முழுமையின் மகிமை

முழுமையின் மகிமை

மலரும் காதல் உறவில்
தளங்கள் எத்தனை உண்டென்று யாரும் எண்ணிப் பார்த்தோமா?
இளமைப்பருவ ஈர்ப்பின் மூலம்   
இருவருக்கிடையே மலரும் உறவு
நிலைத்திருக்கும் சில காலம்,
பிரிந்தும் போகும் பல நேரம்!

உறவில் உள்ள தளங்களிலே ஈர்ப்பென்பது ஒன்றே ஒன்று!
ஒன்றை மட்டும் நம்பியிருந்தால்
நீடிக்காது உறவது என்றும்!
அறிவும் உணர்வும் கொள்கைப் பிடிப்பும்
உறக்கம் விழிப்பு உணவுப்பழக்கம்
என்பது போன்ற  தளங்கள் பலவும்
ஓரளவேனும் ஒன்றாய்ச் சேர்ந்தால்,
நிற்கும் அது நீண்ட உறவாய்!

மனிதன் வாழ்வும் இதுபோன்றே
பொருளாதாரம் வருமென்று பொழுதெல்லாம் வேலைப்பார்த்து வருமானம் எல்லாம் வந்தாலும்,
அதுவே வாழ்க்கை ஆகாது!
மனிதன் வாழ்வில் பல முகம் உண்டு
உணவும் உடையும் ஒருமுகமே!
சமூக விலங்காம் மனிதனுக்கு உறவின் பலமும் மனதின் வளமும் சேராமல்
வாழ்க்கை முழுமை அடையாது!

முழுமையடைந்த மனிதன் வாழ்வு என்றும் மாறாதிருந்திடவே,
நன்றாய் பூமி  நிலைத்தாலே
வாழ்க்கை நின்று நடக்க முடியும்!
பூமியென்பது அக்ஷ்யமல்ல
எடுக்க எடுக்க வருவதற்கு,
தேவை மட்டும் எடுத்துக்கொண்டு
அதனினும் அதிகம் திருப்பிக் கொடுத்தால்,
என்றும் பூமி வளமாய் நிற்கும்!

உறவிலுள்ள தளங்கள் போலே
வாழும் நாட்டிலும் உள்ளது இங்கே-
பூமியின் முழுமை நிலைப்பதென்பது நாட்டிற்கான அடித்தளமாகும்....
உறவு வாழ்வு பூமி என்று
எதுவாயிருந்த போதிலும்
முழுமை இருந்தால் மட்டுமே
வளமாய் நிலைக்க முடியும்!


முழுமையும் மகிழ்ச்சியும் 👇🏼

என் உறவினர் மகனிடம் அவன் தாய்  திருமணம் செய்து கொள்ளும்படி கூறிய போது கூர்மதி மிக்க அவ்விளைஞன் கூறியது சிந்திக்க வைத்தது. 'அம்மா நம் உறவினர்கள்  பெரியப்பா பெரியம்மா, அத்தை மாமா, என்று அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை, கிட்டத்தட்ட எந்நேரமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல்தான் நீயும் அப்பாவும்.... பிறகு என்னை எதற்குத் திருமணம் செய்யச் சொல்கிறாய் இதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்று கேட்டான்.
அவன் கூறியதில் நிறைய உண்மை  உள்ளது. திருமணமான ஜோடிகளில் கிட்டத்தட்ட என்னுடைய அனுமானமப்படி 85% அன்றாடம் மனஸ்தாபத்துடன், சண்டை போட்டுக்கொண்டு வேறுவழியின்றி ஒரே வீட்டில் இருப்பது போல் தோன்றுகிறது நம்மூரில். வெளிநாடுகளில் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை, நான் சென்று பார்த்ததில்லை.

இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று சில நேரங்களில் நான் யோசிக்கும் பொழுது வாழ்க்கையில் ஒன்றிரண்டை தவிர வேறுபல கோணங்கள் ஒத்துப் போகாததால் கூட இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
அன்றாட பழக்க வழக்கங்களில் வரும் வித்தியாசங்கள் தான் பெரும் சண்டையாக மாறுகிறது என எண்ணுகிறேன்.
சில நேரம் உணவு பழக்க வழக்கம் உறங்கும் நேரம்  போன்றவைகள் கூட காரணமாகலாம்.
கணவன் மனைவி என்றில்லை, ஒரே இல்லத்தில் வாழும் எந்த இரண்டு மனிதர்கள் என்றாலும் பழக்கவழக்கங்கள் ஒத்துப்போகவில்லை என்றால் கிட்டத்தட்ட அன்றாடம் சண்டைதான்.

இந்த சூழ்நிலையை தவிர்த்து ஒரு நல்ல சுமுக நிலைமை உள்ளது போல் ஒரு இல்லத்தை அமைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை எழுகிறது.
விட்டுக்கொடுத்து போகவேண்டும் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் பலமுறை நாம் கூறியுள்ளோம், கேட்டுமிருக்கிறோம். அது அவ்வளவு சுலபமா என்று தெரியவில்லை.
சம்பந்தப்பட்ட இரு நபர்கள்  பேசி உடன்பாடு போல் முடிவு செய்தால் ஒருவேளை ஒரு அளவுக்கு நிலைமை மாற வாய்ப்புள்ளது.

பள்ளி, கல்லூரி படிக்கும் காலங்களில் என் கடமை என்ன என்பதை பற்றி எனக்கு எந்தக் குழப்பமும் இருந்ததில்லை. படிப்பது ஒன்றே என் கடமை என்ற ஒரு தெளிவு இருந்தது. அது சரியா தவறா என்பது வேறு, ஆனால் என் மனதில் அதுதான் என்ற தெளிவு இருந்தது, குழப்பமில்லை. திருமணமாகி குழந்தைகள் பிறந்த பிறகு நான் மேற்படிப்பு படித்த நிறுவனத்தில் வேலையும் பார்த்துக் கொண்டிருந்த பொழுது சில நேரங்களில் என் முதற்கடமை என்ன என்பது பற்றி அதிகம் சிந்திக்கா விட்டாலும் நம் தொழிலுக்கு நாம் தர்மப்படி நியாயமாக நடப்பது பெரும் கடமை என்றெண்ணிய அளவிற்கு குடும்பத்திற்காக நேரம் நாம் செலவழிக்க வேண்டும் என்பதும்  கடமை என்ற எண்ணம் எனக்கு வந்ததில்லை. இதைத் தவறு என்று கூற முடியாது, ஆனால் முதலிலேயே இந்த இரண்டில் ஏதோ ஒன்றை நான் தேர்ந்தெடுத்து இருந்தால் சரியாக இருந்திருக்கும்.

எந்த கடமை சரி எது தவறு என்பதை விட நாம் எடுத்துக் கொண்டிருக்கும் கடமை எதுவென்றாலும் அதற்கு நாம் உண்மையாக இருக்கவேண்டும் என்பதே சரியாக  இருக்கும் என்று எண்ணுகிறேன.
குடும்பம் தொழில் என்று  இரண்டும் கையில் இருந்தால் இரண்டிற்கும் சமநோக்கு கொடுப்பது சரியாக இருக்கலாம்.

ஏதோ ஒன்றை மட்டும் நோக்கியே நம் எண்ணங்களும் செய்கைகளும் இருக்கும்பொழுது வாழ்வின் பல முகங்களை நாம் இழக்கிறோம்.
ஆனால் குழப்பம் ஏதும் இல்லாமல் அந்த ஒன்றில் நம் பணியை நாம் குறை வைக்காமல் செவ்வனே செய்தால் அதில் ஒரு மனதிருப்தியும் வாழ்வில் முழுமையும் கண்டிப்பாக வந்து சேர வாய்ப்பு இருக்கிறது.
















Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி