மருந்து மருத்துவம்

மருந்து💊       
💉மருத்துவம்

        🍔🍅 🍯
    🥥🥭🍊🥗💊
🍇🥝 💊  🥣🍛🍲
🍱 🥙 🌮🍕🍛🥣
   🥪 💉  💊   💉
        🍳 🍒 🍜


பசி வந்த வாய்க்கு 
ருசி என்ன தெரியும்?
எந்த உணவென்றாலும் 
விருந்தாகுமந்த உணவு,
செரிமானம் ஆகி நல்ல 
சத்தெனச் சேருமந்த உடலிடம்.
இயற்கையான பசியும்
அளவான உணவும்
தருமிந்த ஆரோக்கியம் வேறெதிலே வரும்?

உணவந்த உடலுக்குத் 
தேவையென்ற போதும்,
அளவுக்கு மீறி  
அதையே நாம் உண்டால்
அதுவும் ஒரு விஷமாகும்
உடம்புக்குள் ஏறி!

நோய் வந்த உடம்பை
நன்றாக நாம் நோக்கி,
நோய்க்கான காரணம்
எதுவென்று தெளிந்து,
அதற்கான மருந்தை 
அளவாக நாம் கொடுத்தால் அருமருந்தாகாதா  
நோய் வந்த உடம்புக்கு?

நோயில்லா நல் உடம்பில்
தேடி நோயைக் கண்டு,
அதற்கென்று கூறி 
அளவில்லா மருந்துகளைத் தின்னென்று நாம் கொடுத்தால்,
பசியில்லா வயிற்றிலே பெருவிருந்து கொடுத்தது போல அஜீரணமாகாதா?

நோய் தீர்க்கும் மருந்தேதான்
அதற்குமொரு அளவுண்டு,
மீறினால் விஷமே தான் நன்றாக நாமறிவோம்-
அறிந்தபடி நடந்தால் தொழிலுக்கு தர்மமன்றோ?


💉💊💊💉💉💊💊💉💉💊💊


நான் ஆங்கில மருத்துவம் படித்து அதையே கிட்டத்தட்ட முப்பது வருடமாகத் தொழிலாக செய்து வந்தேன். ஒரு வருடம் முன்பு என் தொழிலை இழுத்து மூடிவிட்டு 'அவிக' என்னும் அவுத்துவிட்டு கழுதையாக மாறினேன். 

மருத்துவத்தை நான் மிகவும் விரும்பி, 'பியூசி'யில் சிரமப்பட்டுப் படித்து மார்க் எடுத்து மருத்துவ கல்லூரியில்  இடம் வாங்கினேன். பிறகு மருத்துவ படிப்பில் ஒரு வருடம் தாமதமாகியது உடல்நிலை சரியில்லாமல். பிறகு எழுந்து மீண்டும் சேர்ந்து படித்து முடித்தேன்.
அதற்கு மேல்  விருப்பத்தின் பேரில்தான் கண் மருத்துவம் தனிப் பாடமாக எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்றேன். அதிலும் கண் அறுவை சிகிச்சை எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று, ஓரளவு நன்றாகவே நான் செய்து வந்தேன்.

நானே மருத்துவராய் இருந்த போதிலும் பல நேரங்களில் எனக்கு மருத்துவரிடம் செல்லப் பிடிப்பதே இல்லை, என்ன காரணம் என்று சரிவர கூற இயலவில்லை.... ஒரு நம்பிக்கையோ திருப்தியோ வரமாட்டேன் என்கிறது. மருத்துவர்கள், மருந்து கம்பெனிகள் தங்களுக்கு கொடுக்கும் பிரஷர் தாங்காமல் தேவையற்ற நிறைய மருந்துகளை கொடுக்கிறார்களோ, தேவையற்ற அறுவைசிகிச்சை செய்கிறார்களோ என்று சந்தேகம் சில சமயங்களில் எனக்கு வருகிறது....
இதுபோன்ற செயல்களினால் மருத்துவருக்குப் பணம் வந்தாலும் அது ஒரு நிலையான திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்காது. அது அவருக்கும் நல்லதல்ல நோய் என்று வந்திருக்கும் மனிதருக்கும் நல்லதல்ல. மருத்துவ பாடப் புத்தகங்கள் கூறியபடியே வழி நடந்தால் ஆங்கில மருத்துவத்தைப் போல ஒரு சிறந்த மருத்துவம் இல்லை என்பதே என் கருத்து.

தன்னைத் தேடி வரும் மனிதர்களை ஆரோக்கியமாக வைப்பது, மற்றும் நோய் வராமல் தடுப்பது  என்பதே ஒரு மருத்துவரின் முதல் கடமை என்று நான் கருதுகிறேன். வந்த நோயை மருந்து கொடுத்து தீர்ப்பது என்பது இரண்டாம் பட்சம்தான்!

ஒரு குட்டி கதை ஞாபகம் வருகிறது ஆற்றின் ஓரம் இரண்டு ஊர்கள் இருந்தன. ஆற்றின் மேல் பகுதியில் ஒன்றும் கீழ்ப்பகுதியில் ஒன்றும்.
இரண்டு ஊருக்கும் அரசாங்கம் தனித்தனி மருத்துவர்கள் நியமித்திருந்தது.
இரண்டு ஊர்களிலும் மேல் பகுதியில் இருந்த ஊரில் கொஞ்சம் சுத்தம் சுகாதாரம் குறைவாக இருந்தது. அதற்கு அந்த மருத்துவர் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
திடீரென  ஆற்றின் மேல் பகுதியில் இருந்த மக்களுக்கு ஒருவித வயிற்றுப்போக்கு காலரா போல் வந்தது, கிட்டத்தட்ட அனைவரும் நோய் வந்து தவித்தார்கள்.
மேல் பகுதியில் இருந்த மருத்துவர் உடனே எல்லா பக்கமிருந்தும் மருந்துகளை வரவழைத்து ஓடியாடி  அனைவருக்கும் மருந்துகளைக் கொடுத்து சரி செய்தார். அனைத்து மக்களும் பிழைத்துக்கொண்டனர்.

அந்த ஊரின் கழிவு நீர் எல்லாம் ஆற்றில் தான் வந்தது.
கீழ்ப் பகுதியில் இருந்த ஊர் மக்களும் அதை ஆற்றுநீரை தான் பயன்படுத்தினார்கள் இந்தக் காலரா வந்த விஷயம் கேள்விப்பட்டு கீழே இருந்த மருத்துவர் அந்த நீரை எப்படி  சுத்தம் செய்து உபயோகப்படுத்துவது என்ற கல்வியறிவை தன் மக்களுக்கு கொடுத்து கிட்டத்தட்ட 24 மணி நேரமும் அவர் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு நோட்டமிட்டு ஊரின் சுத்தத்தை காப்பாற்றி அந்த ஊரில் ஒருவருக்கு கூட நோய் வராமல் தடுத்து விட்டார். இந்த விஷயம் வெளியில் தெரியவில்லை.
ஆற்றின் கீழ்பகுதியில் என்ன நடந்தது என்பது கூட யாருக்கும் தெரியாது!
ஏனென்றால் நோய் வந்தால் தானே வெளியில் செய்தியாக வரும்? அரசாங்கம் மேல்பகுதி மருத்துவரை பாராட்டி அவருக்கு பதக்கம் கொடுத்தது.
மருத்துவர்களில் யாருக்கு பதக்கம் கொடுத்திருக்க வேண்டும்?


Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி