டையப்பர் 👶


சாயம் போன ஆத்தா சேலை தாத்தாவோட பழைய வேட்டி,
துவைத்துத்  துண்டாய்க் கிழித்து வைத்தால்,
சின்னச்சின்னப் பயனுண்டு!
சிறு மழலை வீட்டினிலே!
 
சின்னஞ்சிறிய குழந்தைக்கு 
படுத்துக்கொள்ள போர்த்திக்கொள்ள,
மேலும் கீழும் அணிந்துகொள்ள,
துவைத்தால் சுளுவில் காய்ந்துவிட, 
நைந்தால்
தூக்கிப் போட்டுவிட,
காசில்லாமல் கிடைத்திடுமே
குழந்தைத் துணிமணிகளிங்கே!
கிழிபடாத புடவையிலே
தொட்டிலொன்றும் கிடைத்திடும்..!

இந்தக் காலக் குழந்தை, அணிவது வேட்டி சேலையல்ல....
மரத்தை வெட்டித் தயாரிக்கும் 
டயாப்பர் என்னும் கோமனம்!
டயப்பர் அணிந்த தோலும்
ஒவ்வாமையில் சிவந்து வீங்க
வலியில் குழந்தை அழுது சிவக்க,
புண்ணில் நாமும் மருந்தைப் பூச,
'👶 இன்றுதானே பிறந்தேன்?
பிறந்துமே புண்ணா?
இடர்களேதான் வாழ்க்கையா?'

இன்றைய உலகின் அழிவுப்பொருளே,
கழிவுப்பொருளாம் பெரும் பூதம்,
வளரவிடாமல் தடுக்க வேண்டும்,
கண்ணே இன்று நீயும் நானும்!
கழிவுப் பொருளில் பெரும்பங்கு, வகிப்பதென்பது
டயப்பர் இங்கு!

நான்கு பருத்திப் புடவை மற்றும் வெள்ளை வேட்டியில்,
நினைக்க இயலா
நன்மை எல்லாம் 
நம்மிடமே வந்துசேரும்...
புதிய கோட்பாடேதுமில்லை 
பழங்காலத்தில் பார்த்ததுதான்.
மிச்சமாகும் பணத்தை எல்லாம், மழலை கணக்கில் போடலாம் அருகிலுள்ள வங்கியிலே!

அனைத்தும் மேலே, வாங்கிய நான்கு
வேட்டி சேலை,
கிழியும் வரை பயன்பட்டால்,
மெல்லப் படரும் மனதில் திருப்தி.....
மனதில் படரும் திருப்தி மகிமை, 
கிடைத்தால் புரியும்  அதனின் பெருமை!


👶👶🤰🤰🥛🍵☕👶👶

குழந்தைப் பிறப்பு 🌹

எங்கள் காலத்தில்  குழந்தை உண்டான பிறகு பிரசவத்திற்கு சில நாட்கள் முன்பே வீட்டில், பழைய நூல் சேலை வேட்டி முதலியவை துவைத்து, சிறு சிறு துண்டுகளாகக் கிழித்து வைத்து விடுவார்கள்.
பிரசவத்திற்கு மருத்துவமனை செல்லும் போது கூடவே ஒரு கூடையில் இவையாவும் வரும்.

இந்த சிறு துண்டு துணிகளின் உபயோகம் சொல்லிமாளாது. எந்த வேலை என்றாலும் அது பயன்படும், குழந்தை பிறந்ததிலிருந்து குழந்தைக்கு முகம் துடைக்க, கீழே விரிக்க,மேலே போர்த்திக்கொள்ள, உடுத்திக்கொள்ள, என்று அனைத்துக்கும். துவைத்துக் காயப் போட்டாலும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் காய்ந்து விடும்.

குழந்தைக்கும் அனிந்துகொள்ள எந்தச் சங்கடமும் இல்லாத மென்மையான பருத்தித் துணியாக இருக்கும்.
பிறந்த புதிதில் குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கும்..... கவலையே இல்லை! எடுத்துவிட்டு இன்னொரு துணியைக் கட்டி விடுவார்கள் ஒரு சிறிய கோமணம் போல.

என்னுடைய இரு மகன்களுக்கும் இதையே தான் நாங்கள் கிட்டத்தட்ட ஆறேழு  மாதம் உபயோகித்தோம். அதன்பிறகு சின்ன ஜட்டி போன்றவை போட்டுவிடுவோம்.

டையப்பர் என்று இந்தக் காலத்தில் உள்ளதை நாங்கள் பார்த்தது கிடையாது. துணியால் தைத்த டயப்பர் அணிவித்து இருக்கிறோம் ஞாபகம் இருக்கிறது.
ஆனால் இப்பொழுது பிறந்த குழந்தை கிட்டத்தட்ட ஒரு மாதத்திலிருந்தே காகிதத்தில் ஆன, உள்ளே உறிஞ்சும் தன்மை கொண்ட பொருள் வைத்த டயாப்பர் அணிவிக்கிறார்கள் இரவில் நன்றாக உறங்க வேண்டும் என்ற காரணத்துக்காக.....
குழந்தையும் தாயும் நன்றாக தூங்குகிறார்கள், இல்லை என்று சொல்லமுடியாது.
ஆனால் மறுநாள் விடிந்ததும் ஈரம் படர்ந்த டயப்பரை வீசிப்போட இடம் தேடுவது பெரும்பாடு!
எனக்கு இது தேவையா என்று பல சமயம் தோன்றுகிறது. ஏன் என்றால் ஒரு டயாப்பர் செய்ய எத்தனை மரங்களை வெட்டுகிறார்களோ தெரியவில்லை, இரண்டாவது பல குழந்தைகளுக்கு அது ஒத்துக்கொள்ளாமல் தோலில் 'ரேஷ்' என்று வந்துவிடுகிறது,
மூன்றாவது ஏற்கனவே மக்காத குப்பைப் பொருள்கள் நிலத்தை பாதித்து இப்பொழுது கடல் நீரையும் பாதித்து கடல் உயிர்களைக் கொன்று கொண்டிருக்கிறன. இதில் நாம் வேறு ஒரு டயப்பர் மலையை உருவாக்க வேண்டுமா?
சில மாதங்கள் பொறுமையாக நாம் துணி அணிவித்து இரவில் சிறிது கண் விழித்தால்தான் என்ன, என்று தோன்றுகிறது.
'குழந்தை வரம் வேண்டும் என்றால் சும்மாவா'......!?
இது என் தனிப்பட்ட கருத்துதான்,😊
இளம் தாய்மார்கள் மாறுபட்ட கருத்து கொண்டிருப்பார்கள் நிச்சயமாக.
அதைத்தவறென்று கூற முடியாது, இன்றைய வாழ்க்கை முறை அவ்வாறு அமைந்திருக்கிறது. 

எனக்கு என் மூத்த மகன் பிறந்த பொழுது என்னைப் பார்க்க வந்த என் அத்தை  கூறினார்- குழந்தை பிறந்த புதிதில் நமக்கு எந்நேரமும் ஒருவித அலுப்பு இருக்கும் படுத்து உறங்க வேண்டும் என்றே தோன்றும், ஆனால் அந்த அலுப்பைப் பெரிதுபடுத்தாமல் குழந்தை சம்பந்தப்பட்ட வேலை அனைத்தையும் நாமே செய்து சுறுசுறுப்பாக இருப்பது தான் பிரசவம் முடிந்த காலத்தில் நம் உடம்புக்கு நல்லது என்று.....  நாம் துணிகளை குழந்தைக்கு உபயோகிக்கும் பொழுது, நாமே அதை துவைத்துப் போடுவது ஒரு நல்ல உடற்பயிற்சியாக இருந்தது..... எங்கள் காலத்தில்.

டயப்பர் பற்றிப் பேசுகையில் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது எங்கள் வீட்டில்  இரண்டு நாய்கள் வைத்திருந்தோம், இரண்டும் இன்றில்லை...... இறந்துவிட்டன.
இரண்டாவது நாய் கிளியோ என்று பெயர், கடைசி ஒரு வருடம் கேன்சர் வந்து, நாளடைவில் அந்த கேன்சர் மிகவும் பெரிதாகி, அது சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்தும் நரம்பை பாதித்து, சிறுநீர் தானே வெளியே வந்து கொண்டே இருக்கும்..... கண்ட்ரோல் இல்லாமல் போய்விட்டது.
நடக்க முடியாமல் படுத்தவாறு இருந்ததால் உடம்பெல்லாம் நனைந்து மிகவும் கஷ்டப்படுகிறது என்று நினைத்து, குழந்தைகளுக்கு போடும் டயப்பர் வாங்கி அதற்குப் போட்டுவிட்டேன், உறிஞ்சிக் கொள்ளும் என்று. இரண்டு நாட்களுக்குப் பிறகு கத்த ஆரம்பித்தது அடிக்கடி கத்திக்கொண்டே இருந்தது😥.
பிறகுதான் புரிந்தது டயப்பர் 'ரேஷ்'வந்து கஷ்டப்பட்டு இருக்கிறது என்று.
ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் மிகவும் எரிச்சல் ஏற்பட்டு கத்திக்கொண்டே இருக்கும். அதடைய உடல் நனைவதை விட பெருந்துயரில் சிரமப்பட்டு இருக்கிறது என்பது எனக்கு சில  நாட்களுக்குப் பிறகுதான் புரிந்தது, அதிலிருந்து நான் அதற்கு டயப்பர் அணிவிக்கவில்லை......

இன்று திருமண விழாக்களில் சில விஷயங்களை நான் பார்க்கிறேன்... பிளாஸ்டிக் மற்றும் காகித தம்ளர்களை தவிர்த்து பழையபடி ஸ்டீல் தம்ளர்கள் வந்திருக்கின்றன. 
அதை பார்த்ததும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
 
இளம்தாய்மார்களும் மாறுவார்கள் என நம்புகிறேன்...... சுற்றுச்சூழல் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் ஆகியவை முன்னே வைத்து இந்த நவீன டயப்பர்களைப் புறக்கணித்து பருத்தித் துணி அணிவிப்பார்கள் என.

இன்னொரு போனஸ் என்னவென்றால் ஏகப்பட்டபணம் மிச்சம்😁
குறைந்தது மாதம் 1,000 ரூபாயாவது வங்கியில் போடலாம், குழந்தையின் பெயரிலேயே போட்டு விடலாம்..... கொஞ்சம் பெரிதான பின் அந்தக் குழந்தை இந்தப் பணத்தை விரும்புமா அல்லது சிறுவயதில் டயப்பர் போட்டுத் தூங்கிய நினைவை விரும்புமா?
🙄🤗



     



Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி