முருகன்



முருகன்

மனம் கவர்ந்த அழகன் மால்மருகன் முருகன்
சின்னஞ்சிறுவயதிலே 
சிந்தை வந்த சரவணன்.

கையில் ஏந்தும் வேலும்,
நீரணிந்த  நெற்றியும்
இதழ் நிறைந்த புன்னகையில்
அழகன் எந்தன் வேலன்!

கம்பீர உருவத்தை
நினைத்த மறுகணத்தில்
மனதில்உறுதி தருமே
குமரன் அவன் பலமே!

எதுவென்றாலும் துணையிருப்பேன்
அச்சமின்று மறந்து விடு,
எந்தச் சூழல் என்றாலும்
எந்தன் வேலை ஏந்திக் கொண்டு,
அருகில் வந்து நின்றிடுவேன்!

மனிதன் உன்னைக் காத்திடுவேன்,
மயிலும் பாம்பும் சேவலையும், கூடச் சேர்ந்து காத்திடுவேன்,
மலர்ந்து சொல்லும் பாவனையில்
சிரிக்கும் முருகன் உருவமே!
 🙏

இளமையில் பக்தி

எங்களுக்குக் குழந்தை பருவத்தில் முருகனின் அறிமுகம் பள்ளிப்படிக்கும் காலத்தில் வருடம் ஒருமுறை பழனி செல்வதுதான். அம்மாவும் அப்பாவும் ஏதோ வேண்டுதல் இருந்ததற்காக ஆறு வருடங்கள் விடாமல் பழனி சென்றார்கள். ஏதாவது கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து இருப்பார், அல்லது நண்பரின் காரில் அழைத்துச் செல்வார் அப்பா. காரை நிறுத்திவிட்டு வின்ச்  எனப்படும் ஒரு கயிற்றால் இழுக்கப்படும் வண்டியில் மலையின் மேலே போவோம். ஓரிருமுறை யானப்பாதையிலும் நடந்து போய் இருக்கிறோம், படியில் ஏறியது இல்லை என்று நினைக்கிறேன். இறங்கி வரும்போது படி வழியாக வேகமாக இறங்கிய ஞாபகம் இருக்கிறது. எனக்கு இறங்கி வரும் போதே சில நேரம் லேசாக மூச்சு வாங்கும், ஆனால் ஒரு நாளில் பலமுறை சர்வசாதாரணமாக படிவழியே மேலும் கீழும் போகும் இளம்பூசாரிகளை கவனித்து  ஆச்சரியப்பட்டது ஞாபகம் இருக்கிறது.

கோயிலுக்கு உள்ளே கர்ப்பக்கிரகத்தின் அருகில் செல்வதற்குத் தனியாக அனுமதிச்சீட்டு வாங்க வேண்டும். உள்ளே சென்று சிறிது நேரம் அமர்ந்த பிறகு முருகனின் சிலை அலங்கார ரூபத்தில் (சந்தனம் அல்லது விபூதிதான் பெரும்பாலும் ) பார்த்ததாக ஞாபகம்.....
அவருடைய சாந்தமான முகம் மிக அழகாகவும் இருப்பது போல் எனக்குத் தோன்றும்... அங்கு போய் அமர்ந்து தெய்வத்தைக் கும்பிடும் பொழுது மனம் ஏதோ ஒரு அமைதி அடைவது போல் ஒரு உணர்வு..... இப்போது நினைத்துப் பார்க்கும்போது அவை எல்லாம் ஒரு பிரமையோ எனத் தோன்றுகிறது.
நமது மனம் இந்திந்த இடத்தில் இப்படி இப்படி உணர வேண்டும் என்று கண்டிஷனாகி இருக்கின்றதோ........🤔?

பிற்காலத்தில் ஒரு முறை பழனி சென்ற பொழுது அங்கு போகர் என்ற ஒரு சித்தர் செய்து வைத்த ஒரிஜினல் பழனி முருகன் சிலை இப்பொழுது உள்ளே வைத்து விட்டார்கள் என்றும், வேறு புதியதாக சிலைதான் கர்ப்பக்கிரகத்தில் வைத்திருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.
போகர் சிலை ஏதோ நவபாஷாணத்தில் செய்தது என்றும் பல மருத்துவ குணங்கள் அடங்கியது என்றும் அதனால்தான் அதன்மீது ஊற்றிய சந்தனமும் பஞ்சாமிர்தமும் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் கேட்டதாக ஒரு ஞாபகம்.

அதற்கு முன் இளம்பிராயத்தில் விவசாயக் கல்லூரி க்வாட்ர்ஸில் நாங்கள் குடியிருந்த பொழுது, ஒருமுறை மருதமலை சென்றுவிட்டுத் திரும்பி வரும்போதும் பஸ் இல்லாததால் நடந்தே வீட்டிற்கு வந்தோம்.
பேசிக் கொண்டும் ஓடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் சிரித்தபடியே வந்தோம் .
களைப்பே தெரியவில்லை கிட்டத்தட்ட ஒரு ஆறேழு கிலோ மீட்டர் தூரம் இருக்கும், அல்லது அதற்கு மேல் கூட இருந்திருக்கலாம்.

இப்பொழுதெல்லாம் கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை என்றே  தோன்றுகிறது. ஆனாலும் கடவுள் என்றோ ஆண்டவன் என்றோ கூறும்பொழுது முருகனின் நாமம்தான் வாயில் வருகிறது.

நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது எங்கள் தாய் படுக்கும்பொழுது எப்பொழுதுமே 'முருகா ஷன்முகா'
என்று கூறிக்கொண்டு படுப்பார்கள்.
நான் அவரைப் போல கலாட்டாவாக முருகா என்று கத்திக்கொண்டு பலமுறை உறங்கச் சென்றிருக்கிறேன்.
இப்போதெல்லாம் நிஜமாகவே முருகனை  ஒரு முறை அழைத்துவிட்டு தான் படுக்கிறேன்.

கண் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது உடன் வேலை பார்த்த  சீனியர் ஒருவர் கூறினார் முருகன் என்பவர் ஆதிகாலத்தில் வாழ்ந்த ஒரு மனிதர், வாழ்ந்து மறைந்த பிறகு கடவுள் கணக்கில் வைக்கப்பட்டவர் என்று....  முருகன் ஒரு 'தமிழ் தேவதை' என்ற வார்த்தையை அவர் பிரயோகப்படுத்தியது ஞாபகம் இருக்கிறது.
சில நேரங்களில் எனக்குத் தோன்றும் புத்தர் மகாவீரர் இயேசுநாதர் போல முருகனும் ஒரு காலத்தில் வாழ்ந்த மனிதர் தான்.... நாம் கடவுளாக  வைத்துக் கொள்கிறோமோ என்று.....?

இப்போது எனக்குக் கடவுள் நம்பிக்கை குறைந்து, எல்லாமே இயற்கை என்ற ஒரு உணர்வு  வந்திருக்கிறது. ஆனாலும் அந்த முருகனின் ஈர்ப்பு இன்னும் குறையவில்லை. ஒருவேளை அவர் அழகானவர் என்ற காரணத்தாலோ என்னவோ அல்லது தமிழ்க்கடவுள் என்று கூறிக் கொள்வதால் இருக்குமோ......? எது எப்படியாயினும் பகுத்தறியும் மனம் ஒரு புறம் இருந்தாலும், நாம் அறியாமல் நம்மை ஈர்க்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் எனக்கு இந்த முருகக் கடவுளும் ஒன்று.

அவ்வளவு தூரம் நான் முருகனை விரும்பினாலும் கல்லூரி படிக்கும் காலங்களில் அம்மனுக்குத்தான் எலுமிச்சம்பழ தீபம் வைத்து நல்ல கணவர் வேண்டும் என்று விரதம்  இருந்திருக்கிறேன் செவ்வாய்க்கிழமை தோறும்.

நமக்குக் கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்டி வைத்து நம் வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்கிறது என்றாலும் கடவுள் என்றோ அல்லது வேறு ஒரு உருவகப்படுத்தியோ இப்பொழுது என்னால் அந்த சக்தியை எண்ணிப் பார்க்க முடிவதில்லை.  இயற்கையில் உள்ள பல சக்தி வடிவங்களில்  இந்தக் கடவுள் என்று நாம் கூறுவதும் ஒன்றோ  என்று சில நேரங்களில் தோன்றும். அன்று தீபம் வைத்து வேண்டையதை நினைத்தால் சில நேரம் சிரிப்பு வருகிறது.



Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

புலியும் முறமும்

விலங்குகள் நம் போலவே அவர்களுக்கு நீதி தேவை

வைரஸ் வழங்கும் வாய்ப்பு

ஒரே மரம்

வாசலில் மண்புழு

டையப்பர் 👶

சிந்தனை சோம்பேறி

🥼👩‍🎓 🐓

வெல்வெட் பூச்சி