தோரோவின் வால்டன்

தோரோவின் வால்டன்

அமெரிக்க நாட்டில் பிறந்து
அன்னை பூமி அருமை
அன்றே அவரும் உணர்ந்து,
சின்னஞ் சிறிய அறை ஒன்று காட்டினுள்ளே கட்டிக்கொண்டு தன்னந்தனியே வாழ்வொன்று வாழ்ந்து பார்த்தார் தோரோவென்ற சிந்தனையாளர், அவர் வயதப்போது இருபத்தேழு!

அணியும் ஆடை ஒன்றே ஒன்று,
அதுவும் போக பொருட்களெல்லாம்
ஒருவர் தேவை என்னவோ
அவையே மட்டும் உண்டங்கே!

காட்டில் தானே பயிரிட்டு
தேவைக்களவாய் உணவெடுத்து,
இயற்கையோடு ஒன்றாய் இருந்து, இயைந்து வாழ்ந்த வாழ்க்கை
இருந்ததெப்படி என்பதை
இயம்பித்தந்தார் உலகிற்கு,
சின்னஞ்சிறிய புத்தகமொன்றில்!

தேவைக்கதிகம் எது சேர்ந்தாலும்
அதுவே திருப்பும் நம் மனதை மெய்யறிவை நாம் உணரா வண்ணம்
என்பது தோரோ என்பவர் எண்ணம்!

குறைவே நிறைவென வாழ்நத தோரோ,
காட்டில் கட்டிய சிறு வீடு,
இருந்தது வால்டன்  குளக்கரையில்,
குளமும் சுற்றிய காடும்
சொந்தம் அறிஞர்  எமர்சனுக்கு.
தோரோவுக்குக் கொடுத்தார் அதைக்
காட்டில் தனியே வாழ்வதற்கு...

வாழ்ந்து பார்த்த தோரோ
வருடம் இரண்டு முடிந்ததும்
வரைந்தார் அந்த அனுபவத்தை 'வால்டன்' என்ற புத்தகத்தில்!

இன்றைய வேக வாழ்க்கையிலே இந்தச் சிறிய புத்தகத்தை,
மனதை ஒன்றி நாம் படித்தால்,
குழம்பி கிடக்கும் நம் சிந்தை
சற்றே தெளிய வாய்ப்புண்டு!


🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡

👇🏼'மினிமலிஸம்'

இன்று நாம் பல இடங்களில் மினிமலிஸம் என்கிற வார்த்தையைக் கேட்கிறோம், படிக்கிறோம்.
அதாவது மிகக் குறைந்த அளவு  பொருட்களை வைத்து வாழ்க்கையை நிறைவாக வாழ்வது.
குறைவே நிறைவு என்பதன் அர்த்தம் இந்த மினிமலிசம்!

ஒரு காலத்தில் ஒரு பழமொழி உலவி வந்தது 'சிறுக கட்டிப் பெருக வாழ்'
என்று..... அதற்கு இது தான் அர்த்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.சில ஆண்டுகள் முன்பு வரை நம் நாட்டில் ஏறத்தாழ அனைவரும் இப்படித்தான் வாழ்ந்து வந்தார்கள்.

இதுபோன்ற சித்தாந்தம் நம்மூரிலும் நம்நாட்டிலும் மட்டும் இல்லாமல் உலகில் பலரிடமும் இருந்திருக்கிறது.
செல்வச் செழிப்பும் நுகர்- கலாச்சாரமும் மிக மிக அதிகமாக உள்ள நாடான அமெரிக்காவில் இப்படி ஒருத்தர் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து, வாழ்ந்து காண்பித்து அதை ஒரு புத்தகமாகவும் எழுதியிருக்கிறார்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் வாகனம் இல்லை,  மின்சாரமும் இல்லை, மிக மிக  முக்கியமாக நெகிழிப் பைகளும் குப்பிகளும் இல்லை.
இருந்தும் அந்தக் காலத்திலேயே அவ்வளவு  குறைவாக  மக்கள் தொகை இருந்த பொழுதே,
இவர் அன்று மக்கள் வாழ்ந்த வாழ்க்கையிலேயே, தேவையில்லாத பகட்டு இருக்கிறது, அளவுக்கு மீறிய பொருட்களும் உபயோகப்படுத்துகிறோம் என்று எண்ணியிருக்கிறார். இந்தப் பொருட்களினால் வாழ்க்கையில் தந்நிறைவும் கிடைக்காது என்பதையும் இவர் உணர்ந்திருக்கிறார்.
 
இப்படி ஒரு 'மினிமலிஸம்' வாழ்க்கை ஒரு நாற்பது ஐம்பது வருடம் முன்னால் நம்மூரில் அல்லது நம் நாட்டிலே கூட என்று சொல்லலாம், அனைவரும் சாதாரணமாக வாழ்ந்த வாழ்க்கைதான்.
யாரும் பகட்டான துணிமணிகள் அதிகம் அணிவது, ஆடம்பர உணவு, குறிப்பாக உணவை வீணாக்குதல் எதுவும் செய்யவில்லை.
ஒரு திருமணம் என்றால் உறவினர்கள் நான்கைந்து நாட்கள் முன்னாடி வந்து அவர்களே காய் அறிதல், உணவு தயாரித்தல், எல்லாம் செய்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுவார்கள்.... உறவினர்களே பரிமாறுவார்கள்.
கூட்டமும் இப்படி அலைமோதாது. அன்று திருமண விழாக்கள் உறவினர்கள் கூடுவதற்கு ஒரு காரணமாக இருந்தது. ஏனென்றால் மற்ற நாட்களில் பார்க்க வாய்ப்பில்லை.
ஒரு வாரம் பத்து நாட்கள் போல் அனைவரும் தங்கி அந்த திருமண விழாவை மிகவும் களிப்புடன் நடத்துவார்கள், அதன் காரணமாக ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சீர் சடங்கு எல்லாம் இருந்தது. அவைகளுக்கு ஒரு தேவையும் இருந்தது -அந்த நாட்களில்.

இன்று திருமண விழாவில் சீர் சடங்குகள் அர்த்தம் புரியாமல் வெறுமா கடமைக்கு செய்யப்படுகிறது அதனால் அதில் ஒரு சந்தோஷம் இல்லை,விழாவும் ஒரு பிஸினஸ் போல் மாறிவிட்டது,
உணவு ஓரிடத்தில் ஆர்டர் பண்ணுகிறோம். பெரிய திருமண மண்டபம் வாடகைக்கு எடுக்கிறோம், லட்சக்கணக்கில் செலவு செய்து பட்டுப் புடவை வாங்குகிறோம். யார் ஜாஸ்தி செலவு செய்கிறார்கள் என்பதில் போட்டி ..... இப்பொழுது விழாவையே எடுத்து நடத்தும் ஏஜென்சிகள் வந்துவிட்டன. இவையெல்லாம் ஒரு விதத்தில் அனைவருக்கும் ஒரு தொழில் நடத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறது.
அந்த விதத்தில் ஒரு சிறு நன்மை என்றாலும், நன்மை தீமை இரண்டையும் நாம் தராசில் வைத்துப் பார்க்கும்போது தீமையே இதில் மிக மிக அதிகம். அந்த நன்மையை அடித்துச் செல்லும் அளவுக்கு தீமைகள் மிக அதிகமாக இருக்கின்றன.

மிகப்பெரிய அளவில் உணவை தயாரித்து அதில் பாதி வெளியே கொட்டப்படுகிறது. இதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று தெரியவில்லை.
திருமண விழாவுக்கு வரும் பலருக்கும் அந்த திருமண ஜோடியை தெரியாது.
வந்து உணவு அறைக்கு சென்று விட்டு, திரும்பி விடுவது என்ற நிலைமை இருக்கிறது.
நானும் சில சமயம் அப்படிப் போயிருக்கிறேன், கூட்டம் அதிகம் என்பதால் உள்ளே போக முடியாமல்.
உணவு உண்ண வாருங்கள் என்று திருமண வீட்டுக்காரர்கள் அழைத்தது எல்லாம் போய் இன்று கியூவில் தான் நிற்கிறோம், சிலநேரங்களில் போட்டியும் இருக்கும்.
ஆகையால் சமீபத்தில் இருந்து இத்தகைய விழாக்களுக்கு நான் போவதில்லை, அவைகளின் அளவுக்கு மீறிய பகட்டுடன் என்னால் ஒன்ற முடியாததால்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க நாம் தனிமனிதராக என்ன செய்யலாம் நம் பூமியை இன்னும் நீண்ட நாட்கள் பல தலைமுறைகளுக்கு நன்றாக இருப்பதற்கு?
நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால், எடுத்து வைக்கும் முதல் அடியாக ஒன்றே ஒன்று செய்யலாம் - எந்தக் கடைக்குச் சென்றாலும் நாம் துணிப்பைகள் ஒரு நான்கைந்து எடுத்துச் சென்றால் போதும். பிளாஸ்டிக் பையில் 'பேக்' செய்திருக்கும் எந்த பொருளையும் வாங்க கூடாது என்ற ஒரே முடிவு எடுத்தால் போதும்.
பருப்பு அரிசி முதலியவை கூட நாம் பை எடுத்துச் சென்று அளந்து வாங்கி வந்து விடலாம்... அவற்றை அவ்வாறு கொடுக்கும் கடைகளிலிருந்து.
ஸ்டோர்களில் நெகிழிப் பையில் பேக் செய்திருக்கும் மளிகை சாமான்களை வாங்காமல் விட்டாலே அது ஒரு மிகப் பெரிய நன்மையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
நம் வீட்டு விழாக்களை எளிமையாக நடத்தலாம்...
சிறு துளிதான் பெரு வெள்ளம்!


Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி