தரம் 🍎

  
🍎 தரம் 

பாடுபட்ட பணத்தால்
பொருளொன்று வாங்கி
வீடு வந்து சேர்ந்தால்,
விரைவில்  பழுதாகி மறுபடியும் அதையே
வாங்க வந்த  காலம்,
ஏனிந்தக் கோலம் ?
தரமாகக் கொடுத்தால்
நீண்ட நாள் தாங்கினால்,
மீண்டுமதே விற்க
முடியாதே நமக்கு
என்றதொரு கணக்கோ?

தரமான பொருளாக
நாமாகக் கொடுத்தால், வாங்கிடும் மனம்
வாழ்த்திடும்  நம்மை
என்றதொரு கணக்கு 
இல்லையோ நமக்கு?

தரமுள்ள பொருளுக்கு விலையதிகமென்பதால்
வேகமுள்ள விற்பனை நடக்காதிங்கென்று,
வியாபாரிகள் நீங்கள்
எண்ணிணீரோ மனதில்?

செல்லும் காலம் செல்ல
பெருகும் வணிகம் பெருக
வளரும் லாபம் வளர......
தரமான பொருளிலுண்டு
நிலையான லாபமென்றும்!
உணர்த்துவது நமக்கதை
ஆப்பிளின் கணினிக் கதை!

கணினியின் உள்ளே
ஒழுங்கென்ன தேவை ?
வெளியிலேஅழகிருக்கு
வேலையில் தரமிருக்கு,
உள்ளழகு எதற்காக?
யார்பார்க்கப் போகிறார்கள்?
என்றலுத்தார் ஆப்பிளின் தொழிலாளி !

யாருமதை பார்த்தாலும் பார்க்கவில்லை என்றாலும்,
உள்ளிருக்கும் ஒழுங்கும்  தேவையிங்கு எனக்கு,
ஆகையினால் உள்ளேயும் அழகிருக்கவேண்டும்,
என்றார் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளின் முதலாளி!

வாங்குவோர் களிப்படைந்தால்
விற்போர் செழிப்படைவார் ! 
வளத்துடன் அறம் சேர்ந்து வளர்த்திடும் வியாபாரம்!
வளர்த்திட்டால் அதை நாம்
வளம் பெறுவோம் வாழ்விலென்றும்!

👇👇🏼👇👇🏼👇👇🏼👇👇🏼👇👇🏼👇
🚘🚜🚌💻🖥️🔌🖱️🖲️🔌🔦🧷


தரம் என்றவுடன் என் நினைவுக்கு வருபவை மூன்று விஷயங்கள்- ஒன்று அந்தக்கால ஃவோக்ஸ்வேகன் கார், இரண்டு லிட்மேன் ஸ்டத்தஸ்கோப், மூன்றாவது  ஆப்பிளின் ஐமேக் கம்ப்யூட்டர்.

அந்தக் காலம் என்று நான் கூறுவது கிட்டத்தட்ட நாற்பத்தைந்து-ஐம்பது வருடங்களுக்கு முன்பு.
என்னுடைய தந்தை அப்பொழுது அரசாங்க வேலையில் இருந்தார்.
ஊட்டிக்கு டிரான்ஸ்பர் ஆகி அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது வாராவாரம் நாங்கள் குடியிருந்த கோவைக்கு வருவார்.
அப்பொழுது  ஜெர்மன் கூட்டுமுயற்சியில் நடந்து கொண்டிருந்த ஒரு ப்ராஜக்டில் அவருக்கு ஒரு பங்கு இருந்தது என நினைக்கிறேன்.
அதன் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை ஃவோக்ஸ்வேகன் காரில் சில நேரம் வருவார்.
சில நாட்கள் அந்தக் கார் எங்கள் வீட்டில் ஓரிரண்டு நாட்கள் நிற்கும். 
என் தந்தை அவருடைய அரசாங்க வேலையில் நேர்மைக்குப் பெயர் போனவர், லஞ்ச லாவண்யம் எதுவும் கிடையாது.
ஒரு தடவை ஏதோ அவசரமாக எங்களைக் கொண்டுவிட வேண்டிய தேவை ஒன்று வந்தது.
இரவு நேரமாகி விட்டது.
ஆகையால் எங்கள் அம்மாவையும் எங்களையும் (நான்கு பேர் மொத்தம்) வேறு வழியின்றி, வீட்டில் நின்ற அந்த வண்டியில் எங்களைக் அழைத்துக்கொண்டு, ஒரு பத்து கிலோமீட்டர் தள்ளி துடியலூர் அருகில் இருந்த எங்கள் சித்தி வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.
அந்தக் கார் சவாரி இன்றும் என் நினைவில் இருக்கிறது. சாதாரணமாக நம்ம ஊர் அம்பாசிடர் காரில் அவ்வப்பொழுது போயிருக்கிறேன். எங்கள் வீட்டில் அப்பொழுது கார் இல்லை, உறவினர்கள் வண்டியில் போயிருக்கிறேன். ஆனால் அன்றிருந்த கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அந்த வோக்ஸ்வேகன் காரில் போனது அப்படியே ஐஸ்கிரீம் போல வழுக்கி கொண்டு போனது மாதிரி எனக்கு ஒரு ஞாபகம். அவ்வளவு மென்மையாக அதிர்வில்லாமல் இருந்தது அந்த சவாரி. எப்படி இது என்று நான் என் தந்தையிடம் கேட்டேன். அவர் கூறினார் இது ஜெர்மன் நாட்டு வண்டி, அவர்களுடைய வேலைப்பாடும் தரமும் நன்றாக இருக்கும் என்று. அப்பொழுதுதான் நான் பொருட்கள் தயாரிப்பதிலும், தரம் உள்ள பொருள், தரம் இல்லாத பொருள் என்ற வேறுபாட்டை  உணர ஆரம்பித்தேன். அப்படி அந்தக் காரை தயாரித்து இருந்தார்கள்.

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மூன்றாம் ஆண்டு வந்ததும், நாங்கள் அனைவரும் ஸ்டெத்தஸ்கோப் வாங்க வேண்டி இருந்தது. அப்பொழுது நம் நாட்டு ஸ்டெத்தஸ்கோப்பும் கிடைக்கும், 50 ரூபாய் 60 ரூபாய் என்று. அவ்வளவுதான் அதன் விலை, மீறிப் போனால் 80 ரூபாய் இருக்கும். என்னுடைய வகுப்பில் படித்த சிலர் கொஞ்சம் பணம் அதிகம் (கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் என்று நினைக்கிறேன்) போட்டு லிட்மேன்  என்ற வெளிநாட்டுத் தயாரிப்பு  வாங்கினார்கள். அதை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் கையாளலாம், ஒன்றுமே ஆகாது.
அதை காதில் வைத்துக் கேட்டால் இருதயத்தின் ஒலி மிகத் துல்லியமாகக் கேட்பது மட்டுமில்லாமல், காதின் உள்ளே வைப்பதற்கும் எந்த உறுத்தலும் இல்லாமல் காதுக்குள் குத்தாமல் இருக்கும். அந்த ஸ்டெத்தஸ்கோப் கையில் பிடித்துக் கொள்ளவும் வாகாக இருக்கும். மேலும் அதன் வடிவமே உபயோகத்திற்கு சவுகரியமாக இருக்கும், அங்கும் இங்கும் வளையாமல். 
இதற்கெல்லாம் நேர்மாறு நம் இந்தியத் தயாரிப்புகள்.😟 

எனக்கு லிட்மேன் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை. என் தந்தை அவருடைய நண்பரிடம் சொல்லி ஒரு ஜப்பான் ஸ்டத்தஸ்கோப் வாங்கிக் கொடுத்தார்.. பெயர் மறந்துவிட்டது.
100 ரூபாய் தான் என்று நினைக்கிறேன். ஆனால் அதில் தெளிவாகவும் சத்தமாகவும் கேட்டன  இருதய ஒலிகள்.  எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. கையாளவும் சௌகரியமாக இருந்தது. நான் மருத்துவப் படிப்பை முடிக்கும் வரை எனக்கு அது நன்றாகக் கைகொடுத்தது. அதன் பிறகும் பல வருடங்கள் உழைத்தது அந்த ஜப்பான் ஸ்டெத்!

இப்பொழுது கடந்த பத்து வருடங்களாக நான் உபயோகிக்கும் ஆப்பிள் கம்பெனியின் imac கம்ப்யூட்டர்..... அதில் நான் பார்த்த திரைப் படங்கள் கணக்கே இல்லை. திரையில் ஓடும் தெள்ளத்தெளிவான அந்தக் காட்சிகளும், படங்களும், துல்லியமான ஒலியும்.... எனக்கு அதன்பிறகு வேறு எந்த கம்ப்யூட்டரிலோ டிவியிலோ படம் பார்க்கவே பிடிப்பதில்லை. என்னுடைய ஆப்பிள் கம்ப்யூட்டருக்கு ஈடே இல்லை எனத் தோன்றுகிறது.  மேலும் அந்த ஆப்பிள் கம்ப்யூட்டர் பார்த்தவுடன் யாரும் அதன் அழகில் மயங்கி விடுவார்கள், அப்படி ஒரு அமைப்பு. 
பார்வைக்கு அழகு மட்டுமல்ல, வழுவழுவென்று கையில் தொடுவதற்கும் மென்மையாக இருப்பது போல் ஒரு உணர்வு. நான் என் மகன்களிடம் கேட்டேன் இப்படி அழகாக பார்க்க மென்மையாக இருக்கிறதே இதற்கு ஏதும் பலம் இருக்குமா லேசாக பட்டால் கூட உடைந்து விடும் போலிருக்கு, உள்ளிருக்கும் வேலைப் பாடெல்லாம் நல்ல வலுவாக இருக்குமா என்று. அவர்கள் சிரித்தார்கள்..... உள்ளதில் வலுவான கம்ப்யூட்டர் ஆப்பிள்தான், பார்க்க அழகு, வலு, தரம் மட்டுமில்லை, வைரஸ் தாக்கலும் (😁) இருக்காது என்றார்கள். நான் அசந்து விட்டேன், பார்த்தால் ஒரு மென்மையான பொருள் போல அவ்வளவு ஒரு அழகினுள்ளே இத்தனை வலுவா என்று.  
அதன் பிறகுதான் நான் ஸ்டீவ் ஜாப்ஸ்  அவர்களைப் பற்றி ஒரு புத்தகம் வாங்கிப் படித்தேன்.இவ்வளவு அருமையான ஒரு பொருள் உருவாக்கியவரைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று.

தரம் என்பது என்றுமே மகிழ்ச்சியும் திருப்தியும் கொடுக்கக்கூடியது. தரமில்லாத பொருள் பார்க்கும் பொழுதெல்லாம் எரிச்சலும் கோபமும் வரும். அதை வாங்குவதற்கு வாங்காமல் இருந்து விடலாம். பத்து வருடங்களுக்கு முன்பு நான் வாங்கிய போதே என் கம்ப்யூட்டரின் விலை 63 ஆயிரம் ரூபாய் அப்போது வேறு கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் ஒரு 25 ஆயிரம் ரூபாய்க்குள் நான் வாங்கி இருப்பேன் ஆனால் அது 63 ஆயிரம் கொடுத்ததில் எனக்கு துளிகூட வருத்தம் இல்லை. இன்று அதன் விலை ஒரு லட்சத்துக்கும் மேல்......அந்தக் கம்ப்யூட்டரை பார்க்கும்போதெல்லாம் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்- கண்ணுக்கு அப்படி ஒரு அழகு, வேலையும் கச்சிதம்.
கொடுத்த பணத்திற்கு மேல் எனக்கு பலன் கிடைத்ததாக நான் நினைக்கிறேன்!


Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி