் பரப்புவதற்கு விதைகளையும் கொடுக்கின்றன.
அவற்றின் கழிவுகளால் உலகுக்கு நன்மை வருகிறதே ஒழிய தீமை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. நாம் வீசும் குப்பைகளாலும் அசுத்தங்களாலும் ஏதும் நன்மை பூமிக்கு இருக்கிறதா என்று 🤔யோசித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட எதுவுமே இல்லை.... நன்மை இல்லாவிட்டால் பரவாயில்லை, தீமை அதிகம்😱.

இப்பொழுது நான் கோவையில் குடியிருக்கும் என் வீட்டை சுற்றி அந்த சக்கரைப் பழ மரங்கள் நான்கு இருக்கின்றன.
நான் நீரூற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அதை பார்த்தும் என் அருகில் குடியிருக்கும் ஒரு நபர் 'இவற்றை எடுத்துவிடுங்கள், நல்லதல்ல வவ்வால் வரும்' என்றார்.... அவருக்கு நான் கூறினேன் வவ்வால்கள் சுற்றுப்புறத்துக்கு மிகவும் தேவையான ஒரு பறவை, மிகவும் நல்ல பறவை என்று.

நான் கூறிய அந்தத் தேவை என்ற வார்த்தையே கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் தான். இயற்கை கொடுத்த இந்த சுற்றுப்புறத்திற்கு எது தேவை எது தேவையில்லை என்று தீர்மானிக்க அந்த இயற்கை சுழற்சியில் ஒரு சின்ன, மிக சிறிய பகுதியான நாம் எப்படி தீர்மானிக்க முடியும்? நாம் உருவாக்கியதல்லவே அந்த சுற்றுப்புற சூழல்? நாமே அதில் ஒரு பங்குதான். இதில் இது வேண்டும் அது வேண்டும் என்று கூற நாம் யார்? அந்த அளவுக்கு நமக்கு அறிவு, இயற்கையையும் பிரபஞ்சத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளும் ஞானம், இதெல்லாம் இருக்கின்றதா என்ன?
நினைத்தே பார்க்க முடியாத பிரம்மாண்டமாக இருக்கும் பிரபஞ்சத்தில் நாம் ஒரு மிகச் சிறிய புள்ளி தானே?!
'நாம் இருக்கும் காலம் வரை நன்றாக இருந்து, முடிந்த வரை உலகை மாசுபடுத்தாமல் வாழ்ந்து விட்டுப் போவதே  கடமை'.... இதுவே சமீப நாட்களில் என்னுடைய வாழ்க்கைத் தத்துவம்.


https://youtu.be/8eaa0sSTFYE

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி