ஆமைப் பெண்🐢

ஆமைப் பெண்🐢

இயற்கை விஞ்ஞான உலகத்திலே
சுமார் முப்பது வருடம் முன்னாலே,
cane turtle ஆமையைக்
காணவில்லை பல காலம்?
இருக்கா  இல்லையா
சந்தேகம்!

ஆமை பற்றிய எல்லாமே அறிந்து வருவேன் நானேயென்று
கேரளநாட்டுப்பயணம் சென்று
தனியே போனார் இளம் மங்கை
விஜயா என்பதவர் பெயராம்!

பழங்குடித் தலைவரைத் தேடிப்பிடித்து,
அங்குமிங்கும் அலைந்து திரிந்து,
காட்டிலுள்ள குகைக்குள்ளே தன்னந்தனியே பலநாள் இருந்து, 
கண்டுபிடித்தார் ஆமையை!
கொண்டுவந்தார் ஒன்றிரண்டை,
சென்னைப் பாம்பு பண்ணைக்கு.

அதிலே சிலது  முட்டையிட்டு மெல்லமெல்லக் குஞ்சு பொரிக்க,
எழுபது வருடம் யாருமறியா
ஆமைக்குட்டி பழக்க வழக்கம்
நேரில் கண்டு பதிவுசெய்தார்
விஜயா என்ற ஆமைப்பெண்ணவர்!

கொண்டு வந்த ஆமை, சைவம் தான் உண்ணும் என்றிருந்த எண்ணம்,
மாற்றிக்காட்டும் வண்ணம்,
புழுவும் பூச்சியும் தின்றது,  நான் அசைவம் என்று சொன்னது,   
ஆமையன்று விஜியிடம்!

இன்னும் பல பாம்புகள்
வேறு சில ஆமைகள்,
போன்றவற்றைப் பண்ணையில்,
பரிவுடனே தான் வளர்த்து
குணங்களை கண்பார்த்து ஏட்டிலே தான் பதித்தார்!

எந்தக் காடென்றாலும்,
விஜியுடன் சென்றால் கவலையில்லை, எல்லாத்திசையும் அவரறிவார்!
காட்டின் உள்ளே போனால்
கடமை ஒன்றே கண்ணாக கவனம் கொண்ட விஜயா
எந்த மிருகம் வந்தாலும் அச்சம் கொண்டதில்லை!

இயற்கையின் அங்கம் நாமெல்லாம்
விலங்கும் மனிதனும் ஓர் குடும்பம்,
என்ற இவரின் கூற்றுக்கு, எதிர்ப்பைப் பார்த்தார் நிறையவே....
தந்தையும் எதிர்த்தார் ஒருநாள்
மகளைப் பற்றிய கவலையினாலே!

எதிர்ப்புகள் இவரை அடக்க வில்லை
கடமை செய்வதில் சளைக்கவில்லை!
ஆமைக் கடத்தல் கேள்விப்பட்டு,
பயணப்பட்டார் கல்கத்தா...
கிழக்குக்கரைஆமைக்கறி
விற்பனையானது பஞ்சாப் வரை!
'ரிட்லி டர்டில்' ஆமைகளை காலைத் தைத்து அனுப்புவதை
புகைப்படம் எடுத்து வெளியிட்டார்...
அனைவரும் நடப்பதை அறியட்டுமென்று.

அருமைப் பிரதமர் இந்திரா,
ஆணையிட்டார் அந்தத் தினமே,
கரையோரத்தில் காவல்படை காக்கவேண்டும் ஆமைகளை! அன்றே குறைந்தது ஆமைக் கடத்தல்!

ஆமை முதல் பாம்பு வரை
அனைத்தும் பற்றி படித்து, உலகுக்களித்த அருமை விஜி,
இறந்ததெப்படி என்றறியாமல்,
அவருக்கு மிகவும் பிரியமான
'கிண்டி' காட்டில்  இறந்த போது அவரின் வயது 28.

இறந்த பின் போனது
வருடம் பத்தொன்பது,
அதன் பின் வந்தது அங்கீகாரம!
ஆமைக்கு வைத்தது
இயற்பியல் உலகம்,
அர்ப்பணிப்பான விஜியின் பெயரை-
vijayachelys silvatica!

அவரின் பிரிய இந்திராகாந்தி
பெயரின் அருகில் அவர் பெயரை,
போட்டது 'Sanctuary Asia'-
'இந்தியாவின் இணையற்ற சுற்றுச்சூழல் பெண்மணிகள்
இவர்கள் இருவர் என்று'!

பள்ளிக்கூடக் காலத்தில்
எனதருமைத் தோழி விஜயா,
இருபத்தெட்டு வருடத்தில்
முடித்த காரியம் அதிசயமே!

👇👇👇👇👇👇👇👇👇👇👇
🐍🐢🐍🐢🐍🦎🦎🐍🐢🐍🦎


நான் ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாவது  வரை கோவையில் உள்ள ஒரு கான்வென்ட் பள்ளியில் தான் படித்தேன். பள்ளிக்கூடம் மாறவே இல்லை.  எட்டாவது படிக்கும் பொழுது விஜி என்ற ஒரு பெண் பெங்களூரிலிருந்து டிரான்ஸ்பர் ஆகி வந்து இருந்தாள்.
கருப்பு நிறம், சுருட்டை முடி, கொஞ்சம் எல்லோரையும் கோபத்துடன் பார்ப்பது போல் ஒரு பார்வை...
(நாளடைவில் அவள் முகம் அறிவுக்களையுடன் ஒளி மிக்கதாக மாறியது போல் எனக்கு ஒரு உணர்வு).
என்னைப் போலவே அவளுக்கும் புத்தகம் படிப்பது என்றால் மிகவும் பிரியம்.
எனக்கு நிறைய கதை புத்தகங்கள் கடன் கொடுத்திருக்கிறாள். படிப்பை விட அவளுக்கு மற்ற செயல்பாடுகளில்தான் ஆர்வம் அதிகம். விளையாட்டு, செடி மரம் கொடி, சிறுசிறு மிருகங்கள், நாய் குட்டி, பூனை குட்டி, இவை எல்லாம் மிகவும் பிரியம். எங்கள் வகுப்பு  டீச்சர், நான் நன்றாக படிப்பேன் என்பதால் அவளை என் அருகே உட்கார வைத்தார்கள்.
என்னுடன் சேர்ந்து அவளும் நன்றாக படிக்கட்டும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை, நான் பொதுவாக கிளாஸில் முதல் அல்லது இரண்டாவது ராங்க் வாங்குவேன்.

சிறிது நாட்களில் அவளும் நானும் நெருங்கிய தோழிகளாக மாறிவிட்டோம். எந்த விஷயமாக இருந்தாலும் விஜயுடன் தயக்கமில்லாமல் பேசலாம் என்பது போல எனக்கு தோன்றும். ஆனால் அவள் இரண்டு வருடங்கள் தான் எங்கள் பள்ளியில் இருந்தாள், 10ஆம் வகுப்புக்கு  சென்னை சென்று விட்டாள்.

சென்னையிலிருந்த போதும் கிட்டத்தட்ட ஒரு ஆறேழு வருடம் கடிதத் தொடர்பு இருந்தது. எனக்குத் திருமணமான பின் அந்தத் தொடர்பு விட்டுப்போனது. சென்னையில் அவள் பியுசி முடித்துவிட்டு  எத்திராஜ் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் படித்தாள்.
கல்லூரியில் படிக்கும் பொழுது அவளுக்கு சென்னையில் ஏற்படும் அனுபவங்கள், சிறிது நாட்களுக்கு பிறகு பாம்புப் பண்ணையில் போய் பகுதி நேர வேலைக்கு சேர்ந்தது, போன்ற பல விஷயங்களை கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வாள்.அந்தப் பாம்புப் பண்ணையில் அவளிருந்த சில வருடங்கள் அவளுடைய மகிழ்ச்சிகரமான காலம் என்றெண்ணுகிறேன்.

அப்பொழுது இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் தான் பிரதமராக இருந்தார்கள். அந்த சமயத்தில் அவள் செய்தித்தாள்கள் படிக்க ஆரம்பித்ததாகவும், வெளியுலகத்தை அவள் அறிய ஆரம்பித்த நேரத்தில் பிரதமராக இருந்தவராதலால் இந்திராகாந்தி அம்மையார் மீது மிகுந்த மதிப்பும் பற்றும் வந்து விட்டதாகவும் கூறியிருக்கிறாள்.
நான்  விஜியின் கடிதம் எப்பொழுது வரும் என்று காத்துக் கொண்டிருப்பேன். எப்படியும் மாதத்திற்கு ஒன்று சில நேரங்களில் இரண்டு வரும். அவளைப் போல்   சுவாரசியமாக எழுத என்னால் முடியாது. பக்கம் பக்கமாக அவள் அனுபவங்களை எழுதுவாள். பார்த்த மனிதர்கள், அவர்களிடம் அவளுக்கு பிடித்தது பிடிக்காதது எல்லாம்....  எப்படியோ என் திருமணத்திற்குப் பிறகு தொடர்பு இல்லாமலேயே ஒரு பதினைந்து பதினாறு வருடங்கள் சென்றுவிட்டன. பின்னொருநாள் என் மூத்த மகன் சென்னையில் 11, 12ஆம் வகுப்பு படித்த பொழுது நான் அவனுடன் ஒரு வருடம் தங்கி இருந்தேன்.  விஜியை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் நான் பாம்புப் பண்ணைக்குச் சென்றேன். அங்கு போய் விசாரித்த பொழுது யாருக்குமே அவளைத் தெரியவில்லை.  அங்கு கொஞ்சம் அதிக நாட்கள் பணிபுரிந்த ஒருவர் மட்டும் சிறிது யோசனை செய்து பிறகு சொன்னார்  'நீணட நாட்களுக்கு முன்பு இங்கு வேலை செய்தாரே அவர் தானே? அவர் இறந்துவிட்டார்' என்று. எனக்கு அதிர்ச்சியில் பேச வாய் வரவில்லை. எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியாது, காட்டுக்குள்ளே தான் அவருடைய  உடல் கிடந்தது என்று அவர் கூறினார். நான் அழுகையை அடக்க முடியாமல் அழுது கொண்டு தான் வீட்டுக்கு வந்தேன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, (அவள் விலங்குகளுடன் வேலை செய்தது எனக்குத் தெரியுமாதலால்) 'விஜி ஸ்நேக் பார்க் கிண்டி' என்று போட்டு 'கூகுள்' செய்து பார்த்தேன்...எனக்கு நிறைய 'லிங்கு'கள் வந்தன. அவளைப் பற்றி மேலும் நிறைய விவரங்கள் தெரிந்து கொண்டேன். எப்படி அவள் இறந்து பல வருடங்களுக்குப் பிறகு இயற்பியல் உலகம் அவளுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தது, ஒரு ஆமைக்கு அவள் பெயரை வைத்தது என்பதெல்லாம் அறிந்தேன். அவளைப் போன்ற ஒரு அர்ப்பணிப்பான, மனிதநேயமிக்க, இயற்கை விஞ்ஞானியைப் பார்ப்பது மிக மிக அரிது. அவளைக் கோடியில் ஒருவள் என்று தான் சொல்ல வேண்டும்.



Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி