பழுது பார்த்தல்

பழுது பார்த்தல்🔨🔧

காரின் கதவு நசுங்கிப் போனால்  'டிங்கர்' என்று செய்வார்கள்,
அன்றைய காலத்தில்!
இன்னொரு கதவை வாங்கி மாட்டு
இருக்கவே இருக்கு காப்பீடு
இன்றைய காலத்தில்!

ஆடை கொஞ்சம் கிழிந்து விட்டால்
தைத்து அணிந்தோம் அன்றைய நாளில்,   
இன்று கொஞ்சம் கிழிந்தாலும்
எறிந்துவிடு பழந்துணியை
புதியதாக வாங்கலாம்!
செருப்பின் கதையும் இதுவேதான்
கொஞ்சம் பிய்ந்தால் புதிதேதான்!

மாவரைத்துத்  துணிதுவைத்து,
மிளகரைத்து சாறெடுத்து
துணையிருக்கும் இயந்திரம்,
பழுதானால் பண்ட மாற்றம்!

பழுது பார்த்து வேலை செய்தால் 
பழையது ஓடும் பல நாட்கள்!
பழுதுபார்க்கும் கலையை நீங்கி, 
புதிய பொருளை மீண்டும் வாங்கி,
வளமை சுருங்கி பூமியது
பாலை போல ஆகிவிடும்
பேரன் பேத்தி வரும்போது!


🧵🧶✂️📌🧷🥾👢👞🥿🔨🔧


நாங்கள்  ஒரு பதினைந்து வருடம் முன்பு முதன் முதலில் வாங்கிய கார் மாருதி 800.
நீல நிறத்தில் பார்வைக்கு கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருக்கும் வண்டி அது.
திருமணமான பின் பல வருடங்கள் நான் எவ்வளவு கேட்டும் கார் வாங்காமல் டபாய்த்த என் வீட்டுக்காரர் எங்கள் வீட்டுக்கு பாப்பாத்தி  நாய்க்குட்டி வந்ததும் ஓரிரு மாதங்களில் வாங்கிவிட்டார். ஏனென்றால் அந்த நாய்க்குட்டிக்கு ஊருக்கு வரப்போக தேவைப்படும் என்று.
நாங்கள் அப்போது பெங்களூரில் இருந்தோம். வாங்கி இரண்டே நாளில் பாப்பாத்தியையும் அதன் கடைசி குட்டி சோரோவையும் அழைத்துக்கொண்டு பெங்களூரில் இருந்து நாங்கள் இருவரும் ஒரு நான்கு நாட்கள் அந்தக் காரில் கோவை காங்கேயம் திருப்பூர் எல்லாம் வந்து சொந்தங்களைப் பார்த்துவிட்டு சென்றோம். வாங்கத்தான் யோசனை செய்தாரே ஒழிய வாங்கியதில் இருந்து கிட்டத்தட்ட அவரேதான் அங்குமிங்கும் அதில் போய்க் கொண்டிருப்பார்........ கொடுத்த காசுக்குத் தகுந்த மதிப்பு என்றால் மாருதி 800 தான்.
ஏன் அதன் தயாரிப்பை நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை..... பொதுமக்கள் மலிவான விலையில் ஒரு நல்ல வண்டி ஓட்டக் கூடாது என்று கார் கம்பெனி நினைக்கிறதோ என்னவோ?
அந்தக் கார் இன்னும் எங்களிடம் தான் இருக்கிறது.
என் தாயின் சாரதி அதை வைத்துக் கொண்டிருக்கிறார். 

அதில் முதல் முதலில் லேசாக அடிபட்டு ஒரு கதவு ஒடுங்கிவிட்டது... அதை ஒர்க் ஷாப்புக்குக் கொண்டு சென்ற பொழுது அவர்கள் காப்பீட்டு பார்ம் எல்லாம் நிரப்பிக் கொண்டு வந்தார்கள். பிறகு கதவைக் கழற்றி வீசிவிட்டு வேறு கதவு  பொருத்தி விட்டார்கள். அதிர்ச்சியாக இருந்தது....
ஏன் இப்பொழுது டிங்கரிங் எல்லாம் செய்வதில்லையா என்று கேட்டதற்கு, அதெல்லாம் போய் வெகுகாலம் ஆகிவிட்டது என்றார்கள்.
காப்பீடு இருப்பதால் பிரச்சினையில்லை, எல்லாம் புதிதுதான் என்றார்கள்.... ஆனாலும் பாதித் தொகை நான்தான் கட்டினேன்.

பணம் கட்டினது வருத்தமாக இல்லை, ஒரு கதவை வீணடிக்கிறார்கள் என்பதுதான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
இது போன்ற பழக்கங்கள் நன்மையா தீமையா என்று சரியாக விளங்கவில்லை. பொதுவாக நிறைய வீணடிக்கிறோம் என்பது தெளிவாக புரிகிறது..... வீண் செய்வது கண்டிப்பாக நல்லது இல்லை அதுவும் புரிகிறது!

இன்னொரு விஷயம் பேனா.... அந்தக்காலத்தில் 'ஃபவுண்டன் பென்' என்று இருக்கும்.
நான் நான்காவது படிக்கும் பொழுது முதன் முதலில் என் தந்தை இரண்டு ரூபாய் கொடுத்து ஒரு ரைட்டர் பேனா வாங்கிக் கொடுத்தார்.
ஒரே வாரத்தில் தொலைந்துவிட்டது யார் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. தந்தையிடம் சொல்வதற்கு மிகவும் பயம். நான்கு நாட்கள் கழித்து அது தெரிந்து என்னை வெகு நேரம் ஒரே இடத்தில் உட்கார வைத்தார் தண்டனையாக.... பொய் வேறு கூறிவிட்டேன்....பென்சில் டப்பாவில் தான் வைத்திருக்கிறேன் என்று.... 

பிறகு ஒரு சாதாரண பேனா வாங்கிக் கொடுத்தார் ஐம்பது காசுக்கு .
அதுதான் அந்த வருடம் முழுவதும் எனக்கு வந்தது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இங்க் நிரப்பவேண்டும் (ப்ரில் நேவி ப்ளூ).....விரல் எல்லாம் நீலநிறமாகிவிடும் தேய்த்துக் கழுவினாலும் போகாது.
அடிக்கடி பேனாவின் முனை வளைந்து விடும் அல்லது விரிந்துவிடும், பிறகு கடைக்கு சென்று 'நிப்' கேட்டு வாங்குவோம் ஐந்து பைசா அல்லது பத்து பைசா இருக்கும் மூன்று பைசாவுக்குக் கூட கிடைத்ததாக ஞாபகம்..... அசலைப்போல் வரவே வராது. ஆனால் வேறு வழியில்லை. இப்பொழுது அந்தப் பேனாவை நினைத்தால் ஏக்கமாக இருக்கிறது.
பத்து ரூபாய் கொடுத்து இன்று பேனா வாங்குகிறோம் தீர்ந்தவுடன் வீசி எறிகிறோம். நம்முடைய கலாச்சாரப் பெருமைகளை நாம் பலமுறை பேசுகிறோம்.... வீசி எறிவது நம் கலாச்சாரத்தில் இல்லை, ஆனால் அதை மிக சந்தோஷமாக நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி