சுசீலா

https://youtu.be/0xoZ1wctHug

குளிர்ச்சியான குரலிலே இனிமை சேர்ந்து சொட்டுதே
காதில் வந்து பாயுதே
தேன் கலந்த பாடலே!

தெலுங்கு பேசும் வாயிலே
தெள்ளத் தெளிவு தமிழுமே
கணீரென்ற குரலிலே
கனிவும் கூட சேருதே!

சோகத்திலே அமிழ்ந்திருக்க
சுகமாகத் தூக்கிவிடும்,
களிப்பு வந்து கூத்தாட சமநிலைக்குக் கொண்டுவரும்..

சுற்றிலுள்ள தொல்லையெல்லாம்
சற்று தூரம் சென்று விடும்,
சுசீலாவின் குரலமுதம் 
சுமந்து வரும் பாட்டாலே!

கண்ணதாசன் வரிகளை விஸ்வநாதன் ராகத்திலே
இந்தக் குயில் பாடினால்
இன்னலான நேரத்திலும் வீண்கவலை குறையுமே!


📻 🎼🎵🎶🎧📻📷🎼🎶🎵

தேனினும் இனிய....

நான் சிறுவயதில் ரேடியோவில் பாடல் கேட்க ஆரம்பித்தது முதல் இன்று என்னுடைய ஸ்மார்ட்போனில் கேட்கும் பாடல்கள் வரை சுசீலாவின் குரலுடனே தான் வளர்ந்து,வயதாகியிருக்கிறேன். அநேகமாக என் வயதையொத்த அனைவருக்கும் இந்த அனுபவம் தான் இருக்கும்....

அந்தக்காலத்தில் UMS என்ற ஒரு பெரிய ரேடியோ எங்கள் வீட்டில் இருந்தது, கிட்டத்தட்ட அது ஒரு இரண்டு அடி நீளமும் ஒன்றரை அடி உயரம் ஒரு அடி அகலமும் இருக்கும். இரண்டு பெரிய குமிழ்கள்..... அதில் ஒன்றைத் திருப்பினால் ஒலி அதிதமாகும்,  இன்னொன்றை திருப்பினால் வானொலிப்பெட்டியில் உள்ள முள் வானொலி நிலைய எண்களுக்குள் நகரும். அந்தக் குமிழ்கள் எல்லாம் கையால் பிடித்து திருப்புவதற்கு மிகமிக மென்மையாக  இருக்கும், இடர்பாடு இருக்காது. வானொலியில் வரும் ஒலியும் நன்றாகத் தெளிவாக இருக்கும். 
என் ஞாபகம் சரியாக இருந்தால் வானொலி வைத்திருப்பதற்கு அந்தக் காலத்தில் லைசன்ஸ் தேவை ப்பட்டது......காலையில் பதினைந்து நிமிடங்கள் மற்றும் மாலையில் 15 நிமிடங்கள் திரைப்பட பாடல்கள் ஒலிபரப்பாகும், பிடித்த பாடல்கள் வந்தால் குதித்தோடிப்போய் அந்த அறைக்குள் நான் அமர்ந்துகொள்வேன். அந்த ரேடியோ பெட்டி என் தந்தை வீட்டில் இப்போது இல்லை. 
அடிக்கடி அதை நான் ஏக்கத்துடன் நினைத்துக்கொள்வேன். பத்திரமாக வைத்திருந்தால் இன்று எவ்வளவோ நன்றாக இருந்திருக்குமே என்று....கம்பீரமானதொரு வானொலிப்பெட்டி அது!
 
அது போன பிறகு டிரான்சிஸ்டர் என்று வந்தது, அதில் எப்பொழுதும் பாடலுடன் கூடவே சேர்ந்து 'ஸ்ஸ்ஸ்' என்ற ஒரு சத்தம் வந்து கொண்டே இருக்கும். ரேடியோவில் இருக்கும் தெளிவு டிரான்சிஸ்டருக்கு என்றுமே இருந்தது கிடையாது.

அதன்பிறகு கேசட் பிளேயர்.... ஓரளவுக்கு ஒலி நன்றாகவே இருக்கும். நான் பள்ளிக்கூடம் முடிந்து கல்லூரி சேர்ந்த பொழுதுதான் தந்தையிடம் மிகவும் கேட்டு, வெகு நாட்களுக்கு பிறகு அவர் வாங்கி கொடுத்தார். அந்த கேசட் பிளேயர் கிட்டத்தட்ட ஒரு சில வருடங்கள் முன்பு வரை என் தாய் மிக பத்திரமாக வைத்திருந்து அதில் உள்ள ரேடியோவில் பக்தி பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தார். அதன்பிறகு நான் ஒரு பிலிப்ஸ் ரேடியோ வாங்கி கொடுத்தேன், கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு வரை அதையும் அவர் நன்றாக பயன்படுத்தினார். 

என்னுடைய குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம் அதன்பிறகு திருமண வாழ்க்கை என்று எல்லாக் காலங்களிலும்  நான் மிக விரும்பிய ஒரு குரல் என்றால் அது பி.சுசீலாவின் குரல் தான்...

ஒரு 10-15 வருடங்கள் முன்பு நடிகர் விஜயின் சக்கரை நிலவே என்ற பாடலில் 'பிடித்த குரல் எதுவென்று கேட்டால் சுசீலாவின் குரலென்பேன்' என்ற ஒரு வரியைக்கேட்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பரவாயில்லை இந்த தலைமுறைக்கும் 
பி சுசிலாவின் குரல் பிடிக்கிறது என்பதில்  என்ன காரணத்தாலோ எனக்கு ஒரு மனதிருப்தி......



Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி