குப்பை

குப்பை 

'வீட்டைச் சுற்றி மரம் வளர்த்தால்
வீசும் காற்று சுத்தமாகும்'
என்ற சொல்லைக்கேட்டு,

'வீட்டின் முன்னே மரம் வளர்த்தால்
வாசல் நிறைய இலை விழுமே
வாரிப்போட யார் வருவார்?'
என்ற கேள்வி வருவதுண்டு....

மரத்தின் இலை மண்ணுக்குரமாம்,
மண்ணிலிருந்தே வந்திடுமாம்
மனிதன் உண்ணும் உணவெல்லாம்...

காரை தினமும் எடுத்துக் கொண்டு
கடையில்  பொருள்கள் பலவும்
வாங்கி
கூடை நிறைய நெகிழிப்பை கொண்டு நாம் வருகின்றோமே!

ஆற்று நீரை அடைத்துக்கொண்டு 
கடலின் உயிரைக் கொன்றுகுவிக்கும் 
நெகிழிப் பொருளே உண்மையில் குப்பை!

உண்மை குப்பை எதுவென்று
உணரா மனிதர் நாமல்லாம்,
உணர்ந்து மாறுவதென்னாளோ...
உலகம் அன்றே மாறிவிடும்!

சுத்தம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்னவென்பதின்
கருத்துப்படிவம் மாறல் வேண்டும்
நீரும்  காற்றும் நன்றாய்
நமக்குத்
தேவை என்றால் இவ்வுலகில்!!

🌳🌴🌿🌱🌲☘️🍀🌴🌳🌲🌳

பல வருடங்களுக்கு முன்பு ஒரு பேராசிரியருடன் உரையாட நேர்ந்தது.
அவர் பள்ளிக் குழந்தைகளை அடிக்கடி மலைகள் மற்றும் காடுகள் ஆகியவற்றுக்கு அழைத்துச் சென்று இயற்கையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் அடிக்கடி செல்லும் இடங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள சோலை வனங்கள்.
அவர் கூறியது என்னவென்றால் அந்த அடர்ந்த வனங்களில் மரங்களிலிருந்து கீழே விழும் இலைகள் அங்கேயே மண்ணுக்குள் மக்கி மிகவும் ஈரமாக இருக்கும்....அந்த ஈரம் தான் நீர் வற்றாமல் மழை நீரை பிடித்து வைத்து நமக்கு வற்றாத நதிகளாக கீழே இறங்கி வர உதவுகின்றன என்பது.
ஓரளவு இதில் உண்மை இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.
மரங்களும் இலைகளும் இந்த பூமியில் உயிர் வாழ மிக மிக இன்றியமையாதவை....குப்பை வரும் என்கிற காரணத்திற்காக மரம் வைக்காமல் இருப்பது சற்று அறிவீனம் என்பது என்னுடைய எண்ணம்.குப்பை என்றால் வேண்டாத பொருள், தகாத பொருள், நம் வாழ்விற்கு ஆகாத பொருள்- இதையே குப்பை என்று கூறவேண்டும்.
 
சுழற்சி வட்டத்தில் ஒரு பகுதியாக இருந்து உயிர்கள் வாழ உதவும்  எதுவுமே  குப்பை  ஆகாது என்று நான் நினைக்கிறேன்.
மரம் வைத்தால் அதில் வரும் இலைகளை நல்ல உரம் என்றோ அல்லது பூமிக்கு தேவை என்றோ வைத்துக்கொள்ளலாம் சொத்து என்று கூட வைத்துக்கொள்ளலாம், இயற்கை சொத்து என்பது போல..... 

என்னுடைய சொந்தக் காரர்கள் நிறைய பேர் வீட்டு வாசல் முழுக்கவும் சிமெண்ட் போட்டு பூசி மெழுகி பளிச்சென்று வைத்திருப்பார்கள். ஒரு மரம் கூட இருக்காது.
அதில் எப்படி ஒரு நல்ல சூழல் இருக்கும்? வீட்டிற்கு வெயில் காலத்தில் குளிர்ச்சியும் இருக்காது, குளிர்காலத்தில் குளிரும் அதிகமாக இருக்கும்.

மரம் இருந்தால் காற்று குளிர் வெயில் எல்லாமே அளவாகத்தான் வீட்டிற்குள் இறங்கும்.
பார்க்கப்போனால் வீட்டை சுற்றி மரம் வைப்பது ஒரு பெரிய பாதுகாப்பு வட்டம். எந்த மரமாக இருந்தாலும் வைக்கலாம்.
வீட்டின் முன்னே இந்த மரமாகாது பின்னே இந்த மரமாகாது என்பதெல்லாம் அறியாமையால் வந்த எண்ணப் போக்குகள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
எந்த மரமாக இருந்தாலும் முடிந்தவரை வீட்டை சுற்றி எத்தனை முடியுமோ அத்தனை  வளர்ப்பது நமக்கும் நம் மனோ நிலைக்கும் மிகவும் நல்லது. நமக்கு மனம் சஞ்சலப்படும் பொழுதெல்லாம் ஒரு இரண்டு மூன்று மரத்தின் குளிர்ச்சியையும் நிழலையும் பார்த்து அதன் அடியில் அமர்ந்தால், மனம் சற்று நேரத்தில் ஒரு சமநிலைக்கு வந்துவிடும்.

ஆகாத மரம் என்று மக்கள் கூறுவதற்கு ஏதோ ஒருவித இடைஞ்சல் என்ற காரணம் கூட இருக்கலாம். உதாரணமாக முருங்கை மரம் வைத்தால் கம்பளிப்பூச்சி வரும் என்பதால் வீட்டிற்கு அருகில் வைக்க மாட்டார்கள். என்னுடைய நிலைப்பாடு, மரத்தை சற்றே தள்ளி வைத்துவிட்டு கம்பளிப்பூச்சி வரும் சீசனில் அந்த மரத்தின் அருகில் செல்லாமல் விட்டுவிடலாம். இயற்கை எப்படி போகிறதோ அதற்குத் தகுந்தவாறு நாம் வளைந்து கொடுத்து வாழாமல் நம்முடைய வசதிக்கும் சோம்பேறித்தனத்திற்கும்  தகுந்தவாறு இயற்கையை அழித்து நாம் வாழ்கிறோம். இந்தப் போக்கு மாறினால்தான் வாழ்வு வளமாக இருக்கும். இயற்கையோடு ஒன்றிய வாழ்வில் நாம் அடிக்கடி பார்க்கும் மனச்சிதைவு மனக்குழப்பம் சஞ்சலம் போன்ற மனோநிலை களும் குறைவாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

போதிமரத்தடியில் தான் புத்தருக்கு ஞானம் வந்தது என்பது கட்டுக் கதையாக கூட இருக்கலாம்.... இருந்தாலும் அங்கேயும் ஒரு மரம் ஏன் வந்தது? கட்டுக்கதையானால் கூட அதில் ஏதோ ஒரு  கோணத்தில் உண்மை இருக்கலாம்.....

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி