Jane Austen

Jane Austen

ஆங்கிலத்தில் ஆறு
அருமையான கதைகள்
எவை என்று கேட்டால்
இவை என்று கைநீட்டித்
தயங்காமல் சொல்வேன்.
ஜேன் ஆஸ்டன் என்ற
அபூர்வப் பெண்மணி
சிந்தையில் உதித்த
சிரிப்புடன் கூடிய
அருமைக் கதைகள்
அவையாறும் என்பேன்.

மனிதரின் மனம் மாறும் விதங்கள்
அவரின் சிந்தை போகும் தடங்கள்,
அன்பு காதல் சோகம்
விருப்பு வெறுப்பு குரோதம்
இன்னும் எத்தனை உணர்ச்சிகள் மனித மனதின் உள்ளே,
காதல் மலர்வது எவ்வாறு
அது வெல்வதும் தோற்பதும்
ஏனென்று.....
மனிதனின் வாழ்க்கைப் பாதையை
உணர்ச்சிகள் மாற்றும் விந்தையை....
இதைவிட யாரும் தெள்ளத் தெளிவாய்
நகைப்புடன் கூற முடியாதென்று  முடிவு செய்தது என் சிற்றறிவு!

ஆனால் அந்த அம்மையார்,
அருமைக் கதைகள் ஆறைக் கொடுத்தவர்,
அகவை நாற்பத்தி இரண்டில்
இயற்கை எய்திப் பிரிந்து போனார்.
இத்துனை  சிறிய வயதிற்குள் எத்துனை அறிவும் அதனின் செறிவும்!


பலமுறை படித்தேன் 👇🏼

Pride and Prejudice என்பதுதான் நான் முதலில் படித்த ஜேன் ஆஸ்டின் நாவல். கிட்டத்தட்ட அவருடைய நாவல்கள் அனைத்துமே காதல்கதைகளாகத்தான் இருக்கும்.
ஆனால் வெறும் காதலர்கள் மட்டும் இருப்பதில்லை அவருடைய கதைகளில். அவர்களை சுற்றியுள்ள குடும்பமும், அவர்கள் இருக்கும் கிராமத்தின் பழக்கவழக்கங்கள், எல்லாம் கதையோடு ஒட்டி,ஏறத்தாழ 250 வருடங்களுக்கு முன்பு இருந்த இங்கிலாந்து நாட்டின் கிராமங்களும் சிறு நகரங்களும்  நம் கண்முன்னே நின்றது போலத் தான் நான் உணர்ந்தேன்.
அங்கு வசித்த உயர் நடுத்தர குடும்பங்களும் செல்வந்தர்களின் குடும்பங்களும் அவர்களுடைய பழக்க வழக்கங்களும் நம் மனக்கண் முன்னே கதையாக ஓடும்.

இவருடைய கதைகளில் பாத்திர வடிவமைப்பு, கொஞ்சம் நம் கற்பனையை நீட்டிப் பார்த்தால்
கிட்டத்தட்ட நாம் அன்றாடம் பார்க்கும் நம் குடும்பத்தாரும் உறவினர்கள் போலும் தெரிவார்கள்.

ஜேனின் கதாநாயகர்களும் நாயகிகளும் பெரும்பாலும் பண்பாளர்களாகவும் அதிதீவிர நல்லவர்களாகவும் தான் இருப்பார்கள்.
இருந்தும் ஒரு கதைக்கு, இன்னொரு கதை கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் நம்மால் வாசிக்க முடிவதற்கு குறிப்பாக என்ன காரணம் என்று என்னால் குறிப்பாகக் கூற முடியவில்லை.
பாத்திர வடிவமைப்பு, நகைச்சுவை, கதைக்குப் பின்னே ஓளிந்திருக்கும் ஜேன் ஆஸ்டனின் அறிவும் ஞானமும் காரணங்களாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

இவருடைய ஆறு நாவல்களில் நான்கு நாவல்களை நான் மூன்று நான்கு முறை படித்து விட்டேன் மீண்டும் படிக்கும் எண்ணமும் உள்ளது.
மிக மிக மரியாதையுடன் பழகும் பண்புள்ளவர்கள் எல்லாம் நல்லவர்களாக இருப்பார்கள் என்று நம்ப முடியாது, என்ற உண்மையை இவருடைய 'சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி'கதையில் வரும் 'வில்லோபி' என்ற வில்லனைப் பார்த்து தான் நான் அறிந்து கொண்டேன்.

பிரைட் அண்ட் ப்ரெஜுடிஸில் வரும் கதாநாயகன் 'டார்சி' அனேகமாக அனைத்து பெண்களின் கனவுக் கதாநாயகனாக இருப்பார்.

எனக்கு ஒரு பெரிய குறை என்னவென்றால் ஜேன் ஆஸ்டின் தன்னுடைய சுயசரிதத்தை எழுதவில்லை.
அல்லது மற்றவர்கள் அவரைப் பற்றி ஆழமாக அறிந்து விரிவாக எழுதிய நூல் என்று எதுவும் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.
42 வயதிற்குள் இப்படி ஒரு சாதனை புரிந்த பெண்மணியைப் பற்றியும் அவர் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு இன்னும் இருக்கிறது.






Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி