வீட்டுச் சிறை

வீட்டுச் சிறை

வாசலுக்கு வரலாம்
வானம் அளக்கலாம்,
வீதியில் நிற்கலாம்
வேடிக்கை பார்க்கலாம்,
வீட்டுக்குள் சென்றால்
விரும்பிய திரைப்படம்
காணொளியில் காணலாம்!

உற்ற குடும்பம்
உடன் இருப்பதாலே
வேண்டுவதைப் பேசலாம்
சிரித்து மகிழலாம்,
மற்றவரோடு நாமுறவாட   
கையிலே என்றும் 
கைபேசி உண்டு...
தினமும் குளிக்கலாம் திண்ணையில் நடக்கலாம்...

ஆயிற்று இன்றோடு
மூவேழு நாட்கள்
அடைப்புக்குள் நாமெல்லாம் முழுவதும் சென்று,
இருந்தும் இன்னும் பண்டங்கள் உண்டு,
எண்ணியதும், வேண்டிய உணவருந்திக் கொள்ள.

இத்தனை இருந்தும்
'ஐயோ பத்தலை'! எப்போது கலக்கலாம் மாந்தர்தம் அலையிலே
என்றொரு ஏக்கம்
எல்லார் மனதிலும்...

தற்கால அடைப்புக்கு இத்தனை எனில்......
சொல்லவும் வேண்டுமா
ஆயுளுக்கும் அடைபடும் ஜீவனின் வேதனை?
இன்றேனும் விடுதலை
செய்யலாம் அல்லவா? கட்டிவைத்த நாயும்
கூண்டில் உள்ள பறவையும்
குப்பியிலே மீனும்  இனியேனும் வேண்டாம் விடுவித்து விடலாம்......


🐦🦜🐘🐎🐄🐃🐖🐒🦈🐥🐣🐔

பெட்  ஷாப்பும் தெரு நாய்களும்

சமீபத்திய  நிகழ்நிலை செய்திகளில்  பெங்களூரில் செல்லப் பிராணிகள் விற்கும் கடைகளில், அவற்றின் சொந்தக்காரர்கள் கடைகளை மூடிவிட்டு சென்றதால் உள்ளே இருந்த விலங்கு மற்றும் பறவைகள் சில  காற்றும் உணவும் இல்லாமல் இறந்துவிட்டன என்று பார்த்தேன்.  நெஞ்சம் பதை பதைத்தது, ஏதும் செய்ய இயலாமல் நான் வீட்டிலேயே இருக்கின்றேனே என்று என் மேலேயே ஆதங்கம் ஏற்பட்டது. அந்தப் பிராணிகளை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறோம், அவற்றுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம், அவைகளை பாதுகாப்பது நம் கடமை என்ற எண்ணம் இல்லாதவர்கள்  இதுபோன்ற கடைகளை வைக்கக் கூடாது.
வெளியில் செல்லவோ உணவுதேடவோ வழியில்லாமல் அடைபட்டு பட்டினியால் சாகும் தண்டனை அவற்றிற்கு ஏன்? 
ஒரு பாவமும் அறியாத அந்த விலங்குகளை நினைத்து மனம் அடிக்கடி வேதனைப்படுகிறது. இதுபோன்ற வீட்டுச் சிறை நேரத்தில் நாம் எப்பாடுபட்டாவது அனுமதி வாங்கிக் கடைக்குச் சென்று காத்திருந்து நமக்கு வேண்டியது வாங்கி சாப்பிடுகிறோம். அதேபோல் அவற்றுக்கும் உணவு கொடுப்பது நம்முடைய கடமை இதை செய்யத் தவறுவது அந்த உயிர்களுக்கு நாமிழைக்கும் மிகப்பெரிய கொடுமை.

இதுபோக நேற்று என் தோழியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது கோவையில் நிறைய இடங்களில் அவருடைய மருமகன், உணவைத் தயார் செய்து,  திரும்ப ஊருக்கு செல்ல முடியாத நிலையில்  இருக்கும் வெளியூர் காரர்களுக்கு வழங்குகிறார் என்றார். இதுபோல் பல குழுக்கள் இன்று செயல்படுகின்றன.....மேலும் அவர்களே தெரு நாய்களுக்கும் உணவை வழங்குகிறார்கள் என்றும் கூறினார். கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்னால் முடிந்த ஒரு சிறிய தொகையை  நாய்களுக்குப் போகும் உணவு தயார் செய்வதற்கு நன்கொடையாக தோழியிடம் கொடுத்தேன்.

நான் கல்லூரியில் படிக்கும் போது 'ஆன் ஃபிராங்கின் டைரி' என்றொரு புத்தகம் படித்தேன்.அதில் இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, ஜெர்மானியர்கள் யூதர்களைத் தேடித்தேடிக் கொன்றபோது சிலர் தப்பித்து கிடைத்த இடத்தில் வாழ்ந்தார் கள். அதுபோல் இந்த புத்தகத்தை எழுதிய ஆன் என்ற சிறு பெண்ணின் குடும்பம், தந்தையின் நண்பர் வீட்டில் ரகசிய அறைகளில் தலைமறைவாக ஒரு இரண்டு வருடங்கள் வாழ்ந்தது.
பிறகு ஜெர்மானியர்கள் அவர்களைப் பிடித்து விட்டார்கள்.
அவர்களுடைய கொடுமையான காம்ப்பில் சிறைபட்டு சில மாதங்களில் தந்தையைத் தவிர குடும்ப அங்கத்தினர் அனைவரும் உயிரிழந்தார்கள்.
அந்த வீட்டில் அடைபட்ட வாழ்க்கை வாழ்ந்த போதும் இந்த சிறு பெண் ஆன் சந்தோஷமாக வாழ்ந்து வீட்டில் கிடைத்த சிறிய சவுகரியங்களைக்கூட மிகவும் உணர்ந்து அனுபவித்து வாழ்ந்திருக்கிறார். வெளி உலகத்திடம் அவருக்கு இருந்த ஒரே தொடர்பு ஒரு சிறிய சாளரம் வழியாக அவர் கண்களுக்கு தெரிந்த ஒரு மரத்தின் ஒரு கிளை மட்டுமே!
இரண்டு வருடங்கள் அந்த வீட்டில் வாழ்ந்த நாட்களை பற்றி அவர் அவ்வப்பொழுது எழுதி வைத்த குறிப்புகளை,
ஜெர்மானியர்களிடமிருந்து விடுதலை கிடைத்த பிறகு,
ஆனின் தந்தை பதிப்பித்து வெளியிட்டார் .
நமது அடைப்பு காலத்தில் எனக்கு ஏனோ அந்தப் புத்தகம் ஞாபகம் வருகிறது.





Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி