கிடைத்தது கை கடிகாரம் 🧐

கிடைத்தது கைகடிகாரம் 🧐


பள்ளிக்கூடம் படித்த காலம் பால்ய நண்பன் கூறிய கதை, 
கைக்கடிகாரம் கிடைத்த கதை.
ஸ்வெட்ஸர்லாந்து கம்பெனியின் ஃபேவர்லூபா கைக்கடிகாரம்,
வட்ட வடிவக் கண்ணாடி உள்ளே 
எண்களிருந்தன 
முத்துப்போலே!
அணிந்திருப்பவர் யாரென்றாலும்
அணியும் கைக்குத் தனி ஒரு மதிப்பு! 

பரீட்சையன்று தொலைந்தது 
ஃபேவர்லூபா கடிகாரம்,
பள்ளி செல்லும் நேரம் வந்தது,
கைகடிகாரம் கிடைக்கவில்லை..   
வீட்டிலிருந்த அனைவருமே
வந்து விட்டார் அறைக்குள்ளே!

அங்கே பார்த்தார் இங்கே பார்த்தார்
அலமாரியென்றும்
மேசையென்றும், இழுப்பறையுள்ளும் புத்தகப் பையிலும்,
பதறிப் பதறித் தேடினார்கள்,
அனைவருக்கும் வந்தது பதட்டம்
ஆனாலும் அது கிடைக்கவில்லை!
 
அனைவரும் இறுதியில் வெளியே செல்ல, 
அறையை மூடிய நண்பன், 
அமைதியாகத் தலையைக் குனிந்தான்,
சிந்தனை செய்தான் சில நேரம், 
அறையில் சூழ்ந்த அமைதி  அலாதியான அமைதி......
மெல்லக்கேட்டது 'டிக்...டிக்'  ஓசை 

ஓசை நோக்கி நடந்த நண்பன், 
கண்ணில் பட்டது
கைக்கடிகாரம்
கட்டிலுக்கடியில்
இருட்டிய மூலையில்!
பிரியத்துடன் கட்டிக் கொண்டான்,
பள்ளி சென்றான் பரீட்சை எழுத!


 🧘🧘🧘        🧐           🧘 🧘🧘


எனக்கு ஏதோ ஒரு பிரச்சனை என்றோ அல்லது ஒரு குழப்பம் என்றோ ஏற்படும் பொழுது எப்படி அதை சரி செய்யலாம் என்று அவசர அவசரமாக சில நேரம் நான் சிந்திப்பேன்.
கொஞ்சம் அலைமோதுவேன். ஒரு அமைதி என்னிடம் இருக்காது, படபடப்புடன் இருப்பேன்.
பொதுவாகவே என்னுடைய பர்சனாலிட்டி ஒரு 'கம்போஸ்ட்' ஆகவும் அமைதியாகவும் இருப்பது அல்ல, இயல்பிலேயே நான் கொஞ்சம் படபடப்பானவள். முன்கோபம் விரைவில் வந்துவிடும்.

ஒரு விஷயம் கேள்விப்பட்ட உடனே அதை நம்பி விடுவேன் 'ஐயோ இப்படி ஆகிவிட்டதே அடுத்து என்ன    செய்வது' என்று பதட்டப்படுவேன்.
இதெல்லாம் அவ்வளவு சரியில்லை என்று பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். எனக்கும் அது தெரியும், இருந்தாலும் அடிப்படை இயல்பை மாற்றுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

மிகவும் அமைதியான ஒரு மனநிலையில் நான் அனுகும் பல பிரச்சினைகள் எனக்கு தானாகவே சரியாகி விட்டிருக்கின்றன. அதையும் நான் கவனித்திருக்கிறேன். இந்த என்னுடைய 'அப்சர்வேஷனை ரீயின்ஃபோர்ஸ்' செய்வது போல் ஒரு சிறுகதை ஒன்று நான் படித்தேன், படித்த பொழுது எனக்கு என் தந்தை ஒரு காலத்தில் தொலைத்த கைக்கடிகாரம் ஞாபகத்துக்கு வந்தது.
பள்ளி முடித்து கல்லூரி செல்லும் பொழுது அவர் தந்தை அவருக்கு வாங்கிக் கொடுத்ததென்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் மிகப் பிரபலமான, தரம் வாய்ந்த ஃபேவர்லூபா கடிகாரம் அது. 
ஸ்டீல் கலரில் வட்ட வடிவத்தில் வெள்ளை நிற உள் பக்கத்துடன் பார்ப்பதற்கு மிக நன்றாக இருக்கும். அந்தக் கைகடிகாரம் இல்லாமல் என் தந்தையை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஒருநாள் இரவு நேரத்தில் ஜன்னல் வழியாக யாரோ திருடிச் சென்று விட்டார்கள். அன்று  நாங்கள் அனைவருமே மிகுந்த வேதனைப் பட்டோம்.வெகு நாட்களுக்கு எனக்கு அது ஒரு மனக் கஷ்டமாக இருந்தது.
என் தந்தை இறந்து பத்து வருடத்துத்கு மேல் ஆகிவிட்டது.
இப்பொழுது கூட அந்த கடிகாரத்தை நினைத்தால் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.
எனக்கே இப்படி என்றால் தந்தைக்கு அன்று எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை.

நான் படித்த சிறுகதை, என் தந்தையின் 'ஃபேவர் லூபா' கைக்கடிகாரம் மற்றும் என் படபடப்பான இயல்பு மூன்றும் இணைந்ததுதான் மேலே உள்ள பாடல்.

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி