தாயின் துயரம்

யாரும் எனக்குத் துணை இல்லை ஊசி கொண்டு உண்டானேன் இருந்தும் குழந்தை வளர்ந்தது, நேரம் வந்ததும் பிறந்தது. பாசம் என்றால் என்னவென்று புரிந்து கொண்டேன் நானன்று பிரவாகமெடுத்த பாலைதனை பாய்ந்து குடித்தது பிஞ்சுக் குழந்தை. சட்டென யாரோ வந்தார்கள் எனது மகவைப் பிடித்தார்கள் கொண்டு சென்று கொன்றார்கள் எனது மடியில் கை வைத்து பாலைக் கறந்து கொண்டார்கள். ஐயோ..! நெஞ்சம் பதைக்கிறது துயரம் கண்ணை மறைக்கிறது எதுவும் செய்ய வழியின்றி பாலைக் கொடுத்தேன் மனிதரிடம்... நினைவில் நின்ற என் மகவை நானும் மறக்க முடியவில்லை பாலும் வற்றிப் போனதுமே மீண்டும் ஊசி வருகிறதே.... இன்று நின்றேன் லாரியினுள்ளே சோறும் தண்ணியும் எனக்கில்லை என் போல் நின்ற பலர் இங்கு வரிசையில் உள்ளார் என் முன்பு வெட்டிக் கொன்று தின்றிடவே காத்து நின்றார் மனிதரென்பார்..... கைப்பிடி சோற்றைத் தின்றதனால் நன்றி மறவா நாயதனைப் போற்றிப் புகழும் மனிதரேன் பாலைக் கொடுத்த என்னை மட்டும் வெட்டிக் கொல்லப் போகிறார்? இந்தத் தண்டனை பெற்றிடவே என்ன தவறு நான் செய்தேன்?