கல்யாண வேளை

கல்யாண வேளை

கல்யாணமெல்லாம்  மாறியது
கரோனாக் கிருமி சொன்னபடி,
இருப்பது அளவாய் இருபது பேர்
மீறிப் போனால் முப்பது பேர்
சிரித்துப் பேசித் தாலி கட்டி,
சொந்தம் ஒன்றாய்  உணவருந்தி,
கோவில் விட்டு வீடு சேர்ந்து
களைப்பில்லாமல் கனிவோடு
கடமையெல்லாம் பார்த்தது!

தேனிலவை வீட்டிலேயே
தேடிக்கொண்ட புதிய ஜோடி,
வாழத்தொடங்கிய முறையின்று
வேறுபட்டு வந்தது!
கலாட்டா கூட்டம்  ஏதுமின்றி
ஆரம்பித்த புதிய வாழ்வு,
அருமையாக அமையவேண்டி
அனைத்து மக்கள் வாழ்த்துக்களும்
மனையிலருந்து பறந்தன
மானசீக எண்ணமாக!

இந்த மணம் முடிந்தது
எந்தக் குறையும் இல்லாமல் பணம் நிறைய மீந்தது
பெற்றோர் இருவரிடமுமே!
சொந்தமெல்லாம் மகிழ்ந்தது
பயணவேலை மிச்சமென்று!
திருமணம் எவ்விதம் முடிந்தாலும்
எல்லாம் எங்களுக்கொன்றே
என்று, 
இனிமையாகப் பறந்தது
இளைய ஜோடிப் புறாவொன்று!


 🕺👩‍❤️‍👨👫🌹💐🌹💐👫👩‍❤️‍👨💃

என் தோழி தன் கணவரின் சகோதரர் மகன் திருமணத்திற்கு அழைப்பு கொடுத்து விட்டுச் சென்றார் இரண்டு மாதங்களுக்கு முன்பு.
என் மாமன் மகன் தன் மகளுடைய நிச்சயதார்த்தத்துக்கு அழைத்திருந்தார் கண்டிப்பாக வரவேண்டும் அக்கா என்று...
நான்  ஒரு வருடத்திற்கு முன்பே  ஆடம்பரமான விழாக்களுக்கு செல்வதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். இருந்தாலும் சில நேரங்களில் தோழிகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மனம் புண்படக் கூடாது என்ற எண்ணமும் வருகிறது.
உனக்கேன் குழப்பம், நான் வந்து முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று வந்தது கரோனா.
இரண்டு விழாக்களுக்கும் நான் மட்டும் இல்லை யாருமே போகவில்லை.... ஒரு இன்ப அதிர்ச்சியாக விழாப் படங்களை பார்த்தேன் வாட்ஸ் அப்பில்.
இரண்டு விழாக்களும் மிக மிக எளிமையாக பத்து இருபது பேரை மட்டும் வைத்து நடந்தேறின. தோழி கூறினார் இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது, நாங்கள் ரசித்துப் பார்த்தோம் என்று.
எதுவுமே செய்து பார்த்தால் தான் தெரியும், அது இல்லை இது இல்லை, அப்படி வேண்டும் இப்படி வேண்டும் என்பதெல்லாம் பெரும்பாலும் கற்பனை தான்.
எளிமையாக செய்வதிலும் ஒரு மகிழ்ச்சியும் இன்பமும் இருக்கின்றன.
இதை நாம் அனைவரும் மறந்து பல நாட்கள் ஆகிவிட்டன. மீண்டும் நம்மை ஞாபகப்படுத்த வந்ததே இந்த  குட்டி கிருமிதான்.


Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி