தொண்டைவலியும் தூதுவளையும்

தொண்டைவலி தூதுவளை


மேனி எங்கும் முள்ளுடன்
வேலி மேலே படர்ந்து வந்து,
சித்திரம் போல்  இலையுடன் செழித்திருக்கும் தூதுவளை!

இரண்டு நாளாய் தொண்டைவலி
சோறுதண்ணி இறங்கவில்லை,
அடித்துப் போட்ட கட்டைப் போல்
அசரிக்கை தாங்க வில்லை....

பூண்டு மிளகு சீரகத்தை
புளி தக்காளி உடனெடுத்து,
தூதுவளை இலைகள முள்ளுடனே பறித்துவந்து,
எல்லாம் சேர்த்து மையைப் போல்
மின் அம்மியில் அரைத்து வைத்து.....

கரிவேப்பிலை கடுகு
காயத்துடன் வெங்காயம்,
நல்லெண்ணையில் தாளித்து,
அரைத்த மையில் உப்பிட்டு கரைத்துப்போட்டு
கொதிக்கவிட்டு,
சொட்டு நெய்யில் குடித்து வந்தேன்
நாளில் இரண்டு வேளை,
நான்கு நாளில் பறந்தது
தொண்டை வலி வேதனை!

🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵

சளிக்கு தூதுவளை இலைகளை  அரைத்து ரசம் வைத்துக் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், நான் அதை அவ்வளவாக செய்தது இல்லை.
ஆனால் அந்தச் செடியை வளர்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டு, திருப்பூரில் என் அம்மாவுடன் இருந்த பொழுது, அதிசயமாக தானே முளைத்து வந்த ஒரு செடிக்கு, அடிக்கடி தண்ணீர் விட்டு என்னென்னவோ செய்து பார்த்தும் மிக மிக மெதுவாகத்தான் அது வளர்ந்தது.
ஒரு கிளை அல்லது இரண்டுதான் இருக்கும்,  மிகவும் குறைவான சிறிய
இலைகள் தான் இருக்கும்.

பிறகு இப்பொழுது நான் கோவைக்குக் குடி வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.
இங்கே என் வீட்டின் முன்புறத்தில் இருக்கும் சிறிய இடத்தில் அதே போல, தானே முளைத்த தூதுவளையைப் பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அதை நான் கவனித்ததே ஒரு அதிசயம்தான்......   ஒருமுறை கைகளினால் அங்கிருந்த களையெல்லாம் பிடுங்கி கொண்டிருந்தபோது விரலில்  சுளீரென்று வலித்தது.
திரும்பிப் பார்த்தால், தூதுவளை செடியைப் பிடித்திருக்கிறேன், அதன் முள் குத்தியிருக்கிறது! எனக்கு வலி அதிகமா, மகிழ்ச்சி அதிகமா என்று புரியவில்லை,  தானாக இவ்வளவு அழகாக முளைத்து வளர்ந்திருக்கிறது என்று...,,.
அதை  அருகில் உள்ள ஒரு சிறிய குழாயின் மேல் எடுத்து விட்டேன், தினமும் நீர் ஊற்றி வந்து இப்போது ஓரளவுக்கு வளர்ந்திருக்கிறது.

தற்சமயம் இந்த கரோனா காலத்தில் அனைவரும் வீட்டுச் சிறையில் இருப்பதால், நாங்கள் தினமும் வீட்டின் பின்புறம் இருந்த முருங்கை மரத்தின் இலைகளைப் பறித்து, சூப் வைத்துக் குடித்து வருகிறோம். கிட்டத்தட்ட ஒரு மூன்று நான்கு இது வாரங்களாக இது நடக்கிறது.
இந்த வேலையை நான் மிகவும் விரும்பிச் செய்கிறேன், காரணம் மருந்தில்லாமல் ஒரு கீரை கிடைப்பது மட்டுமல்ல, அதை வீட்டின் பின்புறம் சென்று மிகவும் சௌகரியமாகவும் பறித்துக்கொள்ளலாம்.

நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு மிகுந்த தாகம் அடித்ததால் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து குளிர்ந்த பாலை எடுத்து அப்படியே குடித்து விட்டு மீண்டும் உறங்கி விட்டேன்.
மறுநாள் காலை நல்ல தொண்டைவலி பிடித்து விட்டது. இது வழக்கமாக வெயில் காலத்தில் ஏற்படுவது தான்.
இரவில் பெரும்பாலும் தோசை தான் உணவு என்பதால் உறங்கப்போகும்போது  தாகம் மிகவும் எடுக்கும், குளிர்சாதனப்பெட்டி நீரை எடுத்து ஜூஸ் கலக்கி இரண்டு மூன்று கிளாஸ்கள் குடித்து விடுவேன்.
மறுநாள் ஆரம்பிக்கும் சளிக் காய்ச்சல் கிட்டத்தட்ட பத்து நாட்கள் நீடிக்கும்.
மாத்திரை உட்கொண்டால்தான் சரியாகும்.

சரி இந்த முறை மாத்திரை எடுப்பதில்லை என்ற உறுதியுடன், அனைவரும் கூறுகிறார்களே என்று இந்தத் தூதுவளை இலைகளைப் பறித்து ரசம் வைத்து ஒரு இரண்டு நாட்கள் சாப்பிட்டு... என்ன அதிசயம்! மூன்றாவது நாளிலிருந்து தொண்டை வலி குறைந்துவிட்டது, காய்ச்சலும் வரவில்லை, ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் நான் போடவில்லை.
இது ஒரு மாதமாக எடுத்துவந்த முருங்கை சூப் அதிசயமா? தூதுவளை ரசம் அதிசயமா? என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை.... எது எப்படி இருந்தாலும் மாத்திரை இல்லாமல் குணமானது எனக்கு மகிழ்ச்சி!

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி