ஒவ்வொன்றும் ஒரு விதம்


வாரிசென்று வந்தது
வருடம் ஒன்று வரிசையாக, 
நல்லவேளை நின்றது
நான்காவது வந்ததுமே.

வேளா வேளை தவறாமல் வாய்க்குணவு கிடைத்துவிடும் பெரிதாய்த் தாங்கல் ஏதுமின்றி வளர்ந்துவிட்ட பிள்ளையெலாம்
பள்ளி சென்றன உள்ளூரிலே!

படிப்பில் ஒன்று படுசுட்டி!
பரவாயில்லை
இரண்டாவது!
மற்ற இரண்டும் எப்படி என்றால்-
எழுத்தென்றால் புரியாது,
எண்ணென்றால் விளங்காது!
ஆனால் நான்கும் சென்றன
அன்றாடம் அந்தப் பள்ளிக்கு!

படிக்கும் குழந்தை படித்து விடும்,
ஆடும் குழந்தை ஆட்டமாடும்
ஒன்றிரண்டு ஊரைச்சுற்றும்
வீட்டுப் பொறுப்பு கை வந்தால்
அதிலே நல்ல பேரெடுக்கும்.

படிப்பேனில்லை பாட்டேனில்லை, 
கேள்வி கேட்க ஆளில்லை,
குறிக்கோளும் வைப்பதில்லை
லட்சியமும் தேவையில்லை,
வருகின்ற வாழ்வதனை
வந்தவண்ணம் ஏற்கலாம்.

வளர்ந்துவிட்ட பிள்ளைகளின் வருமானத்தை நோக்கினால்,
ஒன்றுக்கொன்று வேறுதான்.... 
குறைவாய் ஈட்டும் குழந்தைக்கு 
கூடக் கொடுப்பார் பெற்றோரவர்....

எளிமையான கோட்பாடு!
ஏன் இல்லை 
என்ற கேள்வி என்றும் இஙகே வந்ததில்லை!
இருப்போருக்கு இருக்கட்டும், இல்லாருக்கு நாம் கொடுப்போம், 
இதுவேதான் வாழ்க்கையிங்கு சில காலம் முன்னாலே....

👩‍🎓⛹️🤾🚴🏌️🤼🧗🚵👩‍💻

 விளையாட்டும் ராங்கும்
________________________

நான் பள்ளியில் படித்த காலத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை சாதாரண ரேங்க் வாங்குவேன். எப்பொழுதுமே இருபதுக்கு மேல்தான் 26 ,27 என்பது போல். 
ஆறாவது வகுப்புக்கு வந்ததிலிருந்து,  புரியும் தன்மை வளர்ந்ததாலோ என்னவோ, வகுப்பில் முதல் அல்லது இரண்டாவது இடத்திற்கு உயர்ந்து விட்டேன். என்னுடைய முயற்சியால் ராங்க் வந்தது என்று கூறமுடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தை கிரகித்துக் கொள்ளும் தன்மை இருப்பது போல் எனக்கு பள்ளியில் வரும் பாடங்களை கிரகித்துக்கொள்ளும் தன்மை வளர்ந்திருக்கலாம்.... எப்பொழுதும் போல் தான் படித்தேன் ஆனால் வகுப்பில் ராங்க் உயர்ந்துவிட்டது.
முதல் ராங்க் வரவேண்டும் என்று குறிவைத்து நான் என்றுமே படித்தது கிடையாது, பரிட்சைக்கு முன்தினம் புத்தகங்களைத் திறந்து எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மேலோட்டமாக பார்த்து விட்டு போவேன், மிகவும் ஒழுங்காக எல்லாப் பாடங்களையும் படித்ததாகவும் கூறமுடியாது. 

பரீட்சை இல்லாத நாட்களில்,
பள்ளியிலிருந்து வந்ததும்
பெரும்பாலும் கதைப்புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். 
வெளியே விளையாடுவதற்கு என் அன்னை அனுமதித்தால்தான் போக முடியும்....
அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளை அதிகம் விளையாட விடமாட்டார்கள் வெளியில். ஒன்றிரண்டு முறை அவர் வேண்டாம் என்று கூறியும், அவருக்குத் தெரியாமல் விளையாடப் போனதாக ஞாபகம். 

பள்ளி  இறுதிப் பரீட்சை வரும்போது வகுப்பில் மொத்தம் 72 பேர்.  அதில் ஒரு சிலர் என்னைப் போல் மார்க் அதிகம் வாங்குவோர் இருந்தோம், மற்றவரெல்லாம் மீடியமாக இருப்பார்கள், இன்னும் சிலருக்கு மார்க் வாங்குவது பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும். அவர்கள் பள்ளிக்கு வந்து பரீட்சை எழுதும் முன் என்னைப்போல் 'ராங்க் ஹோல்டர்களிடம்' வந்து பாடம் கேட்டு எழுதுவார்கள். பரீட்சை முடிந்து வெளியே வந்தவுடன்
சிறிது நேரம் 'டிஸ்கஷன்' நடக்கும்.பிறகு டிஸ்கஷனால் வரும் மன உளைச்சலை நினைத்து அனைவரும் அதை விட்டு விடுவோம்.
யாரும் வீட்டில் தங்கள் பெற்றோர் - ராங்க் ஏன் வரவில்லை, ஏன் பெயில் ஆகி விட்டது என்றெல்லாம் திட்டுவார்கள் என்று, பயந்து புலம்பி கேட்டதாக எனக்கு ஞாபகமில்லை.
வயதுப் பெண்களுக்கே இருக்கும் பேச்சு, சிரிப்பு, கோபம் தாபம்... இவையெல்லாம் தான் இருந்ததாக ஞாபகம்.
ஆனால் எங்கள் வீட்டில் எங்கள் தந்தைக்கு நாங்கள் முதல் ராங்க் வரவேண்டும் என்பது பெரிய விருப்பம், வராவிட்டால் கோபப்படுவார்.

என்னைவிட என் தாயாரின் தலைமுறையில் இது இன்னுமே 'ரிலாக்ஸ்டாக' இருந்தது  போல்தான் அவர் கூறியிருக்கிறார். நான் குழந்தைப் பருவத்தில் தாத்தாவின் ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் என்னுடைய மாமன்மார்கள் யாரும் பள்ளிக்கு சென்றதாகவோ படித்ததாகவோ எனக்கு ஞாபகத்தில் பதிந்ததே இல்லை. 
பள்ளிக்கு செல்வதை பற்றி  யாரும் கவலைகூட பட்டதில்லை, பள்ளியில் சேர்த்து விடுவதோடு பெற்றோர் கடமை முடிந்தது.

என் தாயார் தன் பள்ளிப்பருவத்தைப் பற்றிக் கூறும் போதெல்லாம் பச்சைக்குதிரை தாண்டுவது என்ற விளையாட்டு பற்றித்தான் சொல்வார்- ஒரு பெண் குனிந்து கொண்டால் மற்றொரெல்லாம் தூர இருந்து ஓடி வந்து அந்தப் பெணின் முதுகில் கை வைத்துத்  தாண்டி மறுபக்கம் குதிப்பது......

இந்த விளையாட்டு பற்றியும் பெரிய டிபன் கேரியரில் வீட்டிலிருந்து மதிய உணவு வந்ததைப் பற்றியும் கூறுவார் படிப்பை பற்றி, பாடங்களைப் பற்றி....ஆங்கிலம் படிப்பது பிடிக்கும் என்று கூறியிருக்கிறார், கணக்கு சுட்டுப் போட்டாலும் வராது கணக்கு டியூஷன் வாத்தியாரிடம் தினம் அடி வாங்கி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.(நான் கணக்கில் எப்பொழுதும் நூற்றுக்கு நூறு தான்)
டியூஷன் வாத்தியார் தான் அப்படி அடித்தாரே ஒழிய, என் அன்னையின் தந்தை, ஏன் படிக்கவில்லை என்று கேட்டதில்லை.
அவருடைய குழந்தைப் பருவம் (அவருக்குத் தாயார் இல்லாதபோதும்) சந்தோஷமாக இருந்ததாக தான் அவர் கூறியிருக்கிறார். 

இளம் குழந்தைகள் வகுப்பில் இப்பொழுது ராங்க் சிஸ்டம் இல்லை என்று நினைக்கிறேன், அது ஒரு நல்ல மாறுதல்.எங்கள் காலத்திலும் ராங்க் இல்லாமல் இருந்திருந்தால் முதல் ராங்க் வாங்கிய எனக்குமே நன்மை விளைந்திருக்கலாம்........முதல் ராங்க் வந்ததால் நான் ஏதோ பெரிய கடமையை முடித்து விட்டது போல் திருப்தியடைந்து, வாழ்க்கையின் மற்ற பரிமாணங்களை கவனிக்கத் தவறிவிட்டேன்.

இன்றைய தலைமுறை குழந்தைகளும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள்......
🤔ஆனால் படிப்பு விளையாட்டு,இசை, பேச்சு என அனைத்திலும் தங்கள் குழந்தை சிறப்பாக வரவேண்டும் என பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.
குழந்தை தன் போக்கில் தனக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை வளர்த்துக் கொள்வது இன்னும் நன்றாக இருக்குமோ?    எல்லாவற்றையும் நன்றாகச்செய் என்று குழந்தையை வற்புறுத்தும் பொழுது, அந்த குழந்தை க்கென்று இருக்கும் தனிச்சிறப்பு வளராமல் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை.

மீண்டும் சொந்த கதை...
நான் படிப்பில் சுட்டியாக இருந்தாலும் விளையாட்டென்பது வரவே வராது. விளையாட பிடிக்கும்.... ஆனால் திறமையாக ஆடியதாக ஞாபகமில்லை. ஓடுவது, பந்துவீசி பிடிப்பது, எல்லாமே சுமாராகத் தான் செய்வேன்.
வாலிபால் விளையாடும் பொழுது 'சர்வில்' அந்த வலையைத் தாண்டி, பந்து முக்கி முனகி, திக்கித் திணறி மூச்சு வாங்கி, மெதுவாகப் போய்விழும். அதேபோல் கோகோ விளையாடும் போது ஒருமுறை ஞாபகம் இருக்கிறது...... நான் துரத்திச் சென்று முன்னால் ஓடும் பெண்ணைத் தொட வேண்டும், நான் என்னால் முயன்றமட்டும் ஓடுகிறேன்..... அனைவரும் கத்துகிறார்கள்
'come on ,come on'
என்று...... என்னால் முடியவே இல்லை, இரண்டு ரவுண்டு முயன்று விட்டு அடுத்த பெண்ணை தட்டிவிட்டேன், துரத்துவதற்கு...... இந்த நிகழ்ச்சி என் மனதில் ஆழப் பதிந்துள்ளது. அந்தப் பெண்ணைத் தொட்டு 'அவுட்' ஆக்க  முடியவில்லை என்பது எனக்கு  மிக  வருத்தமாகவும் கொஞ்சம் அவமானமாகவும் இருந்தது.என்னுடைய குரூப்புக்கு ஒரு பாயிண்ட் போய்விட்டதென்பது இன்னும் மன சங்கடம்.
பள்ளியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளை விரும்பிப் பார்ப்பேன். நான் சார்ந்திருந்த குரூப் ஜெயிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்த பொழுதும் எனக்கு விளையாட்டு கைகூடவில்லை.

சில பெண்கள் மிக அழகாக பாடுவார்கள், சிலர் மிகவும் நன்றாக பரதநாட்டியம் ஆடுவார்கள்.
அவர்கள் மேல் பொறாமைப் பட்டிருக்கிறேன்.
எல்லாவற்றையும் விட, ஓட்டப்பந்தயத்தில் மின்னல் போல் பறந்து ஓடும் பெண்களை பார்த்து மிகவும் பொறாமைப் பட்டிருக்கிறேன்.
எனக்கும் அதெல்லாம் செய்ய வேண்டுமென்று மிக மிக ஆசையாக இருக்கும்.
அந்த வகையில் என் வீட்டில் பாட்டு டான்ஸ் எல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை, கொடுத்திருந்தாலும் வந்திருக்குமா என்பது  சந்தேகம்தான்.

   

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி