அறமும் சட்டமும்

அறமும் சட்டமும்

சமூகம் என்ற அமைப்பு
சுமுகமாக இருக்க வேண்டி
அமைத்துக் கொண்ட நடைமுறை
சட்டம் என்ற வரையறை!
அறம் என்ற நெறி அடங்கும் நியாயம் என்ற வரைமுறையில்,
எல்லாப் பொழுதும் இதனுள்ளே வர இயலா சட்டம் திட்டம்!

அறத்தின்படி செய்ததை, சட்டம் சொன்னால் தவறென்று, தண்டனை மறுகணம் கிட்டிவிடும்!
அறமும்நெறியும் தவறென்றாலும்
சட்டம் அதை சரியென்றால்
தண்டனை எதுவும் கிடையாது...
நாடு விட்டு நாடு சென்றால்
மாறிவிடலாம் சட்டம் திட்டம்,
நாடெதுவாயிருந்தாலும்
அறநெறியென்பது ஒன்றே மட்டும்!

நியாயம் வேண்டி மக்களெல்லாம்
சட்டம் திட்டம் துணைகொண்டு தேடிப்போகும் வளாகம்
நீதி காக்கும் மன்றம்!
அறம் என்னும் நெறி காக்க
மனசாட்சியென்ற ஒற்றைக்குரல்
வேண்டிக்கொள்ளும் இடம்
மனமென்ற மாமன்றம்!


அறம் தவறிய சட்டம்👇🏼

இப்பொழுதெல்லாம் உலகில் நடக்கும் செய்திகள் அனைத்தும் நாம் கேட்காமலே நம் கைபேசியில் வந்துவிடுகின்றன, நிகழ்நிலை மூலம்.
அதில் ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா என்ற நாட்டில் சமீபமாக ஒரு சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது என்று படித்தேன். அதாவது வேண்டும் என்பவர்கள் அதற்கான அனுமதி வாங்கி யானைகளைக் கொன்று கொள்ளலாம் என்று அரசாங்கம் ஆணை பிறப்பித்திருக்கிறது. இதற்கு முன்பு போட்ஸ்வானா நாட்டில்தான் பாதுகாப்பாக இருந்த காடுகளினால் விலங்கினங்கள் அனைத்தும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் அதிகமாக நன்கு பெருகி இருந்தன என்றும் படித்திருக்கிறேன்.
யானைகள் அவர்கள் நினைத்த அளவைவிட பெருகிவிட்டதாலோ என்னவோ இப்பொழுது இப்படி ஒரு சட்டம் போட்டிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை இது ஒரு அறமில்லாத சட்டம் என்றுதான் எண்ணுகிறேன். இத்தனைதான் இருக்கலாம் அதற்கு மேல் வேண்டாம் என்று ஒரு முடிவு எடுத்து மகத்தான யானைகளைக் கொன்றுவிடலாம் என்று  யார் நமக்கு உரிமை கொடுத்தது?அவற்றை கொல்லக்கூடிய ஆயுதமும் பேராசையையும் தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது நம்மிடம்? நாம் பத்து மனிதர்கள் ஒன்றாக சேர்ந்து கூட வெறுங்கையுடன் ஒரு ஒற்றை யானையுடன் போராடக்கூடிய வலிமை இருக்கிறதா நம்மிடம்? ஆயுதம் இல்லாவிட்டால் நாம் ஒன்றும் இல்லை...

நாம் அழிக்கும் யானைகளில் ஒன்றிரண்டு குட்டியாக இருக்கலாம் ஒன்றிரண்டு தாயாக இருக்கலாம்..... குட்டியை பிரிந்த தாயும், தாயை பிரிந்த குட்டியும் அதன்பிறகு வாழ்வில் எவ்வளவு வேதனை அடையும்....?
அவற்றின் வாழ்வில் என்றும் ஒரு சோகம் இருந்து கொண்டேதான் இருக்கும்.சில நேரங்களில் குட்டி பிழைக்க முடியாமல் கூட போகுமோ என்னவோ தெரியவில்லை. யானைகளின் சமூகத்தில் நம் சமூகம் போலவே சொந்த பந்தம், இறந்தால் துக்கம் அனுசரிப்பது, போன்றவை இருக்கின்றன. இறந்த குட்டியின் அருகில் பல நாட்கள் நகராமல் இருக்கும் தாய்யானை பற்றி நாம் பல இடங்களில் படித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம்.
சட்டம் என்ற பெயரில் அறநெறி தவறி இது நடந்து இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. மனிதனின் குறுகிய நோக்கையும்  அகந்தையையும்  காண்பிப்பது போல் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி