செல்லப் பிராணிகள்

செல்லப் பிராணிகள்

வீட்டிலே செல்லமாய் வளர்த்திடும் விலங்குகள் குறைத்திடும் மனதில் நாம் உணர்ந்திடும் அழுத்தத்தை,
என்கிறார் மனநோய் மருத்துவரனைவரும்!

உண்மையுமுண்டு அவர்கள் உரையதிலே,
உணர்ந்தேன் நானும் இதை வீட்டில் பலமுறை,
செல்லமாய் நாய் இரண்டு நான் வைத்த பொழுதினிலே! எனதருமை க்ளியோ அவளருமை பாப்பா
இருவரும் இருந்தவரை தனிமை நான் உணரவில்லை.

எனிலும் பலமுறை  தோன்றிடும் எண்ணமிது,
அழுத்தமது  நம்மனதில் குறையுமதில் ஐயமில்லை!
எனில் கட்டி வைக்கும் நாயும், தொட்டிக்குள் மீனும்,
கூண்டில் இடும் பறவையும் எத்துனை அழுத்தத்துடன் வாழ்ந்து முடிந்தது..... 
ஆறறிவு மனிதர் நாம் அறிந்தோமா என்றாகிலும்?


பாப்பாவும் க்ளியோவும்👇🏼

என் மூத்த மகன் பத்தாவது பரீட்சை முடித்து சென்னைக்கு வந்துவிட்டான், பதினொன்று பன்னிரண்டாம் வகுப்பு படிக்க.
நாங்கள் அப்பொழுது பெங்களூரில் குடியிருந்தோம். அவன் தன் தாத்தா பாட்டியுடன் சென்னையில் தங்கி படிப்பேன் என்று வந்து ப்ளஸ்1 சேர்ந்துவிட்டான்.
அதுவரை ஒன்றாகவே வளர்ந்த  இருவரும் முதல் முறையாக பிரிந்ததால்,  இளைய மகன் கொஞ்சம் சோர்ந்ததுபோல் காணப்பட்டான்.
ஆகையால் அவனை உற்சாகப்படுத்த வேண்டி அவனுக்கு நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த ரெகார்ட் பிளேயர் வேண்டுமா அல்லது நாய்க்குட்டி வேண்டுமா என்று கேட்டபொழுது நாய்க்குட்டி தான் என்று உடனே பதில் வந்தது.
நாங்கள் சென்று எங்கள் அருமை பாப்பாத்தியை  வாங்கி வந்தோம். அது 'காக்கர் ஸ்பானியல்' வகையை சேர்ந்தது. ஒரு பத்து வருடங்கள் போல் எங்களுடன் இருந்து எங்கள் வாழ்க்கையை ஆக்கிரமித்து இருந்தாள் பாப்பாத்தி. அவளுடைய குட்டி க்ளியோவும் எங்களுடன் ஒரு ஒன்பது வருடம் போல் இருந்தாள்.
இருவருடைய ஆயுளும் அவ்வளவுதான்.

அவர்களிருவரும் எங்களுடன் இருந்த பொழுது எங்களுக்கு ஓய்வு நேரம் என்பது கொஞ்சம் குறைந்துபோனது. அவர்களை பார்ப்பது உணவு கொடுப்பது வெளியே கூட்டி செல்வது போன்ற வேலை சரியாக இருக்கும்.
நாங்கள் வேலைக்குச் சென்ற நேரம் போக மீதி நேரமெல்லாம் ஏதோ ஒரு வேலை இருந்து கொண்டிருக்கும். ஆனால் அந்த பத்து வருடம் தனிமை என்பது எங்களுக்கு இல்லை. அவர்கள் எங்கள் மன அழுத்தத்தை குறைத்தார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் தனிமை குறைந்தது,  மேலும் எங்களை அறியாமல் அவர்கள் இருவரின் மேல் மிகுந்த பாசம் வைத்துவிட்டோம்.
இருவரும் இறந்த பொழுது நாங்கள் அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை. இன்று நினைத்தாலும் கொஞ்சம் நெஞ்சை அடைப்பது போல் இருக்கிறது.
நாய் வளர்க்கும் அனைவரிடமும் நான் பார்த்த ஒரு பொதுவான குணம் இது. விருப்பமே இல்லாமல் நாய் வாங்குபவர்கள் கூட சில வாரங்களிலேயே அதன் மீது மிகுந்த அன்பு வைப்பவர்களாக மாறிவிடுகிறார்கள். இது எப்படி இந்த நாய் நம்மை இப்படி மாற்றுகிறது என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

ஒருமுறை ஏதோ ஒரு டிவி நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரி பேசும் பொழுது அவர் பல வருடங்களாக வைத்திருந்த அல்சேஷன் நாய் இறந்து விட்டதாகவும் அன்று காலை தான் அந்த நாயை அவர் அடக்கம் செய்துவிட்டு வந்திருப்பதாகவும் கூறினார். அவரால் பேச முடியவில்லை, அதைக் கூறும் பொழுதே அவருக்கு தொண்டை அடைத்து கண்களில் நீர் வந்துவிட்டது. அவ்வளவு  வயதான ஒரு மனிதர் அதுவும்  ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அழுதது கொஞ்சம் வியப்பாக இருந்தது.

நாய் என்றால் வாசலில் தான் இருக்கவேண்டும் வீட்டுக்குள்  அதற்கு வேலையே இல்லை என்ற கருத்துக் கொண்ட என் தாய் அடிக்கடி கூறுவார்கள்... பாப்பாவை நீங்கள் வாழும் அடுக்குமாடி ப்ளாட்டுக்குள் வைப்பது அவ்வளவு சரியில்லை, நாயை வீட்டுக்குள் அடைத்து வைப்பது தவறு, அது சுதந்திரமாக திரிய விடாமல் வைத்திருக்கிறீர்கள் என்று... அவர் இதை வீட்டின் உள்ளே நாய் வருவது பிடிக்காததால் தான் கூறினார் என்றாலும் அவர் கருத்திலும் உண்மை உண்டு என்று எனக்கு அடிக்கடி தோன்றும்.



Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி