அன்பும் காதலும் இயற்கையின் நியதி

அன்பும் காதலும் இயற்கையின் நியதி


👭👬👫

இயற்கையில்லா அன்பும் உண்டோ?
அன்பென்றாலே இயற்கைதானே!

'இவ்விடம் மட்டும் அன்புடன் இரு
அவ்விடமிருந்தால் இயல்பல்ல.
இவ்வாறிருந்தால் இயற்கை அன்பு,
அவ்வாறிருந்தால் இயற்கையல்ல,
சட்டப்படி அது அன்பேயில்லை!

சட்டம்  சொல்லுவதென்னவோ
அதுவே இயற்கை என்பது!
சட்டம் ஒரு கால் மாறியதென்றால்
அன்பும் அன்றே மாறல் வேண்டும்!'
என்று சட்டம் தீட்டும் நாடெல்லாம்
எவ்வாறாகும் சுதந்திர நாடாய்?

அடுத்தவர் வாழ்வில் நுழைவது தவறு
அவரது சொத்தை எடுப்பதும் தவறு,
அவருக்குத் துன்பம் கொடுப்பது குற்றம்
இதற்கு வேண்டும் சட்டம் திட்டம்.

இயற்கையில் வந்தது மனமும் குணமும்
இதிலே பிறந்தது அன்பும் ஆசையும், 
சட்டம்  சமூகம் மாறென சொன்னால்
சொன்னதும் மாற
மனமொரு மிஷினா?
சுதந்திரம் என்பது வாழ்வின் மூச்சு சுவாசம் அதுவே எல்லா உயிர்க்கும்...!

அன்பிற்கோர் மட்டம் 
என்றதொரு சட்டம்
நில்லாதென்ற கட்டம்
என்பதிங்கு வந்தால்
இல்லையொரு நட்டம்!
ஏனெனில்...

இயற்கையின் அமைப்பில் பிழையில்லை
இயைந்து வாழ்ந்தால் குறையில்லை!

மனிதக் கூட்டம் இப்படிப் பெருக-
பூமியிலே
மனிதக் கூட்டம் இப்படிப் பெருக
காரணம் யாதென சிந்தித்தால்,
இயற்கைக்கெதிராய் போனதாலோ?


இயற்கையா இல்லையா? 👇🏼

பல வருஷங்களுக்கு முன்பு ஒரு மருத்துவ நண்பருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, குழந்தைகளின் திருமணம் பற்றிய பேச்சு வந்தது.....அப்பொழுது அவர் - 'வெளிநாடுகளில் எல்லாம் ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்கிறார்கள்,அது போல் இல்லாமல் இருந்தால் சரி' என்று கூறினார். ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது இயற்கைக்கு மாறானது அல்லவா என்று கேட்டார்.
'இயல்பாய் மனதில் எழும் உணர்வுகளை நாம் எப்படி இயற்கைக்கு மாறானது என்று கூறமுடியும்? இயற்கைதானே அந்த உணர்வுகளை உருவாக்குகிறது அவரவர் மனதில்?'என்று நான் கேட்டேன்.

மேலும் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் மனிதனின் ஜனத்தொகை பெருக்கம் ஒரு கட்டுப்பாட்டில் இருப்பதற்காக இயற்கையே அமைத்த ஒரு கோட்பாடு இதுவாக இருக்குமோ என்று? மனதில் தோன்றும் உணர்வுகளை இயற்கையான உணர்வு இயற்கைக்கு எதிரான உணர்வு என்று நாம் பாகுபாடு செய்வது  கொஞ்சம் அறிவீனமானது என்று நினைக்கிறேன். அந்த உணர்வுகளால் வரும் செயல்கள் இன்னொரு மனிதருக்கு துன்பம் விளைவிக்கும் பொழுது நாம் சமூக நன்மை கருதி கண்டிப்பாக அதை சட்டம் போட்டு கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் யாருக்கும் துன்பமும், இடைஞ்சலும் வராத வரையில் சொந்த வாழ்க்கையில் அவரவர் விருப்பப்படி இருக்கும் சுதந்திரம் நிச்சயம் எல்லா மனிதருக்கும் தேவை என்று நான் நம்புகிறேன். இதைத் தவறு என்று பேசுவதும் கேலியாக நோக்குவதும் இனியும் நாம் செய்து கொண்டிருப்பது பூனை கண்களை மூடிக் கொண்ட கதை போலத்தான்.

பார்க்கப் போனால் நம் நாட்டில் பழங்காலத்தில் யாரும் இதைப் பற்றி தவறாகவோ கேலியாகவோ கூறியதாக எந்த இலக்கியத்திலும் இல்லை.
அப்படியே இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இடையில் ஆங்கிலேயர்கள் போட்ட சட்டப்படி அவர்கள் கண்ணோட்டத்தில் இது தவறு என்று ஒருகாலத்தில் கூறினார்கள்.... இன்று அவர்களே அதை மாற்றி அமைத்து விட்டார்கள். நம் நாட்டிலும் இந்த பரந்த நோக்கு வருவது நாட்டிற்கும் நமக்கும் நல்லது.


Comments

Post a Comment

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி