தானே பெற்றது

தானே பெற்றது

தானே வந்த ஞானம்,
என்றும் உள்ளது உறுதுணையென்று
சொல்லிக் கொடுத்த சொல்லும் நிற்பதில்லை
நிலையென்றிங்கே!

பள்ளியிலே வாத்தியாரும்
வீட்டினிலே பெற்றோரும்
கேளப்பா கேளென்று சொல்லிக்கொடுக்கும்
எந்தச் சொல்லும்
செவியினிலே பட்டவுடன் பறந்திடுமே வெளியினிலே!

யாரும் எதுவும் சொல்லாமல்
அனிச்சையாகத் தானே
ஏதோ ஒன்றைக் கண்டு எண்ணமதிலே லயிக்க
விழிகள் அதை நோக்க செவிகள் அதைக்கேட்டு
அம்பெனச் சென்று பதியுமது மனதில்.....
அதிலே வந்த ஞானம்,
இறுதிவரை நின்றிடும்
மறையாது அதென்றுமே!

சொல்லிக்கொடுக்கும் சொல்லும்
திணிக்கப்படும் அறிவும்
சென்றிடாது உள்ளே
திரும்பிடுமது சொல்லுமிடம்.
தானே கொண்ட அறிவும்
சுயமாய் வந்த ஞானமும்
சென்றிடாது வெளியினிலே தங்கிடுமது மனதின் உள்ளே,
துணை இருக்கும் என்றுமே வாழ்க்கையெனும் பயணத்திலே!

👇🏼 சொல்லாமல் கற்றது

நான் கார் ஓட்ட கற்ற புதிதில் அப்பொழுதுதான் க்ளட்ச்  பிரேக் அக்ஸளரேட்டர்  முதலியவை எனக்குப் பரிச்சயமான அந்த சமயத்தில் ஒருநாள் நான் பஸ்ஸில் முன்புறம் நின்றபடி பிரயாணம் செய்து கொண்டிருந்த பொழுது ஏதோ நினைப்பில் என்னை அறியாமல் என் கண்கள் பஸ் டிரைவரின் கால்களை நோக்கின.
அவருடைய இடது கை கியரின் மீது இருக்க வலது கை ஸ்டியரிங்கை பிடித்து இருக்க இடது கால் க்ளட்ச்சை அழுத்தவும் இடது கை கியரை மாற்றுவதும் ஒரு நடனம் போல் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு அழகாக நடந்தது.
வலது காலை அவர் அக்ஸரேட்டரிலிருந்து அதிகம் எடுக்கவும் இல்லை அதிகம் அழுத்தவும் இல்லை, பிரேக்கை அவ்வப்பொழுது மிக லேசாக அழுத்துவார்.
நகரத்து நெரிசலில் வண்டி சென்றாலும் அழகாக கிளட்சை அழுத்தி கீரை மாற்றி மிகவும் சலனமில்லாமல் பஸ்ஸை ஓட்டினார். எனக்கு இன்றும் அந்த நிகழ்ச்சி நன்றாக நினைவில் இருக்கிறது.

இதேபோல் இப்பொழுது இரண்டரை வயதாகும் என் பேரன் பல மாதங்களுக்கு முன்பு, கிட்டத்தட்ட ஒரு ஒன்பதிலிருந்து பத்து மாதங்கள்தான் ஆகியிருக்கும் அவனுக்கு..... என் மகன் அவனை தன் மடியில் வைத்துக்கொண்டு கார் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தான்.
என் பேரனின் கைகள் இரண்டும் ஸ்டியரிங்கைப் பிடித்து இப்படியும் அப்படியும் திருப்பின  ஓரிரு வினாடிகள், பிறகு இடது கை கியரைப்பிடித்து இப்படியும் அப்படியும் ஆட்டியது, அதன் பிறகு அவன் இடது கையின் ஆட்காட்டி விரலை எடுத்து ஹாரன் மீது வைத்து அழுத்தினான்.
யாரும் அவனிடம் எதுவும் கூறவில்லை... ஒன்பது மாத குழந்தைக்கு நிச்சயமாக என் மகன் கற்றுக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.... அவன் தன் தந்தை கார் ஓட்டுவதை பார்த்து ஸ்டயரிங்கை திருப்புவது கியரை பிடிப்பது ஹாரன் அடிப்பது மூன்றையும் தானே நோக்கி அதேபோல் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான். இதைப்பார்த்து என் மகனும் நானும் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அதைப் பார்க்கும் போதே மனம் ஆனந்தத்தில் திளைத்தது.

என் பேரன் அவன் தந்தை வண்டி ஓட்டுவதைப் பார்த்து தானே கற்றுக்கொண்ட விஷயங்கள் எவ்வளவு துல்லியமாக அவன் மனதில் பதிந்து இருக்கின்றன!
இதை அவன் பெரியவனான பிறகு உட்கார்ந்து சொல்லிக் கொடுத்தால் கூட நாம் சொல்வதை எல்லாம் கேட்பானா என்பது உறுதியில்லை!

என் அன்னையிடம் உள்ள ஒரு நல்ல பழக்கம், அவருடைய கைப்பேசி எப்பொழுது மணி அடித்தாலும் உடனே எடுத்து பேசிவிடுவார். உணவு உண்ணும் வேளையில் கூட அதை நிறுத்திவிட்டு வெகு நேரமானாலும் பேசிவிட்டுப் பிறகு தான் மீதமுள்ள உணவை உண்ணவார். எனக்கு பல நேரங்களில் ஆச்சரியமாக இருக்கும் சாப்பிடும் வேளையில் கூட போன் அடித்தால் எடுத்து பேசுகிறாரே என்று.....இது ஒரு நல்ல பண்பு என்று தான் நான் நினைக்கிறேன். என் மனதில் அவருடைய இந்த பழக்கம் பதிந்து இருக்கிறது, ஆனால் நான் அதை பின்பற்றுவது என்று உறுதியாகக் கூறமுடியாது.

இதேபோல் என் கணவர் மகன்கள் மற்றும் நண்பர்களிடம் நான் கவனித்த பல நல்ல பண்புகள் இருக்கின்றன. அவர்கள் யாரும் என்றும் என்னிடம் கூறியதில்லை இப்படி நடந்து கொள், அப்படி செய், என்று..... ஆனால் அவர்கள் நடத்தையில் நானே கவனித்த பல நல்ல பண்புகள் என் மனதில் ஆழப் பதிந்துள்ளன. ஒன்றிரண்டை நான் பின்பற்றுவும் முயற்சி செய்திருக்கிறேன்.
ஆனால் என்னிடம் பல முறை என் கணவர் தானே முன்வந்து 'இப்படி இரு' என்று கூறிய பல நல்ல விஷயங்களை நான் பின்பற்றுவது மிகமிக அரிதாகத்தான் நடக்கிறது.....

நான் கண்மருத்துவம் படித்துக்கொண்டிருந்த பொழுது அறுவை சிகிச்சை செய்கின்ற சீனியர் மருத்துவர்கள் செய்வதை அருகிலிருந்து பார்த்து அவர்கள் ஏதும் சொல்லாமல் என் மனதில் பதிந்த பல விஷயங்களை நான் என்னுடைய அறுவை சிகிச்சையில் பயன்படுத்தி அவை நன்றாக வந்திருக்கின்றன.
அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை அவர்கள் தானே முன்வந்து கூறியவைகளும் என் மனதில் பதிந்து அவைகளை
பின்பற்றியிருக்கிறேன்.... ஒருவேளை நானாக கற்க வேண்டும் என்ற என் விருப்பத்தினால்  சொன்னவை சொல்லாதவை அனைத்தும் மனதில் பதிந்து  இருக்கலாம்.....


Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி