அவரும் இவரும்

அவரும் இவரும்
         
"சுற்றுச்சூழல் காத்திட
மரந்தனை வளர்த்திட
நீர்நிலை நிலைத்திட
நெகிழியை ஒழித்திட
'செய்' என்று கூறும்
அன்புத் தோழியே
கேள்வி ஒன்று கேட்கிறேன்
பதிலினைப் பகருங்கள்.
நான் மட்டும் செய்தால்
பயனென்ன சொல்லுங்கள்
மற்றவர் மாறா
நிலை இருந்தாலே?"

என்று கேட்கும் நண்பர்களே
பகருகிறேன் கேளுங்களேன்!

பசி என்ற போது நாம் மட்டும் உண்டோம்
வளம் வந்தபோது நாம் வைத்துக்கொண்டோம்,
கடை சென்று வாங்குவது நமக்கு மட்டும் தானே?
நம் குடும்பம் நம் குழந்தை
நலம் பார்த்துக்கொண்டோம்,
யார் என்ன செய்தாலும் செய்யாமல் விட்டாலும்!

பொருள் ஈன்றதெல்லாம் நம் குடும்பம் வாழ
பொருள் சேர்ந்தபோது நாம் வைத்துக்கொண்டோம்
அவனுக்கில்லை இவனுக்கில்லை யோசிக்க வில்லை!

பிறந்தோம் வளர்ந்தோம்
பள்ளியில் படித்தோம்,
வேலை ஒன்று வாங்கினோம்
மணம் புரிந்து கொண்டோம்
குழந்தை தவழ்ந்தது
மகிழ்வுடன் முகர்ந்தோம்!
நண்பர் மணம் புரியவில்லை
நண்பருக்கு மழலையில்லை
என்ற கேள்வி எழுப்பவில்லை!

தனக்கென்று வந்தால்
தயங்காமல் செய்வோம்
தாய்க்கொன்று என்றால்-
பூமித் தாய்க்கு ஒன்று என்றால்,
அவர் எங்கே இவர் எங்கே?
என்ற வினாவெழுப்பினால்
என்ன பதில் கூறுவது சொல்லுங்கள் நண்பர்களே?

நம் கடமை நாம் செய்வோம்,
அவர் கடமை அவர் பாடு-
எளிமையான கோட்பாடு,
இதுவே என் நிலைப்பாடு!


👇🏼பரவலாம் நீர்த்திவலைகள்

என் தாயின் இல்லத்தில் நான்  இருக்கும் பொழுது பிளாஸ்டிக் குப்பைகளை தனியாகவும் மக்கும் குப்பைகளை தனியாகவும் எடுத்து போட்டால் ஒருவேளை மறுசுழற்சிக்கு மாநகராட்சி குப்பைகளை அனுப்பினால் அந்த நேரம் வேலை செய்வது சுலபமாக இருக்கும் மேலும் நமக்கு மக்கும் குப்பை மக்காத குப்பை என்கிற சித்தாந்தமும் என்னவென்று புரியும் என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்யுமாறு நான் கூறுவேன். அதற்கு என் தாய் எப்பொழுதும் கூறும் பதில் என்னவென்றால் 'நீ ஒருத்தி போட்டால் போதுமா? ஊரிலுள்ளோர் அனைவரும் கலந்துதான் ஒரே குப்பைக்கூடையில் போடுகிறார்கள்' என்பதுதான்.
பல வருடங்களாக செய்த வேலையை மாற்றி செய்ய சொல்வது அவருக்கு கொஞ்சம் கோபம் வந்தது என்று நினைக்கிறேன். மேலும் அதனுடைய காரணத்தை அவர் தெளிவாக புரிந்து கொள்ளாமலும் இருக்கலாம். அதை நாம் விளக்கினாலும்  கேட்பதற்கான பொறுமை அவருக்கு இல்லை நான் ஏதோ வேண்டாத கதை பேசுவதாக நினைத்துக் கொள்வார்.

நான்..... யார் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன நான் சரி என்று நினைப்பதை நான் மட்டுமாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.










Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

மாட்டுப் பொங்கல்

வாசலில் மண்புழு

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

பக்திப் படம்

🥼👩‍🎓 🐓