குட்டி நாய்

குட்டி நாய்


அங்கும் இங்கும் குதித்தோடிய
குட்டி நாயின்
சொக்கும் அழகில் மயங்கிப்போன அப்பாவும்,
வாங்கி வந்த நாய்க்குட்டி
வளருது வீட்டில் சுகமாக !

மூன்றுவேளை சோறும்பாலும்
முட்டை மாமிசம் சில நேரம்,
அனைவர் மடியிலும் செல்லமாக
அமர்ந்து கொள்ளும்
பலநேரம்!

வருடம் ஒன்று போனது
நாயும்  பெரிது ஆனது
குழந்தைப்பருவ அழகில்லை
மடியில் இடமும் போதவில்லை
'பையன் பரீட்ச்சை நேரமிது
நாயின்  தொல்லை தாங்கவில்லை
தூரச் சென்று விட்டு விடுவோம்
நாய் நமக்கினி தேவையில்லை'
தாயார் சொன்னார் அன்று
தந்தை கொண்டு விட்டார் சென்று.

உலகம் என்றால் என்னவென்று
அறியா அந்த நாய்க்குட்டி
அன்பு குடும்பம் எங்கே என்று
அலையும் அந்த நாய்க்குட்டி.
ஐயோ பாவம் என்ன செய்யும் ?
தெருவே வீடாய்க் கொண்ட நாய்கள்
அலைந்து திரியும் பெரிய நாய்கள்
புதிதாய் வந்த சின்ன நாயை கடித்துக் குதறி கொன்று விட வாய்ப்பும் நிறைய உள்ளதே...

👇🏼

வீட்டு நாய்

எங்கள் வீட்டு செல்ல நாய் பாப்பாத்திக்கு நான்கு வயதான பொழுது அவள் ஐந்து குட்டிகள் ஈன்றெடுத்தாள்.
ஐந்தையும் கண் போல பாதுகாத்து ஒரு மாதம் வரை தினமும் நான்கைந்து முறைகள் சுத்தம் செய்து மணக்க மணக்க வைத்திருந்தாள்.
அவளுக்கு ஏதேனும் அவசர வேலையாக வீட்டுக்கு வெளியே சென்றாலும், சில நிமிடங்களிலேயே  மீண்டும் ஓடிவந்து குட்டிகள் பத்திரமாக இருக்கின்றனவா என்று பார்த்து, ஒரு கடமை உணர்வு கொண்ட தாயாய் கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டாள்.
ஒன்றரை மாதம் சென்ற பிறகு தனியே விட்டு விட்டாள்,அவைகள் தானே வளரும் நேரம் வந்துவிட்டது என்று அறிந்தவளாக. அதன் பிறகு அந்த நாய் குட்டிகள் அவள் அருகில் வந்தால் கூட அவளுக்குப் பிடிக்காது, தூரத் தள்ளி விடுவாள்.
சுதந்திரமாக இருந்து பழக வேண்டும் என்று எண்ணி இருப்பாளோ என்னவோ....

பாப்பாவின் பாலும் தேனும் கலந்த நிறத்தில் ஒரு நாய்க்குட்டி கூட இல்லை. அனைத்து நாய்க்குட்டிகளும் அவைகளின் தந்தை போல லேசான பிரவுன் நிறத்திலேயே இருந்தன. அழகிலும் பாப்பாவுக்கு ஈடு இணையாக ஐந்து குட்டிகளில் ஒன்றுகூட வரவில்லை. ஒரு இரண்டு மாதத்தில் இருந்து நாங்கள் எங்களுக்குத் தெரிந்தவர், உறவினர் என்று நாய்க்குட்டிகளை நன்றாக வைத்திருப்பார்கள் என்று எங்கள் மனதிற்குப் பட்டவர்களிடம் குட்டிகளை ஒவ்வொன்றாகக் கொடுத்துவிட்டோம்.
கடைசி குட்டி சென்ற பிறகு ஒரு பத்து நாட்கள் பாப்பா கொஞ்சம் சோர்வாக காணப்பட்டாள். அதன்பிறகு தேறி விட்டாள். மீண்டும் எங்கள் வீட்டில்  ராணியாக வலம் வந்தாள். குட்டிகளை எடுத்துப் போன ஐவரில் கடைசியில் பிறந்த சின்னகுட்டியை எடுத்து போனவர்கள் ஒரு வருடம் போல் வைத்திருந்து விட்டு மீண்டும் எங்களிடமே கொண்டுவந்து விட்டு விட்டார்கள், அவர்கள் மகனுக்கு பரீட்சை நேரம் வந்துவிட்டது என்று ....
அந்த நாய்க்குட்டி தான் எங்களருமை கிளியோ. அவளும் எங்களுடன் ஒரு ஒன்பது வருடம் போல் வாழ்ந்து பிறகு எங்களை விட்டுப் பிரிந்து சென்றாள்.புற்று நோய் வந்து இறந்துபோனாள்.

இன்னொரு உறவினர்.... நாய்களின் மேல் நிறைய அன்பு கொண்டவர், எப்பொழுதுமே தன் தோட்டத்தில் இரண்டு மூன்று நாய்கள் வைத்திருப்பார். அவைகளை நன்றாக கவனித்து நல்ல உணவு கொடுப்பார். தோட்டத்தில் அவைகள் பல நேரம் சுதந்திரமாக அலைந்து திரிந்து நன்றாக வாழ்ந்து வந்தன. அவைகளில் ஒரு நாய்க்கு ஒரு வியாதி, கட்டிபோல் வந்து புண்ணாகி
மிகவும் சிரமப்பட்டது.  அவர் நிறைய வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை..... இந்த நாய் படும் துன்பத்தைக் காணச் சகிக்காமல் அவர் ஒருநாள் அந்த நாயை கொண்டு எங்கோ விட்டுவிட்டு வந்துவிட்டார். இதைக் கேள்விப்பட்டதும் எனக்கு கிட்டத்தட்ட நெஞ்சே நின்று விடும் போல அதிர்ச்சியாய் இருந்தது. நம்மால் காண சகிக்க முடியாத துன்பத்தை விட, புதிய இடத்தில் தோட்டத்தை விட்டு எங்கும் சென்று பழக்கமில்லாத அந்த நாய் என்ன செய்யும், அதுவும் வியாதி வந்த உடம்பை வைத்துக்கொண்டு என்று நினைத்தபோது எனக்குப் பதறியது.... ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு என்னால் அது படும் துன்பத்தைப் பார்க்க முடியவில்லை என்றார்.
நம் உணர்வுகள் நம் துன்பம் இதை மட்டுமே நாம் நினைத்துக்கொண்டு செயல்படுகிறோம்..... இதற்கு அந்த நாயை கருணைக்கொலை செய்திருந்தால் கூட மேல் என்று எனக்குத் தோன்றுகிறது. இன்றும் அந்த நாய் என்ன ஆனதோ என்று நினைத்தால்..........


பிகு:
செல்ல நாய் வீட்டில்
வேண்டுமென நினைப்போர்
ஆயுளுக்கும் காக்க
முடியுமென்றால் மட்டுமே
குட்டி நாயை வாங்க
முயற்சி எடுத்தல் நலம்.



Comments

  1. வாங்கும் போது மட்டுமல்ல, வளர்க்க எத்தனிக்கும் போதும் - சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி