யானையின் மேன்மை

யானையின் மேன்மை

யானைகளின்  கூட்டம் ஒன்றைக்
காத்து வந்த மாமனிதர்
இறந்து போன நாளன்று-
அவர் காத்த யானைக்கூட்டம்
காத தூரம் நடந்துவந்து,
துக்கத்திலே கலந்துகொண்டு
சோறு தண்ணி வேண்டாமென்று
இரண்டு நாட்கள் காத்திருந்து, திரும்பி நடந்து சென்ற கதை மனைவியவர் சொன்னார்
மனம் கனிந்து நின்றார்!

இறந்த செய்தி எங்கனம்
அந்த தூரம் கடந்து சென்று
யானை அதை உணர்ந்தது?
எவ்வாறிது நடந்தது?
விந்தையிலும் விந்தையென்று
சிந்தை இன்று எண்ணுது!

எல்லாமே நமதறிவு
விளங்கித் தான் விடுமென்று
எண்ணம் நாம் கொண்டோம் என்றால்
எள்ளித்தான் நகைத்திடும் பரந்திருக்கும் பிரபஞ்சம்!

வாழ்ந்திருக்கும் பூவுலகில்
விரிந்திருக்கும் அகிலத்தில்
இன்னும் நம் மனமுணரா
எத்தனையோ உண்டென்று
அறிய வேண்டும் நாமின்று!

நம் அறிவு சிறிதென்று
நாமென்று உணர்வோமோ,
அன்றே தொடங்கிவிடும்,
ஞானமெனும் திசை நோக்கி
நமதறிவு தன் பயணம்!

ஞானம் எதற்கென்று வினாவெழுப்பும் நண்பரே,
அங்கனம் இதை நோக்கின்
எதுவும்தான் எதற்கென்று என்
மனம் வினவுதே!
அடைந்தால்தான் விளங்கும்
அதன் பயன் என்னவென்று!
எனக்கொருநாள் ஞானம் வந்ததெனில்,
அந்த நாள் நானும் விளக்கிடுவேன் தங்களுக்கு!


ஏழாம் அறிவு👇🏼

ஒரு பதினைந்து வருடங்கள் முன்பு எங்களுடன் பத்து வருடம் வாழ்ந்த எங்களுடைய செல்ல நாய்க்குட்டி, பாப்பாத்தி என்று பெயர்...... அந்த நாய்க்குட்டிக்கு கொஞ்சம் பொதுவாக மற்ற நாய்களை விட ஏன் எங்களை விடவும் கொஞ்சம் அறிவு அதிகம்.
பாலும் தேனும் கலந்த நிறத்தில்  பட்டுப்போன்ற முடியுடன் அதி அழகாக இருப்பாள் எங்கள் பாப்பாத்தி.
அறிவும் அழகும் சேர்ந்த ஒரு அதிசயப்பிறவி.
ஆனால் கொஞ்சம் பந்தா பிடித்தவள்.
விருப்பமான மனிதர்கள் அழைத்தால் மட்டுமே வருவாள் மற்றவர்களை கொஞ்சம் அலட்சியமாக நடத்துவாள்.
பாப்பாத்தியிடம் எனக்கு மிகவும் அதிசயமான ஒரு செயல் என்னவென்றால்
பல நேரங்களில் நான் ஆழ்ந்த யோசனையில் இருக்கும்போது திடீரென்று எனது சிந்தனை தடம் மாறினால்  என்  உடல் மொழி ஏதும் மாறா விட்டாலும், தூரத்தில் படுத்துக்கொண்டிருக்கும் பாப்பா சட்டென்று தலையை தூக்கி என்னைப் பார்ப்பாள்!
எனக்கு ஆச்சரியமாக இருக்கும் என்னுடைய எண்ண ஓட்டம் மாறியது எப்படி அவளுக்கு தெரிந்தது என்று, சில நேரங்களில் அதிர்ச்சியால் இருக்கும், நம் பாப்பாத்தி 'மைண்ட் ரீடிங்' செய்கிறாளோ என்று...…

விலங்குகளின் ஆறாவது (ஏழாவது?) அறிவைப்பற்றி பற்றிக் கூறும்பொழுது ஒரு நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது.
கோவையில் உள்ள என் சித்தியின் இல்லத்திற்கு ஒரு முறை சென்ற பொழுது, அங்கு காம்பவுண்ட் சுவரின் மேல் இரண்டு பூனைகள் அமர்ந்திருந்தன.
என்னைப் பார்த்ததும் ஒன்று ஓடி விட்டது, இன்னொன்று தயங்கி நின்று என் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்து.
நானும் அந்தப் பூனையின்  முகத்தை பார்த்தேன்.
சிறிது நேரம் கழித்து என்னை நோக்கி மியாவ் என்று கூறியது. நான் 'கொஞ்சம் இரு வருகிறேன்' என்று கூறிவிட்டு உள்ளே சென்றேன்.
இந்த பூனையும் நானும் இதற்கு முன் சந்தித்ததில்லை.
பிறகு ஒரு சின்னக் கிண்ணியில் பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்த பொழுது அந்த பூனை எனக்காக காத்துக் கொண்டிருந்தது.
நான் பாலை வைத்தவுடன் ஓடி வந்த குடித்தது. முன்பின் பார்த்திராத எனக்கும் அந்த பூனைக்கும் இடையில் எப்படி அதை சம்பாஷணை நடந்தது, நான் கூறியதை அதை எவ்வாறு விளங்கிக் கொண்டது என்று எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இன்னும் இருக்கிறது......


நான் மேலே உள்ள பாடலில் யானைகளைப் பற்றி கூறிய குறிப்பு Lawrence Anthony என்பவரைப் பற்றியது. 👇🏼

https://youtu.be/K7mli4LnN0s


Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி