ரசாயனம் தேவையா

ரசாயனம் தேவையா?

பாத்திரம் கழுவப் பணம் போட்டு வாங்கிக் குவிக்கும் கட்டியும் நீரும்
சுற்றுச்சூழலை மட்டுமல்ல, வயிற்றுச் சூழலும் கெடுத்துவிடும்.
பாடுபட்டு சேர்த்த பணத்தை பறித்துச் செல்லக் காத்திருக்கும் என்னைப் போன்ற மருத்துவரும்
பணம்படைத்த வியாபாரியும்
பயனடைவார் இதனாலே!

வீட்டிலேயே எல்லோரும்
வைத்திருக்கும் மாவுகள்
வயிற்றுக்குள் சென்றாலும்
வாதனையெதுவும் செய்யாது....
அரிசி மாவு மைதா மாவு
இட்லி மாவு கடலை மாவு, வேறெந்த மாவு என்றாலும் மாய்ஞ்சு மாய்ஞ்சு தேய்க்கலாம்
பாத்திரத்தை நாமெல்லாம்
பள பளன்னு செய்யலாம்!
வயிற்று வலி ஏதுமின்றி வாழ்க்கையை நடத்தலாம்!
கழுவிப் போகும் நீரின்மிகுதியில்
கவலை ஏதும் இல்லாமல் காய்கறிகள் வளர்க்கலாம்!

👇🏼 சமையலறை

பள்ளி சென்ற காலத்தில் சாம்பலும் இலுப்பத்தூளும் கலந்து பாத்திரம் தேய்த்து கழுவியது ஞாபகமிருக்கிறது. சாதாரண பாத்திரத்துக்கு வெறும் உமி சாம்பல் (அரிசி ஆலைகளில் கிடைப்பது)  , எண்ணைக்கறை பாத்திரமாக இருந்தால், இலுப்ப தூள் கொடுப்பார்கள் வீட்டில், அதைக் கலந்து நன்றாக தேய்த்து கழுவினால் பாத்திரம் பளபளவென்று மின்னும்.
இருவர் கழுவும் பொழுது ஒருவர் தேய்த்துக் கொடுத்தால் இன்னொருவர் நீர் விட்டு கழுவி விடுவோம். அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் குழாய் எதுவும் கிடையாது. தண்ணீரை இரும்பு ட்ரம்மில் சேமித்து வைத்து அதிலிருந்து கொஞ்சம் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, கழுவி எடுத்து வைப்போம். சிரமமாக எதுவும் தெரிந்ததில்லை.
இன்று கிட்டத்தட்ட ஒரு முப்பது வருடமாக ரசாயனக் கலவை களைத்தான் பயன்படுத்து கிறோம். குழாய்  நீர் நிறைய விட்டு தேய்க்கிறோம்.
நம் வேலையை சுளுவாகச் செய்து பழகிவிட்டால் ஏற்கனவே செய்த வேலைகளே மிகவும் சிரமமாகத் தெரிகின்றன. வாழ்க்கை சொகுசாக மாற மாற நமக்கு உடற்பயிற்சி குறைந்து நாமும் சோம்பி பூமியையும்  ரசாயனத்தால் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். அறிவைப் பயன்படுத்தி மேம்படுதல் என்றில்லாமல் இல்லாமல் அந்நிய நாட்டைப் பின்பற்றி கீழே நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பது என் எண்ணம்.

இதற்கு பதிலாக வீட்டில் உபயோகப்படுத்தும், நாம் உணவாக பயன்படுத்தும் மாவுடன் உப்பு கலந்து தேய்த்தால் இன்னும் பளப்பள வென்றிருக்கும்.
கவனிக்காமல் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவு இருந்தாலும் வயிற்றுக்குக் கெடுதல் எதுவும் வராது. சுலபமாகவும் நோய் இல்லாமலும் இருக்கக்கூடிய இந்த வாழ்வை வியாபாரிகளும் விளம்பரமும் சேர்ந்து,நம் அறியாமையைப் பயன்படுத்தி நம் மனதைக் குழப்பி விட்டு அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். வியாபாரிகள் கூறும் இரசாயனக் கலவைகளை வாங்காவிட்டால் ஏதோ பெரிய தவறு செய்தது போலவும் போதிய சுத்தமில்லாமல் நாம் இருப்பது போலவும் ஒரு பிரமையை உருவாக்குகிறார்கள். விளம்பரங்கள் எதையும் நம்ப வேண்டிய அவசியம் கிடையாது. அவை அனைத்துக்கும் ஒரே குறிக்கோள் விளம்பரம் கொடுக்கும் வியாபாரிகள் பணம் சம்பாதிப்பது மட்டும் தான்.... நம் ஆரோக்கியம் அவர்களின் குறிக்கோள் கிடையாது!




Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி