தமிழன்டா 🔔⚖️

தமிழன்டா...!
🔔⚖️

பண்டைய செந்தமிழ்நாட்டினிலே, 
அறிவுச்சுடராம் புலவர்கள்,
இலக்கியம் வேண்டும் 
நம் நாட்டில், 
என்ற எண்ணம் எழுந்ததுமே , சங்கத்தமிழில் இலக்கியங்கள் 
எழுதிக் கொடுத்தார் அக்கணமே! 🙏

அதன்பின்னர் வந்த மன்னராம் ராஜராஜ சோழனாம், 
கோவிலொன்று வேண்டுமென்று  மனதில்     எண்ணம் வந்ததுமே,
எப்படி இப்படிச் செய்தார் என்று இன்றும் வியக்கும் வண்ணம், 
கற்கோவில்  கட்டினார்
கல்லில்லாதஞ்சையிலே!

இன்று வந்த பாரதி 
விடுதலையென்று எண்ணினான்,
எழுந்து வந்த எண்ணத்தை,
தீப்பொறி பறக்கப் பாடி
தமிழரைத் தட்டி எழுப்பினான்!

இவர்களில் யாரும் 
என்றுமே, 
அன்றைய தமிழ்த் திருநாட்டினிலே,
அப்படி இப்படி செய்தார்கள் என்பதைக் கூறித் தூங்கவில்லை....
இன்றைக்கென்ன தேவை என்பதை எண்ணிப் பார்த்தார்கள்...
அதையும் உடனே செய்தார்கள்!

இன்றைய தமிழ்த்திரு நாட்டினிலே
பழைய பெருமை பேச்சினிலே
பயன்கள் எதுவும் இல்லையே!
வெறும் பேச்சைப் புறக்கணித்து,
செயல்வீரர் தோற்றமெடுத்து,
அவரவர் மனதின் எண்ணத்தில்
எந்தக் காரியம் முக்கியமோ,
அந்தக் காரியம் அவர் செய்தால்,
நாளைய தமிழர் நமையெல்லாம், நினைக்கும் நாளும் வந்திடும் !

☎️🖱️🖨️⌨️💻🖥️🕟🧷💡📀🍃

நான் பதினொன்றாவது படிக்கும் பொழுது 'தமிழ் பாடநூல்' என்ற தமிழ் வகுப்பு புத்தகத்தில் ஒரு பாடம் இருந்தது.
ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நிறைய கருத்துப்படிவங்களும் விஞ்ஞானக் கோட்பாடுகளும்  ஆதி காலத்தில் தமிழர்கள் கூறியவைதான் என்றும்,இவை அனைத்தையும் தமிழர்கள் பாடல்களாக முன்பே எழுதி வைத்து விட்டார்கள் என்றும் அந்தப் பாடத்தில் இருந்தது.
அவ்வையார் பாடலையும் வேறு  இலக்கியங்களிலிருந்து இருந்து சில வரிகளையும் எடுத்துக் காட்டாகக் காண்பித்து இதையெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் எழுதி இருந்தார்கள், இவர்கள் இன்றுதான் கண்டுபிடித்தார்கள் என்றும் இருந்தது.
கலிலியோவின் டெலஸ்கோப் பற்றியும் பாஸ்கலின் விதிகள் பற்றியும் பற்றி எழுதியிருந்தது ஞாபகம் இருக்கிறது.

அந்தப் பாடத்தை படித்து நான் அதிர்ச்சி அடைந்தேன். . பாஸ்கலின் விதிகளை உபயோகப்படுத்தி இன்று நாம் பல கருவிகளை உபயோகப்படுத்துகிறோம், அன்று நாங்கள் பௌதிகத்தில்  பாஸ்கலின் அழுத்த விதிப்படிதான் பருத்தி 'பேல்' அழுத்திக் கட்டுகிறார்கள் என்று  படித்திருக்கிறோம். 
இதைத் தமிழ் பாடத்தில் அந்தக் அந்தக்காலத்திலேயே அவ்வையார் 'ஆழ அமுக்கிணும்' என்று தொடங்கும் பாடலில் அந்த விதியை தான் குறிப்பிட்டு இருக்கிறார் என்று சொல்லியிருந்தார்....
 
புல் நுனியில் இருந்த பனித்துளி நீரின் வழியே  தெரிந்த பிம்பத்தைக் கூறிய பாடலில் டெலஸ் கோப்பின் விதிகள் எல்லாம் அறிந்து தான் எழுதி இருக்கிறார் என்பது போல் கூறியிருந்தார்.

எனக்கு அந்தப் பாடத்தை படித்து கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
எவ்வளவோ பாடுபட்டு பொறுமையாக வருஷக் கணக்காக வேலை செய்து  தாங்கள் கவனித்த இயற்கை விதிகளை ஒரு சீரான கருத்தாகக் கூறி அதனை மெய்ப்பித்தும் காண்பித்த விஞ்ஞானிகளையும் பேரறிஞர்களையும் இழிவு படுத்தியதாகத் தோன்றியது.  விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் கோட்பாடுகளை நாங்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பாடி இருக்கிறோம் என்று  கூறி இருந்தது எனக்கு அவ்வளவு சரியாகப்படவில்லை..... நான் உடனே  என்னுடைய தமிழ்  ஆசிரியையிடம் இருந்து கேட்டேன்- இந்த பாடம் தவறு, 
நீர்த்துளிகள் தெரிந்த பிம்பத்தை பற்றி பாடியிருக்கிறார்கள், ஒரு பாத்திரத்தில் எவ்வளவுதான் போட்டாலும் பாத்திரம் கொள்ளுமளவு தான் கொள்ளும் என்பதைப்பற்றியும் பாடியிருக்கிறார்கள்.... இது அனைவரும் கண்ணால் பார்க்கும் விஷயங்கள்தானே, அதை அவர்கள் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதை வைத்து அதன் பின்னே உள்ள பௌதிக தத்துவத்தை அறிந்து எழுதினார்கள் என்று எப்படி இந்த ஆசிரியர் கூறலாம் என்று கேட்டேன்.
அதற்கு என் தமிழாசிரியை நீ கூறுவது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் பாடத்திலுள்தைத்தான்  படிக்க வேண்டும், நாம் ஒன்றும் செய்ய முடியாது இதற்கு என்று கூறிவிட்டார்.

நம்மில் பலருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது, அதிலும் இன்று  பலவித சமூக ஊடகங்களின் ஊடுருவல் நிறைய இருப்பதால் நாமெல்லோரும் கருத்துக்களை சுலபமாக பொது வெளியில் பகிர்கிறோம்...... நான் இப்பொழுது செய்வதைப்போல 😄.
அதில் அனைவரும் நாங்கள் ஆதி காலத்திலேயே நாகரீகமாக இருந்த பரம்பரை, மேற்கத்தியவர்கள்  காட்டுமிராண்டிகளாக இருந்த பொழுதே நாங்கள் அதி நாகரிகமாக வாழ்ந்தோம் என்கிற கருத்தைப் பரவலாகப் பேசுகிறோம். அது உண்மையாகக்கூட இருக்கலாம்,ஆனால் அதில் என்ன பெருமை? இன்று எப்படி இருக்கிறோம் என்பது தானே முக்கியம்?







  
 

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி