சிக்கன் மட்டன்

சிக்கன் மட்டன்

பசி வந்த நேரம்
கூட்டமாக மேயும் மானினத்தைக் கண்டு,
ஓட்டமாக ஓடிப் போய் வேட்டையாடி உண்ணும் காட்டுப் புலிகளும்.....

சாகும் அந்த நிமிடம் வரை வாழ்ந்த மானுமே,
காட்டினுள்ளே ஓடியாடித் திரிந்திருந்ததே,
செழித்திருந்த பச்சைகளை உண்டு வாழ்ந்ததே!
பிறந்து வந்த நிமிடம் முதல் கூண்டுக்குள்ளேயே 
கைதியாக வைக்கவில்லை அந்தமானையே,
அருமையான மிருகமான காட்டுப் புலியுமே!

கூண்டுக்குள்ளே கோழியும் கொட்டிலுள்ளே ஆட்டையும் அடைத்து வைத்து வளர்த்து வந்து
வெட்டி உண்ணும் ஓரினம் மனிதனென்னும் மானுடம்.

பிறக்கும் உயிர் எல்லாமே
சாக வேண்டுமே
ஐயப்படவில்லை அதை யாருமிங்கேயே!
சாகும்வரை ஓடியாடும் சுதந்திரமில்லையெனில்..
கூண்டு வாழ்க்கை என்பது
பிறந்ததுமே சாவது!

பிறந்து வந்த நிமிடம் முதல்
கூண்டிலடைந்து, கால்கள் கெஞ்ச நிற்பதற்கு,
குற்றமென்ன செய்ததந்த
சிறியக்கோழிக்குஞ்சு?
நன்றி இல்லா மனிதனுக்கு உணவாகிப் போவதே,
மகாபெரிய பெரிய குற்றம்... அதை உணரவில்லை கோழியே!
............
இல்லை உணர்ந்ததோ என்னவோ யாரறிவாரோ!


🐑🐏🐃🐂🐄🐔🐓🐣🐤🐥


கடாவெட்டும் கோழிக் குழம்பும்
_______________________________

பள்ளிக் காலங்களில் விடுமுறைக்கு எப்பொழுதும் நாங்கள் அத்தை ஊருக்குச் செல்வோம்.
அங்கு கோடை விடுமுறையில் உள்ளூரில் உள்ள அம்மனுக்கு விழா நடக்கும், 'அம்மன் நோம்பு  சாட்டுதல்' என்று வருடந்தோறும்.......

ரங்கராட்டினம், குச்சி மிட்டாய்
வேறு இனிப்புகள்,ஊதும் பீப்பிகள்,பலூன்கள், என்று குழந்தைகளுக்கு விருப்பமான பொருட்கள் அனைத்தும் வரும்.
காலை குளித்து உணவு உண்டு விட்டு வெளியே சென்றால் எங்கள் வேலையே கோவிலுக்கும் வீட்டுக்கும் மாறி மாறி நடப்பதுதான்.நாங்கள் வீட்டுக்கு வந்தவுடன்,  விழாவிற்காக அடிக்கடி  வந்திறங்கும் விருந்தினர்களில் புதிதாய் வந்திருக்கும் விருந்தினர் அனைவருக்கும் காசு கொடுப்பார்.
ஐந்து பைசா கொடுப்பவர்கள் சாதாரணமானவர்கள், பத்து பைசா கொடுப்பவர்கள் என்றும் எங்கள் ஹீரோக்கள். என் தந்தையின் அண்ணா, எங்கள் பெரியப்பா எப்பொழுதுமே பத்து பைசா தான் கொடுப்பார். ஆகையால் என் கண்களுக்கு அவர் ஒரு பெரிய ஹீரோ போல்தான் எப்பொழுதுமே தென்படுவார்.
(மேலும் அவர் எப்பொழுதும் ஒரு வெளிர் மஞ்சள் நிறத்தில் முழுக்கை டெர்லின் சட்டை அணிந்து கைகளை மடித்து விட்டிருப்பார்.எனக்கு அந்த வேட்டி சட்டையும், அலையலையான முடியுடன், அவருடைய இலேசான புன்னகை பூத்த முகமும் உருவமும் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது.
இத்தனைக்கும் அவர் மிகுந்த கோபக்காரர் ....ஆனால் எங்களை ஒரு சிரிப்புடன்தான் பார்ப்பார்......  இளம் வயதிலேயே இறந்துவிட்டார்.)

அந்த பத்து பைசாவை எடுத்துக்கொண்டு திரும்ப கோவிலுக்கு ஓடும் பொழுது அவ்வளவு உற்சாகமாக இருக்கும். மூன்று நாட்கள் நடக்கும் விழாவில் ஒரு நாள் இரவு முழுவதும் நாடகம் நடக்கும். நாங்கள் அனைவரும் கண் விழித்து கிட்டத்தட்ட விடியற்காலை மூன்று நான்கு மணி வரை அதைப் பார்ப்போம். உறக்கம் வந்தால் அங்கேயே  பெரியவர்கள் மடியில், அல்லது விரித்திருக்கும் ஜமுக்காளத்தில் படுத்து உறங்கி விடுவோம்.
நன்றாக விடிந்த பின் நடந்து வீட்டுக்கு வந்துவிடுவோம். வீடு கோவில் என்று எல்லாம் ஒரு சிறிய கிராமத்தில் இருப்பதால் ஒரு இரண்டு நிமிட நடையில் வீடு வந்து சேர்ந்துவிடலாம். எந்த விதமான பயமுமில்லை. இன்று அது போன்ற ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவோ நம்பவோ முடியாது.

அந்தக் காலங்களில் நாங்கள் இளம்பெண்களாக இருந்தபோதும் அனைவரும் மொட்டை மாடியில்தான் படுத்துறங்குவோம், வீட்டுக்குள் மிகவும் புழுக்கமாக இருந்ததால்.

இதே விழாக்களில் வருடந்தோறும் எருமைக்கடா  வளர்த்து பலி கொடுப்பார்கள். அந்த அம்மனுக்கு முன்னால் ஒரு பெரிய குழி வெட்டி வரிசையாக நிறுத்திவைத்து ஒவ்வொரு கடாவாக கழுத்தை வெட்டி உள்ளே தள்ளுவார்கள் நாங்கள் அதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தோம் என்று நினைப்பதற்கு எனக்கு இன்று அதிர்ச்சியாகவும் மிகவும் சங்கடமாகவும் இருக்கிறது. ஆனால் குழந்தைப் பருவத்தில் அந்த மிருகங்களின் வலியோ வேதனையோ பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
அந்த அளவுக்கு ஆழ்ந்து சிந்திக்கவும் இல்லை. கொஞ்சம் எனக்கு சிந்தனை சக்தியே குறைவு தானோ என்னவோ....😯😰

வேறு சில நேரங்களில் ஏதும் வேண்டுதல் இருந்தால் குலதெய்வக் கோவிலுக்கு சென்று ஆட்டுக் கிடாய் வெட்டிக் குழம்பு வைப்பார்கள். எங்கள் ஊர்ப்பக்கம் அதை 'அடசல் குழம்பு' என்று சொல்வார்கள். அது போன்ற ஒரு ருசி இன்றுவரை நான் எங்கேயும் சிக்கன் குழம்பு மட்டன் குழம்பில் கண்டதில்லை என்று சொல்லாம். சாதத்துடன் சேர்த்து உண்ண மிகவும் நன்றாக இருக்கும், வயிற்றுக்கும் எந்தக் கெடுதலும் செய்யாது. எவ்வளவு சாப்பிட்டாலும் எந்தவிதமான பக்கவிளைவும் இன்றி நன்றாகவே இருக்கும். ருசி ஒருபுறம் இருந்தாலும் இப்பொழுது நான் அசைவத்தை விட்டு சில காலம் ஆகிவிட்டது.

அதேபோல் அத்தை ஊரில் சிக்கன் செய்வதென்றால் மேய்ந்து கொண்டிருக்கும் பல கோழிகளில் ஒன்றோ இரண்டோ பிடித்துக் கொண்டு வந்த அறுத்து குழம்பு வைத்து விடுவார்கள். அடசல் குழம்பு போலவே அதுவும் மிக நன்றாக இருக்கும். ஆனால் அந்தக் கோழிகள் அனைத்தும் பகலில் மிகவும் உற்சாகமாக அங்குமிங்கும் அலைந்து கொண்டும் மண்ணைப் பிராண்டி புழுக்களை உண்டு கொண்டுமிருக்கும்.
காலை மாலை என இரு நேரம் அத்தை அதற்கு கம்பு போன்ற தானியங்களை வீசுவார். இருட்ட ஆரம்பிக்கும் முன்பே அவைகள் வந்து தங்கள் இடங்களில் அடைந்து கொள்ளும்.
அந்தக் கோழிக்கூட்டத்தின் மீது மேல் ஒரு இரும்பு  கவளையைக் கவிழ்த்து மேலே ஒரு கூடையை வைத்து மூடிவிடுவார்கள்.
இல்லாவிட்டால் இரவில் நரி வந்து பிடித்துக் கொண்டு போய்விடும்.
காலை திறந்து விட்டு தீவனம் வீசி விடுவார்கள்.
அதன் பிறகு அந்த கோழிகளுக்கு மாலை வரை சுதந்திரம்தான், ஊர் முழுதும் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரிந்துவிட்டு மாலையானால் வீடு வந்து சேர்ந்து விடும். குழம்பு வைக்கும் அன்று மட்டும் காலை கவளையைத் திறந்தவுடன் இரண்டு கோழிகளைப் பிடித்து வைத்து விடுவார்கள், மற்றவற்றை அனுப்பிவிடுவார்கள் மேய்வதற்கு.

அந்தக் காலத்திலும் அசைவம் சாப்பிடாமல் இருந்திருக்கலாமே என்று அடிக்கடி தோன்றுகிறது. அசைவம் உண்டு பழக்கப்பட்டவர்களுக்கு அது இல்லாமல் இருப்பது கடினமே. பழக்கமே இல்லாமல் இருந்து விட்டால் எல்லாம் சுலபமே. இப்பொழுதும் எனக்கு அசைவ உணவு பிடிக்காமல் நான் விடவில்லை, அது வேண்டாம் என்கிற காரணத்தினால் விட்டிருக்கிறேன். முட்டையும் கூட உண்ணாமல் தான் இருந்தேன் வேறுவழியின்றி இப்பொழுது கார்போஹைடிரேட் உணவு எடுக்க கூடாது என்பதற்காக முட்டையும் பாலும் உணவில் சேர்க்கிறேன்.
விரைவில் அதையும் விட்டுவிட ஏதும் வழி முறை இருக்கிறதா என்று பார்க்க போகிறேன்.

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி