குளவி

குளவி

கடிக்கும் குளவி  அறிவோம் நாம்
காக்கும் குளவி அறிவோமா!
இலையும் பயிரும் உணவாக இருக்கும் புழுவும் பூச்சியும்,
தானே உணவாயாகிவிடும்
குளவியின் சின்னக் குஞ்சுக்கு!

புழுவை கூட்டில் அடைத்து
அதனுள்ளே முட்டை வைத்து
கூட்டை இழுத்து மூடிவிடும்
குளவிக்குஞ்சின்  தாய்க்குளவி!
பொரித்து வரும் குளவிக் குஞ்சு
வளரும் தானே புழுவைத் தின்று!

நாம் குளவியைக் கண்ணால் கண்டதும்
எதிரி என்றொரு எண்ணம் 
மனதில் ஒருகணம் மின்னும்! 
உண்மை அதிலே உளதாவென்று
உணர்ந்து சிந்தனை செய்யலாம்,
பேச்சு வழக்கில் வருவதெல்லாம் 
பொய்யா, மெய்யா அறியலாம்!


 
பறந்து வரும் குளவி

சிறுவயது முதல் வீட்டில், மற்றும் விடுமுறைக்குச் செல்லும் கிராமங்களில், பெரியவர்கள் அனைவரும் குழந்தைகளிடம் 'சிர்ர்ர்' என்ற என்று மெல்லிய ஓசையுடன் பறந்து சுற்றும் குளவியைப் பார்த்தால் உடனே 
'குளவி! ஜாக்கிரதை,  கடித்துவிடும் தூரப்போ!'
என்று கூறுவதை பலமுறை கேட்டிருக்கிறேன். ஆகையால் குளவி என்றாலே சிறியதொரு அச்சமும்,அது நம்  எதிரி, என்ற ஒரு எண்ணமும் என் மனதில் லேசாக  இருந்தது..... பலரின் மனதில் அப்படி இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
ஆனால் சமீபகாலமாக யூடியூபில் வரும் சில வீடியோக்களை பார்த்தும், சிலரிடம் உரையாடிக் கேட்டதும், ஓரளவு சுற்றுப்புற சூழ்நிலை பற்றி சிந்திக்க ஆரம்பித்ததும், புரிகிறது அது யாருக்கும் எதிரி இல்லை என்று....

இந்த எதிரி நண்பன் என்ற கோட்பாடுகளும் நாமே உருவாக்கிக் கொண்டவையோ!?
எதிரியோ நண்பனோ அனவரும் உலகத்தில் பிறந்து, அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எதிரியாய் இருந்தாலும் நண்பனாய் இருந்தாலும் நம்மைப்போலே எல்லோரும் உலகத்தில் சுதந்திரமாக வந்தவர்கள், நமக்காகவோ, நம்மை நம்பியோ, அல்லது நம்மை எதிர்க்கவோ, நமக்கு உதவி செய்யவோ, இல்லை கெடுதல் செய்யவோ...... எதற்காகவும் எந்த உயிரும் பிறக்கவில்லை. 

ஒருமுறை என் மூத்த மகன் கூறினான் 'குளவி என்றால் பயப்படுகிறோம் அல்லவா..? அது உண்மையில் விவசாயத்திற்கு மிகவும் நன்மை செய்கிறது' என்று.... 'பூச்சி புழுவையெல்லாம் தின்றுவிடும், இல்லை என்றால் பூச்சி புழுவெல்லாம் பெருகி பயிர்கள் அழியக்கூடும்' என்றும் கூறினான்..
ஒரு வகையில் பார்த்தால் கிருமிநாசினி செய்யும் வேலையை குளவியும் செய்கிறது போலும். 
அதன் பிறகு நான் யூ-டியூபில் பார்த்த பல வீடியோக்களும் இந்த கூற்றை உறுதி செய்தன.
அதுமுதல் குளவியை பார்க்கும் பொழுது அதனுடைய வழித்தடத்தில் நிற்காமல் லேசாக ஒதுங்கி விட்டால் போதும் அது பாட்டுக்கு தன் வேலையை பார்த்துக்கொண்டு போகும், என்ற எண்ணம் இப்பொழுது வலுப்பெறுகிறது என் மனதில்.

https://youtu.be/fY6m89lLyrs

Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி