விபத்தின் விளைவு

விபத்தின் விளைவு

உக்ரெய்ன் நாட்டு செர்னோபில்லில்
86 இல் வெடித்தது
அங்கே இருந்த அனுமின் நிலையம்.
ஆவியின் வெப்பம் அன்றே கொன்றது
அருகிருந்த மனிதர் இருவரை,
அதன்பின் மெல்லக் கொன்றது இன்னும் பலரை.....
அதற்கு மேல் கதிர்வீச்சும்
இருந்து வந்த காரணத்தால்,
இருபது மைல் சுற்றளவில்
வாழ்ந்து வந்த மனிதரெல்லாம் விட்டுச்சென்றனர் வீடுகளை!

வருடம் சென்றன முப்பத்திநான்கு,
இருந்தும் மனிதர் திரும்பவில்லை
கதிரின் பயங்கர விளைவை எண்ணி.....

இடத்தை இன்று கண்டு வரலாம்
என்று சென்றனர் சில மனிதர்
பாதுகாப்புக் கவசம் அணிந்து....

அதிசயமான  காட்சி ஒன்று
அங்கே விரிந்தது அவர்கள் முன்னே,
என்றுமில்லா அளவில்
செடியும் கொடியும் மரமும் அனைத்து காட்டு விலங்குகளும், அழிந்ததென்ற குதிரைகளும் செழித்து வளர்ந்து சிரித்தன!
அவைகளின் உடம்பில் குறைகள் ஏதும்
பார்க்கும் பார்வையில் புலப்படவில்லை!
உடம்பினுள்ளே குறையுண்டா
இன்னும் தெளிவாய் தெரியவில்லை!

மனிதனில்லா இடத்தினிலே
கதிர்வீச்சிருந்தும் கொழித்திடும் இயற்கை!
மனிதன் எங்கே இருந்தாலும் முதலில் அழிவது இயற்கையோ?
அனுமின் கதிரினும்
கொடியதா
மனிதன் என்ற இனமிங்கே?



🌵🌴🌳🌲🌏🌎🌍🦌🐎🐒🦅🦉🐌🐜

செர்னோபில்லில் இன்று
👇🏻
இப்பொழுது எல்லாம் கொஞ்சம் டிவி பார்க்கும் பழக்கம் குறைந்து அடிக்கடி யூ ட்யூப் பார்க்கும் பழக்கம் வந்திருக்கிறது. மிகவும் சுவாரசியமான சில நிகழ்ச்சிகளை அதில் பார்க்க நேரிடுகிறது.
பெரும்பாலும் நான் வனவிலங்குகள் காடுகள் மற்றும் இயற்கை பற்றி பார்ப்பேன். ஆரோக்கியம் பற்றியும் பலமுறை பார்ப்பேன்.

இதில் வன விலங்குகள் பற்றிய ஒரு லிங்க் கிடைத்தது. பல வருடங்களுக்கு முன்பு மிக மிகக் கொடிய அணுமின் நிலைய விபத்து ஏற்பட்டது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அது ஏற்பட்டபொழுது அதைப் பற்றி கேள்விப்பட்டதும் ஞாபகமிருக்கிறது. திடீரென்று செர்னோபில் என்ற வார்த்தையை யூ ட்யூப் காண்பித்ததும் சரி என்று பார்த்தேன்.... இன்று செர்நோபில் எப்படி இருக்கிறது என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அந்த யூட்யூப் வீடியோ வந்திருந்தது.  அதை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பல வனவிலங்குகள் அங்கே நன்றாக கொழுகொழுவென்று ஆரோக்கியமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தன. மரம் செடி கொடிகளும் அடர்ந்த காடு போல் நன்றாக வளர்ந்து செழித்து நம்ப முடியாத ஒரு காட்சியாக அது இருந்தது. அந்த விலங்குகளின் உள்உறுப்புகளின்ஆரோக்கியம் பற்றி  யாருக்கும் சரியாகத் தெரியவில்லை, ஏனென்றால் அதைப் பற்றி ஆராய்ச்சி இன்னும் செய்யவில்லை. ஆனால் பார்வைக்கு அவைகள் மிகவும் சுதந்திரமாகவும் சுறுசுறுப்பாகவும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் இருந்தன.

அனுமின் விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் இரண்டு பிரிவுகளாக அவ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள், இன்னும் அங்கு யாரும் செல்லவில்லை. கிட்டத்தட்ட 20 மைல் சுற்றளவில் மக்கள் தொகை எதுவும் இன்று வரை அங்கு இல்லை. பயத்தினால் யாரும் திரும்பிப் போகவும் இல்லை. ஆனால் விலங்குகளுக்கு அதைப் பற்றி எல்லாம் என்ன தெரியும்......?
பாவம் அவை மனிதன் இல்லாமல் சுதந்திரமாக ஒரு இடம் கிடைத்தவுடன் ஒவ்வொன்றாக உள்ளே சென்று பல்கிப் பெருகி இருக்கின்றன. செடிகொடிகளும் அவை பாட்டுக்கு வளர்ந்து இருக்கின்றன....  அருமையானதொரு இயற்கைக் காடாக அந்த இடம் செழித்திருக்கிறது, கட்டிடங்களின் ஊடே.

மனிதன் மட்டும் இந்த பூமியை விட்டு போய்விட்டால் எவ்வளவு அருமையாக பூமி தானே தன்னை நேர் செய்து கொள்கிறது என்பதற்கு நம் முன்னே கண்கூடாக இந்த நிகழ்ச்சி தெரிவதாக எனக்குப் படுகிறது.

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி